No menu items!

ரங்கசாமி கட்சியை உடைக்கிறதா பாஜக? – புதுச்சேரி நிலவரம்

ரங்கசாமி கட்சியை உடைக்கிறதா பாஜக? – புதுச்சேரி நிலவரம்

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸை உடைத்து புதிய ஆட்சி அமைக்க பாஜக படுதீவிரமாக முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் பாஜக எம்.எல்.ஏக்கள் அக்கட்சித் தலைவர் ஜேபி நட்டாவை நேரில் சந்தித்துள்ளனர். அடுத்து என்ன நடக்கும்?

ரங்கசாமிக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ.கள்

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி சட்டசபைக்கு 2021ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் உள்ள 30 இடங்களில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் 10; பாஜக 6 இடங்களைக் கைப்பற்றின. திமுக 6; காங்கிரஸ் 2; சுயேட்சைகள் 6 இடங்களில் வெற்றி பெற்றனர். இதனையடுத்து புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்வராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவி வகித்து வருகிறார்.

ஆனால், என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த நாள் முதலே இரு கட்சிகளும் ஆளுக்கு ஒரு திசையில்தான் பயணிக்கின்றன. நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம், அமைச்சர் பதவி தொடங்கி அத்தனையிலும் இரு கட்சிகளுக்கும் இடையே அக்கப்போர்தான். பாஜக எம் எம்எல்ஏக்கள் வாரியத் தலைவர் மற்றும் அமைச்சர் பதவிகளைக் கோரிவந்தனர்.

புதுச்சேரி ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணனிடம் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பாஜக எம்.எல்.ஏக்களும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ-க்களும் ஆளும் அரசு மீது ஊழல் புகார் அளித்த வினோதமும் நடந்தது. முதல்வர் ரங்கசாமி தங்களை புறக்கணிப்பதாகவும் நேரடியாக தெரிவித்தனர். அப்போது பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளன் பேசிய ஆடியோ பதிவு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்கள் புரோக்கர்கள் மூலம் செயல்படுவதாகவும், அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் புரையோடியிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடந்து மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக பாஜக அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டு தோற்றார்.

இந்நிலையில் பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், சிவசங்கர், அங்காளன், ஸ்ரீநிவாஸ் அசோக், வெஙகடேசன் ஆகியோர் கடந்த 1-ம் தேதி முதல் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் பாஜக தலைவர் நட்டா, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் ஆகியோரை சந்தித்துள்ளனர். ஜேபி நட்டாவை சந்தித்த பாஜக எம்.எல்.ஏக்கள், முதல்வர் பதவியில் இருந்து ரங்கசாமியை நீக்க வலியுறுத்தினர் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ்ஜியிடமும் ஆட்சியாளர்கள் செயல்பாடே மக்களவைத் தேர்தல் தோல்விக்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக தலைமையில் புதிய ஆட்சி அமைப்பது குறித்தும் விவாதித்தனர்; இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இதில் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்பட வேண்டும் என டெல்லி தலைமை முடிவெடுத்துள்ளதாம். ஆனாலும், புதுச்சேரி முதல்வர் என்.ஆர். ரங்கசாமியின் பதவிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து காத்திருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரங்கசாமி என்ன செய்யப்போகிறார்?

இன்னும் 2 வாரத்தில் புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால், சட்டப்பேரவையிலும் பாஜக எம்எல்ஏ-க்களின் அதிருப்தி எதிரொலிக்கும் வாய்ப்பு உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் விரிசலால் தனது ஆட்சிக்கு நெருக்கடி உருவாகியுள்ளதை முதல்வர் ரங்கசாமி உணர்ந்துள்ளார். ஆனால், அதுபற்றிய கேள்விகளுக்கு வழக்கம்போல் பதிலளிக்க மறுத்து வருகிறார்.

பாஜக தலைமை என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்து அடுத்தக்கட்ட முடிவை ரங்கசாமி எடுக்க தயாராகிவிட்டார் என அவரது தரப்பில் சொல்கின்றனர். பாஜக எம்எல்ஏ-க்கள் செயல்பாட்டால் அதிருப்தியில் இருக்கும் முதல்வர் ரங்கசாமி, தேவைப்பட்டால் மக்களைச் சந்திக்கவும் தயார் என்ற மனநிலையில் இருப்பதை பாஜக தரப்புக்கு தெளிவாக்கியுள்ளார் என்கின்றனர். பாஜக தலைமை என்ன செய்யப் போகிறது என்பதை புதுச்சேரி அரசியல் களம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

ஆட்சியை கலைக்க வலியுறுத்தும் அதிமுக

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், ‘ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் போதும் சுயேட்சை மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். சுழற்சி முறையில் அமைச்சரவையை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர்கள் மனுவும் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரை முழுமையாக நடத்த முடியுமா என்ற சந்தேகம் மக்கள் இடையே எழுந்துள்ளது. அதிகாரிகள், துணைநிலை ஆளுநர் மற்றும் மத்தியில் ஆளும் பாஜக என அனைவரும் சேர்ந்து புதுச்சேரி அரசுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர். இதனால் ரங்கசாமி நிம்மதியற்ற முதலமைச்சராக இருக்கிறார். ரங்கசாமி அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களை கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்” என்று அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...