No menu items!

பாஜகவுக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் மு.க. ஸ்டாலின்

பாஜகவுக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் மு.க. ஸ்டாலின்

பாரதிய ஜனதா ஆட்சியில் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு கூறி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது சமூக நீதியை முன்னெடுத்து செல்வது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். இதற்காக பாஜக அல்லாத மற்ற அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து காணொலி வாயிலாக (இணையவழி) விவாதிக்க உள்ளார். இதற்கான கூட்டம் வருகிற 3-ந்தேதி (திங்கள்) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த இணைய வழி கூட்டத்தில் சென்னையில் இருந்தபடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இதில் டெல்லியில் இருந்தபடி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பாரதிய ராஷ்டிரிய சமீதி மூத்த தலைவர் கேசவராவ், ஆம்ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன், தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

காங்கிரஸ் கட்சிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி-க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பாஜகவுக்கு எதிரான அணியில் இணையாத ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து சஸ்மித் பாத்ரா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இருந்து சுரேஷ் ஆகியோரும் இந்த காணொலி காட்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீட்டு வழக்கு ஏப். 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக, பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்தனர். இதில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு மட்டும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரது மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணைக்கு வரவில்லை. இதுகுறித்து நீதிபதிகளிடம், அவர்களது வக்கீல்கள் முறையிட்டனர். இதையடுத்து அனைத்து வழக்குளையும், இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி, அதிமுக வழக்கில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை இரு நீதிபதிகள் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ராமநவமி விழாவில் கோயில் கிணறு இடிந்து 35 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், படேல் நகரில் பழமையான பாலேஷ்வர் மகாதேவ் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுமார் 40 அடி ஆழமுள்ள பழங்கால கிணறு உள்ளது. கான்கிரீட் சிலாப் கொண்டு இந்த கிணறு மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று ராமநவமியை முன்னிட்டு இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கிணற்றின் கான்கிரீட் சிலாப் மீது அதிக பக்தர்கள் ஏறியதால் பாரம் தாங்காமல் சிலாப் மற்றும் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால், பக்தர்கள் கிணற்றில் விழுந்து, இடிபாடுகளில் சிக்கினர்.

இது குறித்து இந்தூர் மாவட்ட ஆட்சியர் டி.இளையராஜா கூறுகையில், “இந்த விபத்தில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். ஒருவரைக் காணவில்லை. 14 பேரை உயிருடன் மீட்டுள்ளோம். இவர்களில் சிகிச்சை முடிந்து 2 பேர் பத்திரமாக வீடு சென்றடைந்தனர். காணாமல் போன நபரைத் தேடும் பணி நடந்து வருகிறது. நேற்று மதியம் 12.30 மணிக்கு தொடங்கிய மீட்புப் பணி தொடர்கிறது “என்றார்.

மதுரை காமராஜர் பல்கலை. விடுதி மாடியில் இருந்து விழுந்து மாணவி பலி

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (M.Ed) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதனைக் கண்ட நண்பர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு வந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த மாணவி அருகே செல்போன் இருந்ததால் செல்போனில் பேசிக்கொண்டே தவறி விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...