No menu items!

அதிமுக வழக்கு – தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

அதிமுக வழக்கு – தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

திமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனு தொடர்பாக 3 நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கோரியும், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் நடந்த பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கவும், தான் கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள உத்தரவிடக் கோரியும் பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால மனு மீது பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், தயவு செய்து பதிலளிக்க காலதாமதம் செய்யாதீர்கள் என தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், அதிமுக வழக்கில் பழனிசாமி தரப்பின் எதிர்மனுதாரர்கள் 3 நாள்களில் பதில் அளிக்கவும், இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட ஏதுவாக இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார் பழனிசாமி. அந்த இடைக்கால மனு மீது மட்டுமே தற்போது விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஹிண்டன்பர்க் அறிக்கை போலியானது – அதானி குழுமம்

அதானி குழுமம் பற்றிய ஹிண்டன்பர்க் அறிக்கை முற்றிலும் போலியானது. அது நிறுவனத்தின் உரிமைப் பங்குகளை குறிவைத்து நடத்தப்பட்ட இழிவான தாக்குதல் என்று அதானி குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் ஜுகேஷிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜுகேஷிந்தர் சிங் அளித்துள்ள பேட்டியில், “ஹிண்டன்பர்க் நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு 413 பக்கங்களில் நாங்கள் விளக்கமளித்துள்ளோம். உள்நோக்கத்துடன், போலி சந்தையை உருவாக்கவே அந்த அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளது. அவர்கள் எழுப்பிய 88 கேள்விகளுக்கு நாங்கள் பதில் அளித்துவிட்டோம். அந்தக் கேள்விகளில் இருந்தே அவர்கள் எங்கள் நிறுவனங்களைப் பற்றி எந்த ஆழமான ஆராய்ச்சியும் செய்யாமலேயே குற்றஞ்சாட்டியுள்ளனர் என்பது தெரிகிறது. அவர்கள் எங்கிருந்தோ சில தகவல்களை வெட்டி, ஒட்டி அறிக்கையாக வெளியிட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். இது எங்களின் எஃப்பிஓ எனப்படும் உரிமைப் பங்குகள் மீதான தாக்குதல்” என்றார்.

மகாத்மா காந்தி படத்துக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை

76-வது நினைவு தினத்தையொட்டி மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு கவர்னர், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். மேலும், சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி, காந்திய இசைப்பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை விரைந்து இணைக்க வேண்டும் – அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள், அதை விரைந்து இணைக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று மாலை வரை 2.34 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இது மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி & விவசாய இணைப்புகளில் 87.44% ஆகும். இதுவரை இணைத்திடாதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...