முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து அதிமுக தலைவர்கள் மரியாதை செய்தனர்.
அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு அக்கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை குறிப்பிடும் வகையில் 106 கிலோ பிரமாண்ட கேக்கும் வெட்டப்பட்டது. அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கோகுலஇந்திரா, வளர்மதி, பொன்னையன் மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் சத்யா, அசோக், கே.பி.கந்தன், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் இ.சி.சேகர், வக்கீல் சதாசிவம், பெரும்பாக்கம் ராஜசேகர், டாக்டர் சுனில், முகப்பேர் இளஞ்செழியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வி.எஸ்.பாபு, ஈஸ்வரன், சைதை கடும்பாடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் எதிரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், வெல்ல மண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகரன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணை செயலாளர் மங்காராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி
பாலமேடு மற்றும் சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளின்போது, எதிர்பாராதவிதமாக உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மதுரை மாவட்டம், பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மதுரை மாவட்டம், பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் அரவிந்தராஜ் (24) என்பவரும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், நவல்பட்டு பகுதி சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த புதுக்கோட்டை மாவட்டம், களமாவூர் கிராமம், கண்ணகோன்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் அரவிந்த் (25) என்பவரும் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை கேட்டு மிகவும் வேதனை உற்றேன்.
இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை மது விற்பனை ரூ.800 கோடியை தாண்டியது
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை நாட்களான சனி, ஞாயிறுக்கிழமைகளில் வந்ததால் வழக்கமான வார இறுதியில் நடைபெறும் விற்பனையும் சேர்ந்து அதிகரித்தது.
வழக்கமாக தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை ரூ.450 கோடியை தாண்டி இருக்கலாம் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை ரூ.250 கோடி அளவிலும், வெள்ளிக்கிழமை ரூ.150 கோடி அளவிலும் மதுபாட்டில்கள் விற்பனை நடந்து இருக்க கூடும் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இன்றும் 2 மடங்கு மது விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று இரவுக்குள் பொங்கல் விற்பனை 1000 கோடி ரூபாயை எட்ட வாய்ப்புள்ளது.
அமைச்சர் பொன்முடி சகோதரர் மறைவு – முதல்வர் இரங்கல்
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரரும், பிரபல சிறுநீரக மருத்துவருமான க.தியாகராஜன் (66) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள மரகதம் மருத்துவமனையில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தனது சகோதரர் உடலுக்கு அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
க.தியாகராஜன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் க.பொன்முடியின் சகோதரர் க.தியாகராஜன் மறைவெய்தினார் என்ற செய்தியால் மிகவும் வேதனையுற்றேன். உடன்பிற்ந்த தம்பியை இழந்து தவிக்கும் பொன்முடிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் கூறிக்கொண்டு அவர்கள் துயரில் பங்கெடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.