No menu items!

கச்சத்தீவு பிரச்சினையும் இந்தியாவின் நம்பகத்தன்மையும்!  

கச்சத்தீவு பிரச்சினையும் இந்தியாவின் நம்பகத்தன்மையும்!  

வழக்குரைஞர் பிரபு ராஜதுரை

சொத்துரிமை மாற்று ஆவணங்களின் பெயர்களில் வழக்குரைஞர்களுக்கே சிறிது மயக்கம் இருக்கும். சொத்தின் மதிப்பிற்கு ஈடாக பணம் கொடுத்து வாங்கப்படுவது ‘விற்பனை ஆவணம்’ (Sale Deed); பணம் பெற்றுக்கொள்ளாமல் அன்பினால் இலவசமாக மாற்றுவது ‘நன்கொடை ஆவணம்’ (Gift Deed). இருவருக்கிடையேயான சொத்துகளை மாற்றிக்கொள்வது ‘பரிமாற்ற ஆவணம்’ (Exchange Deed). அண்ணன் – தங்கை இருவருக்கும் ஒரு சொத்தில் உரிமையிருந்து, அண்ணன் தனக்குள்ள உரிமையை தங்கைக்கு மாற்றம் செய்வது ‘விடுதல் ஆவணம்’ (Release Deed). இறுதியாக ஒரு சொத்தில் உரிமை உள்ளதோ இல்லையோ, யாருக்கு உரிமை இருக்கிறது என்ற பிரச்சினையில் ஒருவர் உரிமைக்கான தனது கோரிக்கையை மற்றவருக்கு விட்டுக் கொடுத்தல் ‘துறத்தல் ஆவணம்’ (Relinquishment Deed).

கச்சத்தீவு பிரச்சினையில் இந்தியா இலங்கைக்கு அளித்தது, நன்கொடை அல்ல, விடுதலும் அல்ல, மாறாக துறத்தல்.

கச்சத்தீவு யாருக்கு உரிமைப்பட்டது என்பது, தன்னாட்சி பெற்ற நாடுகளாக இந்தியாவும் இலங்கையும் உருவாவதற்கு முன்பிருந்தே உள்ள பிரச்சினையாகும். எனவே, கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்க்கவில்லை (did not cede); மாறாக இந்தியாவின் பல்வேறு ராஜரீக, பாதுகாப்பு, பொருளாதார நலன்களுக்காக ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா துறந்த உரிமைக்கான கோரிக்கை.

மாலத்தீவு மக்கள் இந்திய குடிமக்கள் இல்லை. ஆயினும் இந்தியா மாலத்தீவிற்கு ஆயுதம் தாங்கிய படகுகளையும் ஹெலிகாப்டர்களையும் தானமாக அளிக்கிறது. இது மாலத்தீவிற்கான பாதுகாப்பு என்பதை விட இந்தியாவின் பாதுகாப்பிற்காக என்பதை விளங்கிக்கொள்ள வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர் அளவிற்கு ஐ.எஃப்.எஸ். பட்டம் பெறத் தேவையில்லை; தொடர்ந்து செய்தித்தாள்களைப் படித்தாலே போதுமானது.

கேவலம் தேர்தல் லாபத்திற்காக, இந்தியாவின் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சரும் கச்சத்தீவு பிரச்சினையை கையிலெடுப்பது மற்ற நாடுகளின் பார்வையில் இந்தியாவின் நம்பகத்தன்மையை குலைக்கவும் இந்திய அரசியல்வாதிகளை கேலிப்பொருளாக பார்க்கப்படவும் காரணமாக அமையலாம்.

இதற்குத் துணையாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வேறு; பிரச்சினையின் ஆழம் நன்கு புரிந்தும் இரண்டு நாட்களாக ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த செய்தியை ஏதோ பெரிய ஸ்கூப் போல முதல் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. ஆனால், 04-04-24 நடுப்பக்க கட்டுரையில் கச்சத்தீவு பிரச்னை முட்டாள்தனம் என்கிறது.

உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய 15,000 குஜராத்திகளை இன்னோவா கார்கள் மூலமாக அன்றைய குஜராத் முதல்வர் காப்பாற்றி அழைத்துச் சென்றதாக செய்தி வெளியிட்டு அவரது பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்த பெருமை கொண்ட பத்திரிக்கை, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’.

கச்சத்தீவு பிரச்சினை இப்போது கிளப்பப்பட்டது நல்லதுதான். கன்னியாகுமரிக்கு தெற்கே வாட்ஜ் பகுதி என்ற மீன்வளமும் பெட்ரோலிய சாத்தியங்களும் நிறைந்த பகுதி இருப்பதும், கச்சத்தீவு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை அந்தப் பகுதியின் மீதான தனது உரிமைக்கான கோரிக்கையை துறந்ததும், ஆங்கில ஊடகங்கள் போட்டுடைத்தில், கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து உண்மையில் இலங்கை மக்கள்தாம் போராட வேண்டும் என்று தமிழர்களை நினைக்க வைத்துவிட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...