No menu items!

அண்ணாமலைக்கு அமித்ஷா அட்வைஸ்

அண்ணாமலைக்கு அமித்ஷா அட்வைஸ்

சிஎஸ்கேவின் மஞ்சள் நிற ஜெர்ஸியை அணிந்துகொண்டு ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“ஐபிஎல் கொண்டாட்டமா? அடுத்த 2 மாசத்துக்கு உன் பாடு ஜாலிதான். ஆனா கிரிக்கெட் குஷியில அரசியலை விட்டுடாதே?”

“விளையாட்டுக்காக வேலையை பார்க்காம இருக்கற குணம் எனக்கு இல்லை. உங்களுக்காக டெல்லிலருந்து நியூஸ் பிடிச்சுட்டு வந்திருக்கேன்”

“அமித் ஷா சொன்ன அதிமுக மேட்டரா?”

“தமிழ்நாட்ல அதிமுக கூட்டணியை இழக்கிறதுக்கு பாஜக தயாரா இல்ல. அது தமிழ்நாட்டுக்காக மட்டுமில்லை. இந்தியா முழுக்க ஒரு கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கும்போது பாஜக கூட்டணி உடையறது வெளிலருந்து பார்க்கிறவங்களுக்கு தப்பா தெரியும்னு டெல்லி பாஜக முடிவு பண்ணிருக்காங்க. கூட இருக்கற சில கூட்டணி கட்சிகளையும் விட்டுடக் கூடாதுன்னு அவங்க நினைக்கறாங்க.”

”கரெக்ட்தான். அப்போ அண்ணாமலை பேசுனது?”

”இருங்க விஷயத்துக்கு வரேன். எடப்பாடி பழனிசாமிக்குதான் அதிமுகவுல ஆதரவு அதிகமா இருக்கு. அது மட்டுமில்லாம துணிச்சலா நிக்கிறார். இது மாதிரி ஒரு தலைவர் நம்ம கூட இருந்தாதான் திமுககூட போட்டிப் போட முடியும்னு அண்ணாமலைக்கு அமித்ஷா அட்வைஸ் பண்ணியிருக்கிறார். கூட்டணி தொடர்பா அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பிரச்சினை வந்தப்ப எடப்பாடிகிட்ட அமித்ஷா போன்ல பேசியிருக்கிறார். நாங்க உங்க கூடதான் இருப்போம்னு உறுதி கொடுத்திருக்கிறதாகவும் தகவல் இருக்கு. அண்ணாமலை பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க. நாங்க உங்களை கைவிட மாட்டோம்னு சொன்னாராம். அடுத்த வாரம் எடப்பாடி பழனிசாமி டெல்லி போறார். பிரதமர் மோடியையும் அமித் ஷாவையும் சந்திக்கிறார். அந்த சந்திப்புக்குப் பிறகு அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிடும்”

“அப்ப அண்ணாமலையோட நிலைமை?”

“இப்போதைக்கு அவரை கர்நாடக மாநில தேர்தல் விஷயத்துல கவனம் செலுத்த சொல்லி இருக்காங்க. அந்த மாநிலத் தேர்தலோட முடிவை வச்சுத்தான் அண்ணாமலையோட எதிர்காலம் இருக்கும்னு கமலாலயத்துல பேசிக்கிறாங்க. ஆனா கருத்துக் கணிப்புல காங்கிரஸ் கட்சி பலமா இருக்கறதால, இந்த முடிவு அண்ணாமலைக்கு பாதகமா இருக்கும்கிறது அவரோட எதிர்ப்பாளர்களோட கணிப்பு. இருக்கணும்னே சிலர் வேண்டிக்கிறாங்களாம்”

“ஏப்ரல் 14-ம் தேதி திமுக அமைச்சர்களோட ஊழல் பட்டியலை வெளியிடுவேன்னு அண்ணாமலை சொல்லி இருக்காரே.”

“திமுக தலைமை இதுபத்தி ஏதும் கண்டுக்கறதா இல்லை. இதுக்கு முன்னகூட ஒவ்வொரு மாசமும் ஒரு அமைச்சரோட ஊழல் பட்டியலை வெளியிடுவேன்னு அண்ணாமலை சொல்லி இருக்கார். ஆனா அப்படி ஏதும் நடக்கலை. அதுமாதிரிதான் இதுவும் பிசுபிசுத்துப் போயிடும்னு அவங்க நினைக்கறாங்க. திமுககாரங்களுக்கு இன்னொரு தைரியமும் இருக்கு”

“என்ன தைரியம்?”

‘ஆருத்ரா நிதி மோசடி வழக்குல அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள் சிக்கியிருக்காங்க. அந்த விசாரணை அண்ணாமலை வரை போகும்னு சொல்றாங்க. அந்த சிக்கல் இருக்கிறதுனால அண்ணாமலை அடக்கி வாசிப்பார்னு ஒரு பேச்சு இருக்கு”

“பாஜக பச்சைக் கொடி காட்டினாலும் இன்னும் ஓபிஎஸ்ஸோட வழக்குகள் எடப்பாடிக்கு முட்டுக்கட்டையா இருக்கே?”

“அதைப்பத்தியெல்லாம் கவலைப்பட வேண்டாம்கிற மனநிலையில எடப்பாடி இருக்காரு. அவர் எந்த கோர்ட்டுக்கு வேணும்னாலும் போகட்டும், பிரச்சினையில்லை. வழக்கு விஷயங்களையெல்லாம் சி.வி.சண்முகம் கவனிச்சுப்பார். நாம கவலைப்பட வேண்டாம். இப்போதைக்கு உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கறதுலயும், பாராளுமன்றத் தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கறதுலயும் கவனம் செலுத்துங்கன்னு மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்கிட்ட எடப்பாடி சொல்லி இருக்கார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்ன பெரிய அளவுல மாநாடு நடத்தவும் திட்டமிட்டு இருக்கார். திருச்சி, மதுரை, சேலம், கோவை அல்லது சென்னையில இந்த மாநாடு நடக்கும்னு சொல்றாங்க.”

“திட்டம் போட்டுத்தான் அடியெடுத்து வைக்கறார் போல”

“எடப்பாடி பொதுச் செயலாளரானதுக்கு வாழ்த்து சொன்னவங்களோட பட்டியலை செய்திக் குறிப்பா ஊடகங்களுக்கு அனுப்பி இருக்கு அதிமுக. இதன்மூலம் தோழமைக் கட்சிகள் தங்களோடதான் இருக்காங்கன்னு அவங்க உறுதிப்படுத்தி இருக்காங்க. ஒரு விஷயம் கவனிச்சிங்களா?”

“என்னது”

“போன தடவை எடப்பாடிக்கு ஆதரவா கோர்ட் தீர்ப்பு வந்தபோது எடப்பாடியை திருமாவளவன் ஆளுமை மிக்கத் தலைவர்னு புகந்திருந்தார். ஆனா இந்தத் தடவை அவர் அப்படி எதுவும் சொல்லல. அதனால அவர் திமுக கூட்டணிலதான் இருக்கப் போறார்னு தெரியுது” சிரித்தாள் ரகசியா.

“நாடாளுமன்ற வளாகத்துல கார்த்தி சிதம்பரத்தை ராகுல் காந்தி கண்டுக்காம போனது வைரலாகியிருக்கிறதே. என்ன நடந்தது?”

”கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தல்ல போட்டி போட்டபோதே ராகுல் காந்திக்கும் அவருக்கும் சிக்கல் இருந்தது. அவருக்கு சீட் கொடுக்கக் கூடாதுனு ராகுல் சொல்லியிருந்தார். ஆனா சோனியாகிட்ட பேசி சீட் வாங்கிட்டாங்க. அப்பலருந்தே கார்த்தி மேல ராகுலுக்கு கசப்பு உண்டு. அது மட்டுமில்லாம முக்கியமான பிரச்சினைகள் போது ட்விட்டர்ல கார்த்தி சம்பந்தமில்லாம ஏதாவது பதிவு செய்வார். அது காங்கிரசை கிண்டலடிக்கிற மாதிரி இருக்கும். போன தடவை ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வந்தப்போ காங்கிரஸ் தோத்துக்கிட்டு இருந்தது. இவர் அதுக்கு சம்பந்தமே இல்லாம நெட்ஃப்ளிக்ஸ்ல என்ன படம் பார்க்கலாம்னு கேட்டிருந்தார். அப்பவே காங்கிரஸ்ல எல்லோரும் கடுப்பாய்ட்டாங்க. இப்ப ராகுல் பதவி நீக்கம் செய்த போது இவர் வேர்ட்ல் புதிர் போட்டுக்கிட்டு இருக்கிற மாதிரி ட்வீட் பண்ணியிருந்தார். இதுல காங்கிரஸ்காரங்க இன்னும் கடுப்பாய்ட்டாங்க. அதை ராகுல் காந்திகிட்ட போட்டுக் கொடுத்திருக்காங்க. அதான் ராகுல் கடுப்புக்கு காரணம்”

”ஓஹோ..”

“அதுமட்டுமில்லாம… காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தங்களுக்கு வேண்டப்பட்டவரான கார்கேவுக்கு ஆதரவு கொடுக்காம சசி தரூர் பக்கம் கார்த்தி சிதம்பரம் நின்னதும் இதுக்கு ஒரு காரணமா இருக்கலாம். கார்த்தி மட்டுமில்லை. சிதம்பரத்தையும் அவங்களுக்கு பிடிக்கலை. ராகுல் காந்தி கைது விஷயத்தில் டெல்லி மேலிடம் ப.சிதம்பரம்கிட்ட காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை ஏதும் கேட்கல.”

“ராகுல் தகுதி நீக்கத்துக்கு காங்கிரஸ் என்ன பண்ணப் போகுது?”

“இப்போதைக்கு அப்பீல் பண்ண வேண்டாம்னு நினைக்கிறாங்க. அதே மாதிரி வீட்டை காலி பண்ணனும்னு சொன்னதையும் உடனே ராகுல் ஏத்துக்கிட்டாரு. இதெல்லாம் காங்கிரசுக்கு அனுதாபத்தை தரும்னு காங்கிரஸ்காரங்க நினைக்கிறாங்க. மேல் முறையீடு பற்றி அப்புறம் யோசிப்போம் என்று மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் யோசனை சொல்லி இருக்கிறாராம். ராகுலும் அதை ஏத்துட்டு இருக்காராம்.”

“சட்டசபை கூட்டம் நடக்குதே… கோட்டைக்கு போயிருந்தியா?”

“இந்த கூட்டத் தொடரில் ஆளுங்கட்சி அமைச்சர், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர், தோழமைக் கட்சி உறுப்பினர், எதிர்க்கட்சி உறுப்பினர்னு பாரபட்சம் பார்க்காம சட்டமன்ற விதிகளுக்கு புறம்பா யார் பேசினாலும் அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கிடறார் சபாநாயகர் அப்பாவு. ராகுல் காந்தி தகுதி நீக்கம் பத்தி பேசின காங்கிரஸ் உறுப்பினர் மோடியைப் பத்தி தரக்குறைவா பேச, உடனே அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி இருக்கார். இதைக் கண்டிச்சு காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்புகூட செஞ்சிருக்காங்க. ஆனாலும் தன்னோட தீர்ப்புல சபாநாயகர் உறுதியா நின்னிருக்கார். இதேபோல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குறுக்கிடறதையும் கண்டிச்சு அவங்களை உட்கார வச்சிருக்கார். இந்த நடவடிக்கைகளை முதல்வர் பாராட்டிருக்கிறார். இந்தக் கூட்டத் தொடர்ல முக்கியமான அமைச்சர் ஒருவர் கலந்துக்கலன்றதுதான் கோட்டைல பரபரப்பா இருக்கு”

“யார் அது?”

“பால் வளத்துறை அமைச்சர் நாசர். இதுவரை கூட்டத் தொடருக்கு வரல”

“அவருக்குதான் ஆவின்ல ஏகப்பட்ட பிரச்சினை போய்கிட்டு இருக்கே”

“ஆமாம். சென்னைல பால் சரியா கிடைக்கமாட்டேங்குதுனு முதல்வர்கிட்டயே பலர் புகார் சொல்லியிருக்காங்க. முதல்வர் டென்ஷன் ஆகியிருக்கிறார். ஏற்கனவே அவர் மேல நிறைய புகார்கள் இருக்கு. பிரச்சினையெல்லாம் தீர்த்துட்டு வாங்கனு அமைச்சருக்கு அறிவுரை சொல்லியிருக்காங்களாம்”

“அவர் நீக்கப்படுவார்னு வேற சொல்றாங்க!”

”அதுக்குதான் சமாளிக்க ஏதாவது ரூட் தேடிக்கிட்டு இருக்கிறார்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...