பவா செல்லத்துரைதான் இன்றும் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக். லிங்குசாமி படங்களில் கதை திடீரென யூ டர்ன் எடுப்பதுபோல நேற்று வரை பிக் பாஸ் சம்பவங்களுக்காக பவா கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், இன்று ஒட்டுமொத்த இலக்கிய உலகமும் பவாவுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது. கவிஞர் மனுஷ்யபுத்திரன், திரைப்பட இயக்குநர் பாஸ்கர் சக்தி, திரைப்பட தயாரிப்பாளர் வேடியப்பன் தொடங்கி பலரும் பவா மீதான விமர்சனங்களுக்கு பதில் பதிவிட்டுள்ளார்கள். இதனால், இன்று பவாவின் அருமை பெருமை பதிவுகளால் நிறைந்திருக்கிறது, ஃபேஸ்புக்!
சரி, பிக் பாஸில் வீட்டில் இருந்து வெளியேறிய பவா செல்லத்துரை என்ன செய்துகொண்டிருக்கிறார்?
பிக் பாஸில் வீட்டில் இருந்து வெளியேறியதும் உடனே தனது சொந்த ஊரான திருவண்ணாமலை சென்றுவிட்டார், பவா செல்லத்துரை.
தொடர்ந்து பிக் பாஸில் இருந்து வெளியேறியது தொடர்பாக பவா செல்லத்துரையிடம் இருந்து விளக்கம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக வெளியே எதுவும் பேசக்கூடாது என ஒப்பந்தம் இருப்பதால், பேட்டி கேட்டு பேசிய ஊடகத்தினரையும் தவிர்த்துவிட்டார். பிக் பாஸ் ஒப்பந்தம் காரணமாக, தன் மீதான சமூக வலைதள விமர்சனங்களுக்கு பதில் பதிவு வெளியிட முடியாத நிலையிலும் உள்ளார் பவா செல்லத்துரை என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
ஆனாலும், பவா செல்லத்துரை பிக் பாஸில் இருந்து வெளியேறியது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக இருப்பதால், பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் விஜய் டிவியே ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதில், பிக்பாஸில் இருந்து வெளியேறியது தொடர்பாக பவா விளக்கமளிப்பார் என சொல்லப்படுகிறது.
பவா செல்லத்துரையின் மகன் வம்சி பிறந்த நாள் இன்று (11-10-23). இதனை முன்னிட்டு திருவண்ணாமலை வீட்டில் குடும்பத்துடன் மகன் பிறந்த நாளை கொண்டாடினார், பவா.
இதனிடையே, சமூக வலைதள விமர்சனங்களுக்கு பதில் சொல்வது போல், தனக்கு ஆதரவாக இலக்கிய நண்பர்கள் எழுதிய பதிவுகளையும் பகிர்ந்து வந்தார். மேலும், ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயொவ்ஸ்கியின் மேற்கோள் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அது,
‘நான் மனம் தளரவில்லை. வாழ்வின் மீதான நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை. எங்கேயும் வாழ்க்கை வாழ்க்கைதான். என்னைச்சுற்றிலும் மனிதர்கள் இருக்கிறார்கள். மனிதர்கள் மத்தியில் ஒரு மனிதனாக இருப்பதும், எவ்வளவு துயரங்கள் ஏற்பட்டாலும் எப்போதும் மனித தன்மையோடு இருப்பதும், வீழ்ந்துவிடாமல் தைரியத்தை தக்கவைத்துக்கொள்வதும்தான் வாழ்க்கை. இதுதான் வாழ்க்கையின் மாபெரும் சவால்!’
இதனை, ‘நான் மனம் தளரவில்லை. வாழ்வின் மீதான நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை’ என்று பவா சொல்வதாகவே அவரது நண்பர்கள் குறிப்பிடுகிறார்கள்.