No menu items!

கொஞ்சம் கேளுங்கள் – கவர்னரின் பொருந்தா தொப்பி

கொஞ்சம் கேளுங்கள் – கவர்னரின் பொருந்தா தொப்பி

சென்னை மெரினா  கடற்கரையில் தேசியக் கோடியை ஏற்ற டிப் டாப் ஆக கவர்னர் ரவி வந்தபோது அவர் முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. வெள்ளைக்கார துரைமார்கள் போல ஹேட் – தொப்பி அணிந்து வந்திருந்ததால் நிழல் படிந்து அவர் முகத்தை மறைத்தது.

அங்கே டெல்லியில் பிரதமர் மோடி வண்ணமயமான டர்பன் அணிந்து வந்தார்.

17 ஆண்டுகள் நாடாண்ட பிரதமர் நேரு வெண்ணிற கதராடையில் காந்தி குல்லாய் அணிந்து டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றியதை மக்கள் நினைத்துப் பார்க்கலாம்.

முதல் இந்திய கவர்னர் ஜெனராலாக இருந்த ராஜாஜி விசேஷ ஆடை எதும் அணியாமல்தான் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் உலா வந்தார்.

ஒரு சுவையான சம்பவம்

சுதந்திர தினத்தையொட்டி  கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி அந்த மாளிகையில் ஒரு விருந்து வைத்தார். சின்ன அண்ணாமலை அதைப்பற்றி எழுதியிருக்கிறார்.

கீழே தரையில் பாய் விரித்து வரிசையாக வாழை இலையில்தான் உணவு பரிமாறப்பட்டது! எல்லோரும் தரையில் அமர்ந்து சாப்பிட்ட  முதலும் கடைசியுமான விருந்து அதுதான்.

ராஜாஜி, டி.கே.சி., கல்கி,  வள்ளல் அழகப்ப செட்டியார்…  இப்படி சின்ன அண்ணாமலை உள்பட தமிழ் பெருமக்கள்.

மவுண்ட்பேட்டன் என்ற பட்டப் பெயர் பெற்ற புகழ்பெற்ற தமிழ்நாட்டு சமையல் கலைஞரின் கைவண்ணம்.  சுடச்சுட ரசம் வந்தது. டி.கே.சி – ரசிகமணி அல்லவா! ஒரு கிண்ணத்தில் ரசத்தை வாங்கி உறிஞ்சிக் குடித்தார். ‘உர்’ என்று அந்த ரசத்தை எல்லோரும் உறிஞ்சும் சத்தம். “இங்கே கேட்கும் இந்த  ‘உர்’ என்ற ரசத்தை உறிஞ்சும் சத்தம்தான் நமக்கு பூரண சுதந்திரம் வந்து விட்டது என்பதை காட்டுகிறது.” என்று சொன்னார் ராஜாஜி!

தமிழ் மக்கள் சந்தித்திருக்கிற தலைவர்களும் அறிஞர்களும் சாதாரணமானவர்கள் அல்ல. தமிழர் மனதில் அழுத்தம் திருத்தமாக முத்திரை பதித்திருக்கிறார்கள். விதவிதமான அறிவுக் கதவுகளை திறந்து வைத்துவிட்டு போயிருக்கிறார்கள். தமிழர் சிந்தனையை செம்மையாக்கி எதையும் எடை போட கற்றுத் தந்திருக்கிறார்கள். தமிழர் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட  பாடங்கள். அரசியல் முதல் ஆன்மிகம் வரை! அதனால்தான் நம் கவர்னர் தமிழ்நாடு பற்றிப் பேசியதை யாரும் ஏற்க்கவில்லை.

கவர்னர் என்பவர் “வந்து போகிறவர்”. பதவியில் இருக்கிற சில ஆண்டுகளில் மாநில மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்வது முடியாத  காரியம். நம் கவர்னர் இப்போதுதான் ‘அ – ஆடு, இ – இலை’ என்று தமிழ் படிக்கிறார். தமிழகம் – தமிழ்நாடு இந்த இரண்டுக்கும் உள்ள பொருள் வேறுபாடு என்னவென்று கண்டுபிடிக்க முடியுமா அதற்குள்!

பாரதி உட்பட இங்குள்ள பெரும் தமிழறிஞர்கள்  ரசித்து அழைத்த பெயர். அறிஞர் அண்ணா.  டாக்டர்கள் தடுத்தும் விழாவிற்கு வந்து உயிரை கையில் பிடித்துகொண்டு வைத்த பெயர் – தமிழ்நாடு.

மாபெரும் இயக்கமாக வளர்ந்த திமுகழகம், தனது பிரிவினை கொள்கையை கைவிடுவது எளிதாக இருந்தது என்றால், தடைச் சட்டம் மட்டும் காரணம் அல்ல. தமிழ் மக்கள் அடிப்படையில் ஒற்றுமையை நேசிப்பவர்கள். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற குரல் வேறு எங்கே ஒலித்திருக்கிறது. அன்றைய திராவிட இயக்க தலைவர்களின் உண்மை நோக்கம், தெற்கின் வளர்ச்சி – தமிழர்களின் எழுச்சி, என்பதை புரிந்துகொண்டதால் ஆட்சியில் அமர்த்தினார்கள்.

கவர்னர் “தமிழ் வாழ்க” என்று பிராயச்சித்த(?) முழக்கமிட்டு குடியரசு விழாவிற்கு இன்முகத்துடன் முதலமைச்சரை வரவேற்றுவிட்டார்! உறவுக்கு இது திருப்புமுனையா  என்பது இன்னமும்  கேள்விகுறியே!

தமிழை படிப்பதற்கு முன்பு  தமிழ் தலைவர்கள் அறிஞர்கள் பற்றி கவர்னர் படித்தாலே போதும். தமிழர்களை புரிந்துகொண்டு விடலாம். தமிழ்நாட்டு உணர்வுகளையும் அறிந்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...