No menu items!

ரிஷி சுனாக் கட்சி தோல்வி – இங்கிலாந்தில் என்ன நடந்தது?

ரிஷி சுனாக் கட்சி தோல்வி – இங்கிலாந்தில் என்ன நடந்தது?

இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் இந்திய வம்சாவழியைச் சேர்நத ரிஷி சுனாக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைந்தது. தொழிலாளர் கட்சி 14 வருடங்களுக்குப் பிறகு அங்கு ஆட்சியைப் பிடித்துள்ளது.

இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 650  தொகுதிகளில் தொழிலாளர் கட்சி இதுவரை 411 இடங்களை  கைப்பற்றியுள்ளது. ரிஷி சுனாக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 119 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.   லிபரல் டெமாக்ரெடிக் கட்சிக்கு 71 இடங்கள் கிடைத்துள்ளன. தொழிலாளர் கட்சி பெருவாரியான இடங்களில் வென்றதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் கியர் ஸ்டாமர் பிரதமராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த கியர் ஸ்டாமர்?

தொழிலாளர் கட்சியின் தலைவரான கியர் ஸ்டாமர், 1962-ம் ஆண்டு லண்டனில் உள்ள சர்ரே ஆக்ஸ்டெட் பகுதியில் பிறந்தவர். அவரது தந்தை தொழிற்சாலைகளுக்கு தேவையான உபகரணங்களை தயாரித்து பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். அவரது தாய் செவிலியராக பணிபுரிந்தார். லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற கியர் ஸ்டாமர்,  அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வழக்கறிஞராக இருந்தார். டோனி பிளேர் பிரதமராக இருந்த போது இங்கிலாந்து அரசு ஈராக் மீது படையெடுத்த நிலையில், அதை மிகக் கடுமையாக எதிர்த்தவர் கியர் ஸ்டாமர்.  

2015-ம் ஆண்டில் தேர்தல் அரசியலுக்கு வந்த கியர் ஸ்டாமர், வடக்கு லண்டனில் உள்ள ஹோல்பார்ன் மற்றும் செயிண்ட் பான்க்ராஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கார்பினுக்கு நெருக்கமாக இருந்த கியர் ஸ்டாமர், அவரது நிழல் அமைச்சரவையில் பிரெக்சிட் அமைச்சராக இருந்தார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிலாளர்  கட்சி படுதோல்வி அடைந்தது. அதையடுத்து, தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கியர் ஸ்டாமர்  வெற்றி பெற்றார். இவர் தலைவரான பிறகு புத்தெழுச்சியுடன் போராடிய தொழிலாளர் கட்சி இப்போது ஆட்சியை பிடித்துள்ளது. கியர் ஸ்டாமருக்கு விக்டோரியா ஸ்டாமர் என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

புதிய அத்தியாயத்தை தொடங்குவோம்

நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு உரையாற்றிய கியர் ஸ்டாமர், “தேர்தல் வெற்றியின் மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு அதன் எதிர்காலத்தைப் பெறுகிறது.  மக்கள் நமக்கு ஆணையிட்டு இருக்கிறார்கள். இந்த ஆணை ஒரு பெரிய பொறுப்புடன் வந்திருக்கிறது. இன்றுமுதல் நாம் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவோம். மாற்றத்திற்கான வேலையைத் தொடங்குவோம். அரசியல் என்றால் அது பொது சேவை செய்வதற்கானது என்ற நிலையை மீண்டும் நாம் உருவாக்குவோம். நமது அரசு நன்மைக்கான சக்தியாக இருக்கும் என்பதை நாம் காட்டுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்ட ரிஷி சுனாக்

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெற்றுள்ள தோல்விக்கு முழுப் பொறுப்பு ஏற்பதாக பிரதமர் ரிஷி சுனாக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரிஷி சுனாக், “தொழிலாளர் கட்சி பெற்ற வெற்றிக்காக நான் கியர் ஸ்டாமரை தொடர்பு கொண்டு வாழ்த்தினேன். இன்று ஆட்சி அதிகாரம் அமைதியான முறையில் கைமாறியுள்ளது. நம் நாட்டின் எதிர்காலம் சார்ந்து நம் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆட்சி அமைய வேண்டும். இந்த தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். என்னை மன்னிக்கவும்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...