No menu items!

கவாஸ்கருக்கு சாதனை இந்தியாவுக்கு சோதனை – அன்று நடந்தது என்ன?

கவாஸ்கருக்கு சாதனை இந்தியாவுக்கு சோதனை – அன்று நடந்தது என்ன?

நெதர்லாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீர்ர் கிளென் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதம் விளாச, அவரைப் பாராட்டிப் பேசிய சுனில் கவாஸ்கர், ‘நான் ஒரு போட்டியில் முதல் ரன்னையே 40-வது பந்தில்தான் எடுத்தேன்’ என்று கூறியிருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் இது மேக்ஸ்வெல்லின் ஆட்ட்த்துக்கான பாராட்டாக தெரியும். ஆனால் உண்மையிலேயே தான் சொன்னபடி நத்தை போன்ற நிதானமான ஒரு பேட்டிங்கை முதலாவது உலகக் கோப்பை போட்டியில் வெளிப்படுத்தி இருக்கிறார் சுனில் கவாஸ்கர். இங்கிலாந்துக்கு எதிராக நடந்த இந்த போட்டியில் 174 பந்துகளை எதிர்கொண்டு கவாஸ்கர் எடுத்த ரன்கள் 36.

கவாஸ்கரின் இந்த ஆ…ரம்ப சாதனைக்கு அவரை மட்டுமே குறைசொல்ல முடியாது. அந்நாட்களில் இந்தியாவுக்கு ஒருநாள் போட்டிகளில் அனுபவம் ரொம்பவே குறைவு. 1960-களில் கிரிக்கெட் என்றாலே டெஸ்ட் கிரிக்கெட்தான் என்ற நிலை இருந்தது. இந்த சூழ்நிலையில்தான் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் தொடங்கப்பட்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மெல்ல மெல்ல வளர்ந்து, 1970-களின் தொடக்கத்தில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் கால் பரப்பியது. இதன் அடுத்த கட்டமாக இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய 6 அணிகள் பங்கேற்ற முதலாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1975-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தப்பட்டது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் பலமிக்க இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ஒருநாள் போட்டியில் ஏற்கெனவே பெற்றிருந்த அனுபவத்தால் ஏராளமான ரன்களைக் குவித்தது. டென்னிஸ் எமிஸ் 147 பந்துகளில் 137 ரன்களை விளாச நிர்ணயிக்கப்பட்ட 60 ஓவர்களில் (அப்போது ஒருநாள் போட்டிகள் 60 ஓவர்களைக் கொண்டதாக இருந்தது) 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்களை அந்த அணி சேர்த்தது.

335 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவாஸ்கரும், சோல்கரும் களம் இறங்கினர். இந்திய அணிக்கு இப்போது சுப்மான் கில் எப்படியோ, அப்படித்தான் அன்று கவாஸ்கர் இருந்தார். வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் சதங்களாக குவித்துவந்த கவாஸ்கர், இந்தியாவுக்கு அதிரடி தொடக்கம் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மைதானத்தில் நடந்ததோ வேறு. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் எத்தனை வேகத்தில் பந்து போட்டாலும் ‘டொக்’ வைத்து தடுப்பது ஒன்றே தன் பணி என்ற அளவில் அனைவரின் பொறுமையையும் சோதித்தார் கவாஸ்கர்.

சரி… முதல் 10 ஓவர்கள் பொறுமையாக ஆடிவிட்டு, புதுப்பந்து பழசானதும் கவாஸ்கர் வித்தை காட்டுவார் என்று அணியினரும் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்க, பத்தல்ல இருபதல்ல 30 ஓவர்களுக்கு பிறகும் அவரது போக்கில் மாற்றமில்லை. அணியின் மற்ற வீரர்கள் தண்ணீர் பாட்டில் கொடுப்பதுபோல் மைதானத்துக்குள் நுழைந்து ஆலோசனை சொல்லியும், ரசிகர்கள் சிலர் மைதானத்துக்குள் புகுந்து கெஞ்சிக் கேட்டும், தன் நிலையில் இருந்து சற்றும் மாறாமல் டொக் மன்னனாக மைதானத்தில் நின்றார் கவாஸ்கர். இதனால் பாதி ரசிகர்கள் போரடித்துப் போய் மைதானத்தில் இருந்தே வெளியேறி விட்டனர்.

கவாஸ்கரின் ஆட்டம் மற்ற வீரர்களையும் பாதிக்க, 60 ஓவர்களின் இறுதியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை மட்டுமே எடுத்தது. 202 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ‘டொக்’கே பிரதானம் என்று கடைசிவரை அவுட் ஆகாமல் மைதானத்தில் நின்ற கவாஸ்கர், 174 பந்துகளை எதிர்கொண்டு, ஒரே பவுண்டரியுடன் 36 ரன்களைக் குவித்தார் சாரி… நத்தை வேகத்தில் சேர்த்தார்.
இப்போட்டியில் இந்திய அணியின் மேலாளராக இருந்த ஜி.எஸ்.ரமாசந்த் இதுபற்றி கூறும்போது, “ஆடுகளம் ஸ்லோவாக இருந்ததால் அடித்து ஆட முடியவில்லை என்று கவாஸ்கர் கூறினார். ஆனால் இதை ஏற்க நான் தயாராக இல்லை. இதே ஆடுகளத்தில்தானே இங்கிலாந்து 334 ரன்களைக் குவித்தது” என்கிறார்.

அதே நேரத்தில் தன் விருப்பத்துக்கு மாறாக எஸ்.வெங்கட்ராகவனை தேர்வுக்குழுவினர் கேப்டனாக நியமித்ததை மனதில் வைத்தே அவர் இப்படி வஞ்சம் தீர்த்ததாகவும் கூறப்படுகிறது. அன்றைய காலகட்ட்த்தில் 60 ஓவர்கள் அறுத்துத் தள்ளிய கவாஸ்கர், இன்று இந்திய வீர்ர்கள் சில பந்துகளை டொக் வைத்தாலே விமர்சிப்பதுதான் காலத்தின் கொடுமை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...