No menu items!

எம்.ஜி.ஆர். மரணம் – வெளியே நின்ற ஜெயலலிதா

எம்.ஜி.ஆர். மரணம் – வெளியே நின்ற ஜெயலலிதா

1987 டிசம்பர் 24… தமிழ்நாடு அரசியலில் ஒரு திருப்புமுனை நாள். தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வென்று பத்தாண்டுகளுக்கு மேல் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். மரணமடைந்த நாள். அன்று இரவு எம்.ஜி.ஆரின் இல்லமான ராமாவரம் தோட்டத்தில் என்ன நடந்தது என்பது இன்று வரை மர்மம்தான். இந்நிலையில், அன்று ராமாவரம் தோட்டத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த முன்னாள் காவல்துறை அதிகாரி என். தாமோதரன் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு இந்த அளித்த பேட்டியில் பல தகவல்கள் முதன்முறையாக பகிர்கிறார்.

முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

எம்.ஜி.ஆர். மறைந்த போது நீங்கள் ராமாவரம் தோட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்திருக்கிறீர்கள். அப்போது கலைஞரைத் தொடர்ந்து ராமாவரம் தோட்டத்துக்கு ஜெயலலிதா வந்ததாகவும் அவரை உள்ளே விடவில்லை என்றும் செய்திகள் வந்தன. என்ன நடந்தது?

கலைஞர் போய் சிறிது நேரத்திலேயே ஜெயலலிதா ஒரு கண்டசா காரில் வந்து இறங்கினார். ராமாவரம் தோட்டம் கேட் மூடியிருந்தது. கதவை தட்டப் போனார். நான்தான் அப்போதும் அவருடனும் சென்று பேசினேன். ‘அம்மா உள்ளே போக முடியாது’ என்று சொன்னேன். ‘ஏன் இன்ஸ்பெக்டர்?’ என்று கேட்டார். ‘இல்லம்மா, கதவை திறக்க மாட்டாங்க’ என்றேன். ஆனால், அவர் போய் கேட்டை தட்டினார். எவ்வளவோ தட்டிப் பார்த்தார். கதவை யாரும் திறக்கவில்லை. பிறகு காருக்கு திரும்பி வந்து காரில் ஏறி உட்கார்ந்தார். கார் புறப்படவில்லை.

ஜெயலலிதா, ராமாவரம் தோட்டத்தில் அதிக நேரம் காத்திருந்து திரும்பிச் சென்றாரா?

இல்லை, காத்திருந்தார். நேரம் நகர்ந்துகொண்டு இருந்தது. எம்.ஜி.ஆர். உடல் ஸ்டாண்டர்ட் வண்டியில் ராமாவரம் தோட்டத்தில் இருந்து புறப்பட்டது. அந்த வண்டியின் முன்னால் எங்கள் எஸ்.பி. உட்கார்ந்திருந்தார். என்னை அழைத்தார். அவருடைய சைரன் காரை என்னிடம் கொடுத்து, ‘எம்.ஜி.ஆர். உடல் இருக்கும் வண்டியை பின்தொடர்ந்து வாங்க. இரண்டாவது வண்டியாக நம் வண்டிதான் இருக்க வேண்டும். இடையில் எந்த வண்டியும் நுழைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றார். அதன்படி பின்னாலேயே போனோம்.

ஆனால், கொஞ்ச நேரத்தில் வேகமாக வந்த ஜெயலலிதா கார் எங்கள் வண்டியை முந்தி இடையில் நுழைய முயற்சித்தது. எஸ்.பி. யாரையும் விடக்கூடாது என சொல்லியிருந்ததால் நாங்கள் அவரை இடையில் நுழைய விடவில்லை. ஆனால், அவர் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருந்தார். எனவே, எஸ்பியிடம் மைக்கில், “சார் ரொம்ப வயலண்டாக நுழைய பார்க்கிறாங்க. எதுவும் ஆகிவிடக்கூடாது. நான் அவர்களை விட்டுவிடுகிறேன்’ என்று சொன்னேன்.

எங்களை முந்தி எம்.ஜி.ஆர். உடல் இருந்த வண்டியை தொடர்ந்து இரண்டாவது வண்டியாக உள்ளே நுழைந்த ஜெயலலிதா அப்படியே ராஜாஜி ஹால் போவது வரை தொடர்ந்து வந்தார். ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். உடல் தலைமாட்டில் போய் உட்கார்ந்துகொண்டார். ஜானகி அம்மா அப்போது வரவில்லை. பிறகு அவர் வந்து இன்னொரு பக்கமாக உட்கார்ந்தார்.

ஆனால், அதன்பிறகு இடையில் ஜெயலலிதா காணாமல் போய்விட்டார். ஏன், என்ன நடந்தது?

கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்துகொண்டே இருந்தது. காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தது. அப்போது ஐஜி ஸ்ரீபால் எங்கள் எஸ்பியை அழைத்தார். ‘ஜெயலலிதா வீட்டுக்குப் போகணும். ரெப்ரஸ் செய்யணும் என்று சொல்கிறார். உடனே இரண்டு போலீஸை அவருக்கு பாதுகாப்பாக அனுப்பி, அவர் போயஸ்கார்டன் போய் வர ஏற்பாடு செய்யுங்க’ என்றார். எங்கள் எஸ்.பி. உடனே என்னையும் அப்போது கோடம்பாக்கம் இன்ஸ்பெக்டராக இருந்த ராமகிருஷ்ணனையும் கூப்பிட்டு, ஜெயலலிதாவுடன் போயஸ்கார்டன் போய்வரச் சொன்னார்.

போயஸ்கார்டன் சென்ற பின்னர், வீட்டுக்கு முன்னால் கால் கழுவிவிட்டு, ஜெயலலிதா உள்ளே சென்றார். அப்போது என்னைக் கூப்பிட்டு, ‘இன்ஸ்பெக்டர் உள்ளே வந்து காப்பி சாப்பிடுங்க. 10 நிமிடங்களில் ரெடியாகி வந்துவிடுகிறேன்’ என்றார்.

நான், ‘அம்மா இப்போதே கூட்டம் ரொம்ப வந்துவிட்டது. நேரமானால் திரும்ப நம்மால் உள்ளே செல்ல முடியாது. எனவே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாங்க’ என்றேன். ‘சரிங்க இன்ஸ்பெக்டர்’ என்று உள்ளே போனார்.

சொன்ன மாதிரி 5 – 10 நிமிடங்களில் வந்துவிட்டார். நாங்கள் திரும்ப ராஜாஜி ஹால் போய் சேர்ந்தபோது எதிர்பார்த்த மாதிரியே கூட்டம் அதிகமாகிவிட்டது. எனவே, முதலில் உட்கார்ந்த இடத்திற்கு ஜெயலலிதாவால் போக முடியவில்லை.

ராஜாஜி ஹாலில் இருந்து அடக்கத்துக்காக புறப்பட்ட போது எம்.ஜி.ஆர். உடல் இருந்த வண்டியில் ஜெயலலிதா ஏற முயன்றார். ஆனால், முடியவில்லை. அப்போது பின்னால் சினிமா நட்சத்திரங்கள் இருந்த வண்டி நின்றது. அதில் இருந்த சரோஜா தேவி, ‘அம்மு இங்கே வா’ என்று ஜெயலலிதாவை அழைத்தார். ஆனால், ஜெயலலிதா அந்த வண்டிக்கு போகவில்லை.

அதன்பிறகுதான் ஜெயலலிதா காணாமல் போனார். எங்கே போனார் என்று எனக்கு தெரியாது.

ஜெயலலிதா ராமாவரம் தோட்டத்தில் உள்ளே போகமுடியாமல் காத்திருந்தார் என்று சொன்னீர்கள். அப்போது அவருடன் வேறு யாரும் வந்திருந்தார்களா?

நீங்கள் யாரைக் கேட்கிறீர்கள் என்று தெரிகிறது. நான் கவனிக்கவில்லை. மேலும் அப்போது அவர் (சசிகலா) அவ்வளவு பிரபலமும் இல்லை. எனவே, இருந்திருந்தாலும் தெரிந்திருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...