No menu items!

கேட்டதை கொடுக்கும் குரங்கனி கோவில் – ஓபிஎஸ்க்கு கொடுத்ததா?

கேட்டதை கொடுக்கும் குரங்கனி கோவில் – ஓபிஎஸ்க்கு கொடுத்ததா?

தேனி கண்ணன்


தேனிக்கு அடுத்து உள்ள போடிநாயக்கனூர் குரங்கனி மலைப்பகுதியில் அடர்ந்த வனத்திற்குள் அருள் பொங்க காட்சியளிக்கிறார் சிவன், லிங்க ரூபமாக கதராடை தரித்து விளக்கு ஒளியில் தகதகத்து ஜொலிக்கும் சிவனைப் பார்க்கவே மெய் சிலிர்க்கிறது.

13ம் நூற்றாண்டில் சுயம்புவாக தோன்றியதாக அறியப்படும் இந்த சிவனை சித்தர்கள் வணங்கி வந்தனர். பிறகு பாண்டிய மன்னருக்கு தகவல் தெரிந்து அவரும் வணங்கி வந்ததாக கல்வெட்டு தகவல்கள் மூலம் அறியலாம். பல்வேறு படையெடுப்புகளுக்குப் பிறகு கோவில் அடர்ந்த வனத்திற்குள் மறைந்து போனது. கோவிலின் சிறப்பே மேல் விதானமோ, கோபுரமோ இந்தக் கோவிலுக்கு கிடையாது என்பதுதான். பாண்டிய ,மன்னர் கோவிலை கட்டுமானம் செய்து திருப்பணிகளை தொடங்கும்போது சித்தர்கள் சிலர் அதைத் தடுத்ததாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு கோவில் சித்தர்கள் பொறுப்பிலேயே விடப்பட்டது.

காலப் போக்கில் கோவிலை சுற்றி மரங்கள் வளர்ந்து புதர் மண்டிப்போய் கோவில் மறைந்து போனது. பிற்காலத்தில் போடிநாயக்கனூர் ஜமீனுக்கு அவர்கள் மூதாதையர்கள் கனவில் சிவன் தோன்றி கோவிலை எடுத்தாள உத்தரவு கிடைத்திருக்கிறது. அன்று முதல் கோவிலை அடர்ந்த வனத்திற்குள் தேடும் பணியில் இறங்கினார் போடி ஜமீந்தார். அவருக்கு இந்த உத்தரவு கிடைப்பதற்கு முன் இந்த சிவனை ஐந்து தலை நாகம் ஒன்று காவல் காத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சித்தர்கள், துறவிகள் உதவியுடன் போடி ஜமீன் ஸ்ரீ கயிலாய கீழச்சொக்கநாதரை கண்டடைந்தார். உரிய முறையில் மூன்று கால பூஜை புனஸ்காரங்களை செய்து கோவிலை நிர்வகித்து வந்தது போடி ஜமீன்.

ஜமீன் முறை வழக்கொழிந்த பிறகு அதற்கு பின் வந்த சந்ததியினர். கோவிலை பராமரிக்காமல் வந்திருந்தனர். கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் மீண்டும் சிவன் ஜமீன் வாரிசுகளின் கனவில் தோன்றி உத்தரவு கொடுக்க கோவில் மீண்டும் புத்துணர்வு பெற்றது. கோவிலுக்கு செல்லும் வனப்பகுதி மிகவும் ஆபத்தான சூழலில் இருந்தது. காட்டு மாடுகள், நரிகள் கரடிகள் என்று விலங்குகள் நடமாட்டம் அதிகமிருந்தது. இதனால் பகலில் மட்டும் பூஜை செய்து விட்டு காட்டை விட்டு வெளியேறும் நிலை இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு கோரிக்கை வைத்த பிறகே அன்றைய முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் சிவனின் சக்தியை அறிந்து கோவிலுக்கு செல்லும் வழியை சுத்தம் செய்து சிறிய அளவிலான சாலையை அமைத்துக் கொடுத்தார்.

தற்போது காலை மதியம் மாலை ஆகிய 3 வேலைகள் பூஜை நடப்பதோடு அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் ஆயிரக்கணக்காணோர் கூடும் இடமாக அது மாறிப்போயிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த சிவன் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் பலர் என்பதே. அதோடு வேலை வாய்ப்பும் வேண்டிக்கொள்பவர்களுக்கும் அந்த வேண்டுதல் நிறைவேறி விடுவதால் ஸ்ரீகயிலாய கீழச்சொக்கநாதர் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருக்கிறது.

கோவில் எளிமையாக ஒரு விவசாயின் மண் வீடு போன்று இருக்கிறது. ஆனால் உள்ளே இருக்கும் சிவன் ஒரு பிரமாண்அ கோவிலில் கருவறையில் இருப்பது போன்ற தோற்றம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. சுற்றிலும் மாமரங்களும், காட்டு மரங்களும் அடர்ந்து வளர்ந்து சீதோஷ்ண நிலையை சுகமாக்குகிறது. பிரசாதமாக வாசத்துடன் விபூதி வழங்கப்படுகிறது. 3 விஷேஷ நாட்களில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் படைக்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் சொற்ப பக்த்ர்களே வருகிறார்கள்.

இந்த கோவிலுக்கு இருக்கும் இன்னொரு சக்தியைத்தான் இப்போதும் பக்தியோடு சிலிர்த்து பேசுகிறார்கள். கோவிலுக்கு கோபுரம் கட்டும் முயற்சியில் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆனால் அந்த முயற்சி கைக்கூடாமல் தட்டிப்போயிருக்கிறது. கனவில் சிவன் தோன்றிய சிவன் கோவில் கட்ட உத்தரவு கொடுக்க வில்லை. இதை மீறியதால்தான் அவருக்கு அரசியலில் பெரிய பின்னடைவு ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

இத்தனை சக்தி வாய்ந்த சிவன் தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு குழந்தை பாக்யத்தையும், வேலை வாய்ப்பையும் வாரி வழங்கி வருகிறார். இதனாலே தேனியை சுற்றியிருக்கும் கிராமத்து மக்கள் ஸ்ரீகயிலாய கீழச்சொக்க்நாதர் இருக்கும் திசை நோக்கி சிவாய நமஹ மந்திரத்தோடு வணங்கி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...