அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால், கடந்த ஜூன் 14-ம் தேதி கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது சிறையில் இருக்கிறார். இந்த நிலையில், புழல் சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
உடல் நலக்குறைவால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு உள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று அந்த மனுவில் செந்தில்பாலாஜி குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு, இன்று விசாரணைக்கு வந்தபோது, `மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது. செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் சாட்சியைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது’ எனக் கூறி ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். மேலும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கைது செய்யப்பட வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இணையத்தில் கசிந்த லியோ படக் காட்சிகள்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா என மற்ற மாநிலங்களில் காலை 4 மணிக்கு 5 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில் தமிழகத்தில் காலை 9 மணிக்கு இத்திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் லியோ படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியானது. பதிவேற்றம் செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இன்னும் 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை
தென்மேற்கு பருவக்காற்று விலகியதால் இன்னும் 72 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறும்போது, “தென்மேற்கு பருவமழை இன்றுடன் நிறைவடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை அடுத்த 3 தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் தொடங்கும். வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் சற்று வலுவிழந்து காணப்படும். அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. வங்கக்கடல் பகுதிகளில் வரும் 21ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது” என்றார்
ஹமாஸ் அமைப்பின் முக்கிய பெண் தலைவர் கொலை
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் முதல் பெண் தலைவர் ஜமிலா அப்துல்லா தாஹா அல் சான்டி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜமிலா அப்துல்லா பாலஸ்தீன சட்ட சபையின் உறுப்பினர் ஆவார். அதுமட்டுமல்லாமல் ஹமாஸின் முக்கியத் தலைவரான அப்தெல் அஜிஸ் அல்-ரான்டிசியின் மனைவியும் ஆவார். ஹமாஸ் வானொலியை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.