No menu items!

கவர்னர் ரவி சொன்னது சரியா? –  யார் இந்த ராபர்ட் கால்டுவெல்?

கவர்னர் ரவி சொன்னது சரியா? –  யார் இந்த ராபர்ட் கால்டுவெல்?

தமிழக ஆளுநர் பேச்சு மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. திமுக, மதிமுக, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் என பல தரப்பினரும் ஆளுநர் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். அப்படி என்ன பேசினார் ஆளுநர்?

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, கடந்த 23ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற மருது சகோதரர்கள் நினைவு தின விழாவில் உரையாற்றும் போது, “உண்மையில் இங்கு ஆரியம், திராவிடம் கிடையாது. இந்தியாவை பிரித்தாளும் சூழ்ச்சிக்கான பிரிட்டாஷரின் உத்திகளில் ஒன்று இது. சுதந்திரப் போராட்டம் தொடங்கும் நேரத்தில் இதுபோன்ற கருத்தாக்கத்தை அவர்கள் பரப்பினார்கள். திராவிடம், ஆரியம் என்ற இனங்கள் இருப்பது போன்ற பிரிவை உருவாக்கினார்கள். திராவிடர்கள் என்பவர்கள் தனி இனம் என்ற கருத்தாக்கத்தின் தந்தை யார் என்று தெரியுமா? ராபர்ட் கால்டுவெல்.

1813, பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை உருவாக்கியது. அதுதான் இந்தியா சாட்டார்ட் சட்டம் (India Chattered Act) 1813. அச்சட்டத்தின்படி, இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அரசு மிஷினரிகளை அனுப்பியது. மிஷினரிகள் மூலம் இந்தியாவின் கலாச்சாரத் தூய்மையை அழிப்பதுதான் பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்தது. அதன் அடிப்படையில், மிஷினரிகளுக்கான தன்னார்வலர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்படி அனுப்பி வைக்கப்பட்டவர்தான், ராபர்ட் கால்டுவெல்.

பள்ளிப் படிப்பைக் கூட முழுமையாக முடிக்காத, கல்லூரிகளில் படிக்காத ராபர்ட் கால்டுவெல், இங்கு வந்தபிறகு, மொழியியல் நிபுணராக மாறி, திராவிட மொழிக்கான இலக்கணத்தை எழுதியிருக்கிறார். மேலும், திராவிடர்கள் தனி இனத்தைச் சேர்ந்தவர்கள்” என்று கூறியுள்ளார்.

ஆளுநரின் இந்த பேச்சுக்கு வைகோ, திமுக எம்.பி. டி.ஆர். பாலு, காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செல்வப்பெருந்தொகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் சிறப்பு செய்திட்ட ராபர்ட் கால்டுவெல் என்ற மொழியியல் அறிஞரை சிறுமைப்படுத்தும் முயற்சியில் இழிவுபடுத்தும் விதமாக ஆளுநர் பேசியிருக்கிறார். அறிஞர் ராபர்ட் கால்டுவெல் தமிழகத்துக்கு வருவதற்கு முன்பே இந்தியாவின் தொன்மையான, சிறப்பான மொழி சமஸ்கிருதம் என்றும், தமிழ்மொழி உட்பட அனைத்து மொழிகளும் அந்த மொழியிலிருந்துதான் தோன்றியது என்ற மாயை இந்தியாவில் நிலவியது. மொழியியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல்தான் பல மொழிகளை ஆராய்ந்து, சமஸ்கிருதத்துக்கு முன்பிருந்த மொழி தமிழ்மொழி என்றும், அதன் தொன்மையையும் சிறப்பையும் ஆய்வின் மூலம் உலகத்துக்கு உணர்த்தியவர். சமஸ்கிருதம் இல்லாமல் தமிழ்மொழியால் இயங்க முடியும் என்றும் சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் பிற நாட்டினருடன் தொடர்பில் இருந்தார்கள் என்று முதன் முதலில் அச்சில் ஏற்றியவர். தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் பண்டைய தமிழர்களின் நாகரிகம் குறித்தும் வெளியிட்டவர். தமிழ்மொழியின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டியவர்களை இழித்து பேசுவது ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களில் மூழ்கியவர்களால் மட்டும்தான் முடியும்” என்று கூறியுள்ளார்.

சரி, உண்மையில் யார் இந்த ராபர்ட் கால்டுவெல்? அவர் என்னதான் செய்தார்?

“இந்திய வரலாறு குறித்து 2000 ஆண்டுகளாக  நிலவிய கருத்துக்கள் என்பன பெரும்பாலும் இராமாயண, மகாபாரத இதிகாசங்களில் நினைவு கூறப்பட்ட வம்ச பாரம்பரியங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. இந்தப் பார்வையில் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை உலகெங்கிலுமுள்ள இந்தியவியல் அறிஞர்களுக்கு ஏற்படுத்தும் வண்ணமாய் மூன்று முக்கிய வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் அமைந்தன. இவை இந்திய வரலாற்றில் மட்டுமின்றி உலக அளவிலும் பல புதிய முடிவுகள் உருவாவதற்கும், புதிய ஆய்வுச் சட்டகம் ஒன்று உருவாவதற்கும் காரணமாயின. மொழியியல் மற்றும் அகழ்வாய்வு அடிப்படையில் கால்டுவெல் உள்ளிட்ட முன்னோடிகள் முன் வைத்த அந்த கண்டுபிடிப்புகள்…

ஒன்று… சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்கம், கோதிக் (ஜெர்மனிய மொழிகளின் மூதாதை), செல்டிக் (ஐரிஷ் மற்றும் வெல்ஷ் மொழிகளின் மூதாதை), பழம்பெர்சியன் என்னும் ஆறு பழைய மொழிகளும் ஒரே பொதுவான மூல மொழியிலிருந்து கிளர்ந்தவையே. அந்த மூலமொழிதான் ‘இந்தோ ஐரோப்பிய மொழி’ என்பது.

இந்த ஆறு பழம் மொழிகளின் சொற் களஞ்சியங்களையும் இலக்கியங்களையும் ஒப்பிட்டு அவர்கள் அளித்த விளக்கம் ஒரு வகையில் இந்தியச் சூழலில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறைவனால் படைக்கப்பட்ட, ஆதி அந்தம் இல்லாத தேவபாஷையாகக் கருதப்பட்ட சமஸ்கிருதத்தைப் பிற மொழிகளைப் போலவே ஒரு குறிப்பான வரலாற்றுச் சூழலில் நிறுத்தியது இந்த கோட்பாடு. தவிரவும் சமஸ்கிருதத்தை அவர் பிற நான்கு புராதன மொழிகளின் சகோதர மொழியாகத்தான் நிறுத்தினாரே ஒழிய மற்றவற்றின் தாய்மொழியாகக் கூறவில்லை.

இரண்டு… திராவிட மொழிக் குடும்பம் குறித்த கண்டுபிடிப்பு. இக் கண்டுபிடிப்பிற்காகத்தான் இன்று ராபர்ட் கால்டுவெல் திட்டித் தீர்க்கப்படுகிறார். இக்கருத்தை மிகச் சிறந்த முறையில் முதலில் ஆய்வு பூர்வமாக முன் வைத்தவர் அன்றைய சென்னை ஆட்சியாளராக இருந்த எல்லிஸ். தெலுங்கு மொழியின் வேர்ப் பட்டியலை (தட்டுமாலா) பிற மொழிகளின் வேர்ப்பட்டியல்களுடன் ஒப்பிட்டு சமஸ்கிருதத்திற்கும் அதற்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதை எல்லிஸ் நிறுவினார். பின் அவர் தெலுங்கு மொழி வேர்களை கன்னட, தமிழ் மொழி வேர்களுடன் ஒப்பிட்டு அவற்றுக்கிடையேயான ஒப்புமையைக் சுட்டிக்காட்டினார். சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டஇந்த மொழிக் குடும்பம்தான் இன்று திராவிட மொழிகள் எனப் பெயர் பெற்றுள்ளது. தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, கொடகு, மால்டோ ஆகிய மொழிகளை எல்லிஸ் இந்தோ ஐரோப்பிய (சமஸ்கிருத) மொழிக் குடும்பத்திலிருந்து வேறுபட்ட  ஒரு மொழிக்குடும்பம் என நிறுவினார். எல்லிசின் இந்தக் கண்டுபிடிப்பை மேலும் கோட்பாட்டு ரீதியாக ஒழுங்குபடுத்தி வரையறுத்து மேற்சொன்ன மொழிகளோடு தோடா, கோடா, கோன்டி, குகுவி, மற்றும் ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பகுதிகளில் பேசப்படும் ப்ராஹுய் ஆகியவற்றை சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்ட ‘திராவிட மொழிக் குடும்பம்’ என வரையறுத்து அவற்றின் ஒப்பிலக்கணத்தை வடிவமைத்தார் ராபர்ட் கால்டுவெல்.

மொழியியல் அடிப்படையிலான இக் கண்டுபிடிப்பு இன்றளவும் உலக அளவிலான மொழியியல் வல்லுனர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவும் கால ஒட்டத்தையும் விமர்சனக் கருத்துக்களையும் வென்று நிற்பதாகவுமே உள்ளது. இதன் மூலம் இந்திய வரலாறு குறித்த புரிதல் உலகளவில் மாறியது.

சமஸ்கிருதத்துடன் அடையாளம் காணப்பட்ட பிராமண ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் உருவாகவும் இது வழி வகுத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக சமஸ்கிருதமே தமிழ் உட்பட இந்திய மொழிகளின் தாய் எனவும், அது ‘தேவ பாஷை’ எனவும் கூறி, தமிழ் உள்ளிட்ட வளமான மொழிப் பாரம்பரியங்களை ‘நீச பாஷை’ என  எழுதி வைத்து இழிவு செய்து வந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தமிழர்களும் இதர சகோதர மொழியினரும் தலை நிமிர்ந்து நின்றனர்.

‘வரலாற்று மொழியியல்’ என்றொரு மொழி அறிவியல் துறை உலகளாவிய முறையில் வளர்வதற்கும் கால்டுவெல் போன்றோரின் கோட்பாட்டு உருவாக்கங்கள் அடிக்கல் நாட்டின.

மூன்று… சிந்து வெளி நாகரிகம் குறித்த கண்டுபிடிப்பு. புலம்பெயர்ந்து வந்த ஆரிய மொழிக் குழுவினரின் பண்பாட்டிற்கு முந்தைய ஒரு உள்நாட்டு நகர நாகரீகம் இங்கு ஓங்கியிருந்தது என்பதை சிந்து வெளி அகழ்வுகள் உறுதி செய்தன. அது மட்டுமல்ல இந்த நாகரிகத்தில் பயிலப்பட்டு வந்த மொழி திராவிடமொழிக் குடும்பத்தைச் சார்ந்ததுதான் என்பது தற்போது மேலும் மேலும் உறுதியாகி வருகிறது.

2000 ஆண்டு காலமாகக் குனிந்து கிடந்த தமிழினத்திற்கு சுயமரியாதையை ஊட்டிய மொழியியற் பங்களிப்புகளைச் செய்ததற்காகத்தான் இன்று கால்டுவெல் மீது காய்கிறார்கள்.

கால்டுவெல் மொழி ஆராய்ச்சியோடு நிற்கவில்லை. தாழ்த்தப்பட்ட தமிழர்களை, அவர்களும் திராவிட மொழியினரே எனச் சொன்னவரும் கால்டுவெல்தான். மேலும், தனது மனைவி எல்லிசுடன் இணைந்து திருநெல்வேலி மாவட்டம் ‘இடையன்குடி’ எனும் கிராமத்தில் அடித்தள மக்களோடு  மக்களாக வாழ்ந்து சமயப் பணியோடு, கல்விப் பணியும் செய்துள்ளார்” என்கிறார் பேராசிரியர் அ. மார்க்ஸ்.

‘கால்டுவெல் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவர், கல்லூரிக்கு செல்லாதவர்’ என்று கூறியிருந்தார் ஆளுநர். இதனை குறிப்பிட்டு, பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காதவர் மொழியியல் அறிஞரா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஆனால், கால்டுவெல், கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...