No menu items!

அல்பகர்க் முதல் ஆன்ட்ரியா வரை – சென்னையில் ஆங்கிலோ இந்தியர்கள்

அல்பகர்க் முதல் ஆன்ட்ரியா வரை – சென்னையில் ஆங்கிலோ இந்தியர்கள்

சந்தியா நடராஜன்


500 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் ‘ஆங்கிலோ இந்தியன்’ என்ற கலப்பினம் உருவானது. ‘வாஸ்கோடகாமா’வின் வருகை உருவாக்கிய தாக்கத்தில் மேலைக் கடலோரம் வந்திறங்கிய போர்ச்சுகீசியர்கள் இந்தியப் பெண்களை மணமுடித்துக்கொள்ளத் தொடங்கியதால் ஏற்பட்ட இனம்தான் இந்த ஆங்கிலோ இந்தியன் இனம். ஆரம்பத்தில் இந்த இனத்தினரை, ‘யுரேஸியன்’ என்றே அழைத்தார்கள்.

கி.பி.1498இல் வாஸ்கோடகாமா கோழிக்கோட்டில் வந்திறங்கினார். அப்போது அங்கு ஆட்சியதிகாரத்திலிருந்த ஜமோரின்களுடன் நல்லுறவு பேணி, வாசனைத் திரவியங்களுடனும் அரிய நவரத்தினக் கற்களுடனும் நாடு திரும்பி, அவர் இந்தியாவுக்கும் போர்த்துகீசிய நாட்டிற்கும் இடையே கடல்வழி வாணிகத்தைத் தொடங்கி வைத்தார். பத்தே ஆண்டுகளில் ‘டையூ’ மாகாணத்தின் கவர்னர் ஆனார், அல்யோன்சா டி அல்பகர்க் என்ற போர்த்துகீசியர்.

வணிகத்துக்காக இந்தியாவில் குடியேறிய போர்த்துகீசியர்கள் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்வதை ஆதரித்து, அல்பகர்க் தானே முன்னின்று அத்தகைய திருமணங்களைச் சீரும் சிறப்புமாக நடத்தி வைத்தார். இத்தகைய திருமண உறவுகள் தங்களுடைய வணிக நலனுக்குத் துணை புரியும் என்று அவர் நம்பினார். ஆனால், காலப் போக்கில் அந்நியரை மணம் முடித்த இந்தியப் பெண்களை அவர்களது குடும்பங்களும் உறவினர்களும் ஏற்கவில்லை. இந்தக் கலப்பினக் குடும்பங்கள் இழிபுகழ் தேடிக்கொண்டன. அல்பகர்க் நினைத்தது ஒன்று. நடந்தது வேறு ஒன்று.

போச்சுகீசியர்களுக்குப் பிறகு டச்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் இந்தியாவுக்கு வரத் தொடங்கினார்கள். வணிகம் செய்ய வந்தவர்களுடன் கிறித்தவ மதம் பரப்ப பாதிரிமார்களும் போதகர்களும் உடன் வந்தார்கள். ஆரம்பத்தில் ஆடவர்களை மட்டுமே இந்த வணிகக் கப்பல்கள் சுமந்து வந்தன. பெண் துணை இன்றிக் குடியேறியவர்களுக்கு இந்தியப் பெண்கள் வாழ்க்கைத் துணை ஆனார்கள். இந்த இந்தியப் பெண்கள் ஞானஸ்நானம் செய்துவைக்கப்பட்டு கிறித்துவர்களானார்கள். இவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் தந்தை மொழியான ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டனர். மதம் மாறிய தாயின் அடியொற்றிக் கிறித்துவர்களானார்கள். உணவும் உடையும் ஐரோப்பியமயமானது. இந்தியர்களிடையே அந்நியப்பட்ட ஒரு சமூகம் வளர்ந்தது. இதுவே ஆங்கிலோ இந்திய வம்சத்தின் பூர்வ வரலாறு.

எனக்கு ஆங்கிலோ இந்திய இனத்தின் மீதி பற்றும் பரிவும் இருந்து வருகிறது. நான் பிறந்தபோது என்னைத் தொட்டுத் தூக்கிய பெண் மருத்துவர் ரோட்டரிக்ஸ் என்ற ஆங்கிலோ இந்தியர். அவர்தான் எனக்குப் பெயரிட்டவரும்கூட. எனது ஆங்கிலோ இந்தியப் பற்றுக்கும் பரிவுக்கும் ஆங்கிலோ இந்தியக் கரங்களின் ஆதி நாள் மெய்த்தீண்டல் ஒரு காரணமாக இருக்கலாம். எங்களூரில் இருந்த ஒரே ஆங்கிலோ இந்தியக் குடும்பம் டாக்டர் ரோட்டரிக்ஸின் குடும்பம் மட்டுமே.

1985இல் நான் சென்னை சுங்க இல்லத்தில் சேர்ந்தபோது ஆங்கிலோ இந்தியர்கள் பலர் மூத்த அதிகாரிகளாக இருந்தனர். அவர்களது வாழ்க்கை முறை எவரையும் வசீகரிக்கும். ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்பதே தலைமுறை தலைமுறையாக ஆங்கிலோ இந்திய சமூகம் ஏற்றுக்கொண்டு கடைப்பிடித்து வரும் வாழ்வியல். மது, விருந்து, இசை, நடனம், கேளிக்கை போன்ற நிகழ்வுகள் எல்லாம் ஏதாவது ஒரு காரணம் கொண்டு அடிக்கடி அவர்களது வீடுகளில் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். பணம் சம்பாதிப்பதும் சொத்து சேர்ப்பதும் ஆங்கிலோ இந்தியச் சமூகத்தில் பிரதான விஷயம் இல்லை. அங்கே கொண்டாட்டங்களுக்கு மட்டுமே முன்னுரிமை.

காசை இறுக்கி முடியாதவை அவர்களது விரல்கள். பூரிப்புக்குப் பிறகுதான் சேமிப்பு. சிக்கனம் என்பது அவர்களுக்குச் சரிப்பட்டு வராது. நடனத்தில் நாட்டம் உள்ளவர்கள். எந்த ஒரு நிகழ்விலும் ஆங்கிலோ இந்திய இணையர்கள் நடனமாடாமல் இருப்பதில்லை. திருமண நிகழ்வுகளில் எல்லோரும் நடனம் ஆடுவார்கள். கிராஸ் ஸ்டெப் டான்ஸ் இந்தச் சமூகத்தின் தனித்துவமிக்க நடனமாகும். சாம்போ டான்ஸ், டோங்கோ டான்ஸ், பாக்ஸ் ஸ்டெப் முதலியவையும் இவர்கள் பயின்று பழக்கப்படுத்திக்கொள்ளும் நடன வகைமைகள்.

ரெக்ஸ் ரோட்ரிக்ஸ், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், மிட்செல், பிரௌன், பென்ட், பேராரா ஆகியோர் நான் சுங்கத் துறையில் பணியில் சேர்ந்தபோது பணியாற்றிக் கொண்டிருந்த ஆங்கிலோ இந்திய அதிகாரிகள்.

பெரும்பாலான ஆங்கிலோ இந்தியர்களுக்குத் துறைமுகப் பிரிவில் பணியாற்றுவது பிடிக்கும். தினம் தினம், புதிய புதிய சரக்குக் கப்பல்கள் வரும். கப்பல் கேப்டன்கள் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். மாதக் கணக்கில் மனிதர்களைப் பார்க்காதவர்கள் அவர்கள். விண்ணும் கடல் நீரும் மட்டுமே அவர்கள் காணும் காட்சிகள். கப்பல் கரையைத் தொட்டவுடன் மாலுமிகளும் கப்பல் பணியாளர்களும் சொர்க்கத்தின் வாசலைத் தொட்டுவிட்டதாகவே உணர்வார்கள். கப்பல் பணியாளர்கள் எவரும் சுங்க அதிகாரியின் அனுமதிக்குப் பிறகுதான் கப்பலிலிருந்து வெளியேறி நகரில் நடமாட முடியும்.

துறைமுகத்தில் கப்பல் கட்டப்பட்டவுடன் கப்பல் கேப்டனைச் சந்திக்கிற முதல் மனிதன் ஒரு சுங்க அதிகாரியைத் தவிர யாராக இருக்கமுடியும். அவர்களுடைய சந்திப்பு ஆனந்தத்தின் எல்லையைத் தொட்டுவிடத் துடிக்கும். திரவ பானங்கள் பொங்கி வழியும். குறிப்பாகக் கிரேக்க மாலுமிகளின் விருந்தோம்பல் எல்லாத் துறைமுகங்களிலும் பிரசித்தி பெற்றிருந்தது. சீருடை அணிந்த, துறைமுகச் சுங்க அதிகாரிகளின் பணி என்பது இன்முகத்துடன் ஆற்றப்படுவது. சுங்க அதிகாரிகள் ஒரு நாட்டின் கலாசார தூதுவர்கள் அல்லவா? ஆகவே, இந்தத் துறைமுகப் பணியை அக்கால ஆங்கிலோ இந்தியர்கள் நாடிச் சென்றதில் வியப்பில்லை.

துறைமுகத்திற்கு வரும் வெளிநாட்டுக் கப்பல்களை இஞ்சின் ரூம் தொடங்கி கப்பல் பணியாளர்களின் அறைகளையெல்லாம் சோதனையிட சுங்கப் பிரிவிலிருந்து வரும் குழுவுக்கு பிளாக் கேங் (Black Gang) என்று பெயர். பிளாக் கேங் வருகையின் போது கப்பலில் பதற்றம் பற்றிக்கொள்ளும். சுங்க அதிகாரிகள் ‘டங்கிரி’ என்ற உடை அணிந்து கடுமையாக வேலை செய்வார்கள். வெள்ளைச் சீருடை அணிந்து மிடுக்காக வரும் சுங்க அதிகாரிகள் ‘டங்கிரி’ அணிந்து செயலாற்றுகையில் கப்பல் மெக்கானிக்குகள் போலவோ இயந்திரத் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பணியாளர்கள் போலவோ தோன்றுவார்கள். இந்த உடையில் யாரும் அவர்களை அதிகாரிகள் என்று நினைக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட பணிகளில் இந்த ஆங்கிலோ இந்திய அதிகாரிகளை நான் பார்த்ததே இல்லை.

விதிவிலக்காகப் புலனாய்வுப் பிரிவில் ஈடுபாடு கொண்டவராக ஒருவர் இருந்தார். அவர்தான் ரெக்ஸ் ரோட்ரிக்ஸ். நிறத்திலும் அவர் ஆங்கிலோ இந்தியரின் பொன்னிற மேனியிலிருந்து மாறுபட்டவர்; கரிய திருமேனியர். அவர் பேசும் தமிழ் மட்டும் அவரை அடையாளம் காட்டும். சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளின் உடைமைகளைச் சோதனையிட்டுச் சுங்கத் தீர்வை வசூலிப்பது மட்டுமே அவரது கடமை. வெள்ளைச் சீருடையில் இருக்க வேண்டும். அவர் இண்டெலிஜன்ஸ் அதிகாரிகளின் பணியில் ஆர்வம் காட்டுவார்.

பணிக்கு வரும்போது இரண்டு சூட்கேஸ்கள் கொண்டு வருவார். ஒன்றில் அவரது சீருடை இருக்கும். மற்றொன்றில் விதவிதமான ஸ்பேனர்கள், ரம்பம், பல்வகை ஸ்க்ரூ ட்ரைவர்கள், கொறடு, சுத்தியல் உள்ளிட்ட மெக்கானிக் ஷெட் கருவிகள் எல்லாம் இருக்கும். ஒரு பயணி கொண்டு வரும் வாஷிங் மெசின், ஏர் கண்டிஷனர் போன்ற பொருட்களைச் சந்தேகத்தின் பேரில் இன்டெலிஜென்ஸ் பிரிவு அதிகாரிகள் அக்கு வேறு, ஆணி வேறாகப் பிரித்துச் சோதனையிடும்போது ரெக்ஸின் இரண்டாவது சூட்கேஸ் துணை நிற்கும்.

எண்பதுகளின் இறுதியில்தான் சென்னை விமான நிலையத்தில் பயண உடைமைகளைச் சோதனை செய்யும் ஸ்கேனர் பயன்பாட்டுக்கு வந்தது. ரெக்ஸ் தமிழ்தான் அக்கால ஆங்கிலோ இந்தியர்கள் பேசும் தமிழுக்கு வகைமாதிரி. ‘கலெக்டர் வர்றான்னு பியூன் சொல்றாரு’ என்பார். பொதுவாக ஆங்கிலோ இந்திய அதிகாரிகளை, வயதில் குறைந்தவர்கள் என்றாலும் துரை என்று அழைப்பது வழக்கம்.

டிகுரூஸ், மெனேஸஸ் என்று இரண்டு சுங்க அதிகாரிகள் இருந்தனர். இருவருமே ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். தட்டுத்தடுமாறும் அவர்கள் பேசும் தமிழ். இருவரையும் அவர்கள் பெயர்களை வைத்து ஆங்கிலோ இந்தியர்கள் என்றே நினைத்திருந்தேன். பிறகுதான் தெரிந்தது, அவர்கள் இருவரும் கோவாவைச் சேர்ந்த கொங்கணி இனத்தவர் என்று. அவர்கள் ஆங்கிலோ இந்திய சமூகத்தினர் இல்லை.

போர்ச்சுகீசியர்களின் அதிகாரம் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் வலிமை பெற்ற பிறகு கோவாவில் மதமாற்றமும் தீவிரமடைந்தது. அப்படி மதம் மாறியவர்களுக்கு ஞானஸ்நானத்தின்போது போர்ச்சுக்கீசிய கிறித்துவப் பெயர்கள் சூட்டப்பட்டன. இவர்கள் ஆங்கிலோ இந்தியர்கள் இல்லை. மதம் மாறிய கத்தோலிக்க கிறித்துவர்கள். போர்ச்சுகீசிய ஆணுக்கும் இந்தியப் பெண்ணுக்கும் பிறந்து வளர்ந்தவர்கள்தாம் ஆங்கிலோ இந்தியர்கள். கோவாவில் அவர்களும் போர்ச்சுகீசிய பெயர்கள் தாங்கி வாழ்ந்தனர்.

தமிழ்நாட்டிலும் ஐரோப்பியப் பெயர்களைக் கொண்ட ஒரு கிறித்துவ சமூகம் இருக்கிறது. இந்தச் சமூகத்திற்கு, ‘ஃபெர்னாண்டோ கிறிஸ்டியன்’ என்று பெயர். இந்தப் பிரிவைச் சார்ந்த கிறித்தவர்கள் தூத்துக்குடி, நாசரேத் போன்ற பகுதிகளைச் சார்ந்தவர்கள். இவர்களில் பெரும் பகுதியினர் தூத்துக்குடிக் கடலோரம் வாழ்பவர்கள்.
திருமதி ஸ்பெர்ஜன் என்பவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் ஆங்கிலோ இந்தியராக இருக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

அவர் வந்தார். சேலை உடுத்திய தமிழ்ப் பெண்ணாக இருந்தார். பேச ஆரம்பித்தார். ‘இன்னைக்கு ஈவ்னிங் ப்ரேயர் மீட்டிங் இருக்கு. ஐயர் வீட்டுக்கு வர்றாரு. அதனால உங்க ஃபங்சனுக்கு வரவியலாது. நீங்க எப்டி வந்தீங்க, இங்க தெரு முனையிலேயே பஸ் நிக்கி’ என்றார். ஐயரா! கிறித்துவர் வீட்டு ப்ரேயரில் ஐயர் என்ன செய்யப் போகிறார்? போகப் போகத் தெரிந்தது, நெல்லை கிறித்துவர்கள் பாதிரியார் அல்லது பாஸ்டரை ஐயர் என்றே சொல்கிறார்கள். தமிழ்க் கிறித்துவ உலகில் தூத்துக்குடி ஃபெர்னாண்டோ கிறித்துவர்கள் ஒரு தீவு. அவர்களைப் பற்றி முத்துக்குமார் எழுதியுள்ள ‘தூத்துக்குடி’ மற்றும் ‘திருச்செந்தூர் – அலைவாய் நினைவாய்’ நூல்களில் விரிவாகக் காண முடியும்.

இயேசுவின் வாய்மொழியை வாழ்வின் பாதையாகவும் ஒளியாகவும் கொண்ட கிறித்துவர்களின் முகத்தில் நிலவும் அமைதியையும் ஒளிவிடும் அன்பையும் கண்டுணரும் தருணங்கள் பெற்றவன் நான். அதிலும் ஒரு படி மேலாக ஆங்கிலோ இந்தியர்களின் வாழ்வும் நட்பும் என்னை நெகிழ வைத்திருக்கின்றன. அவர்கள், அவர்கள் உலகத்தில் வாழ்கிறார்கள். இந்தச் சமூகப் பெண்களை, ‘சட்டைக்காரிகள்’ என்கிறார்கள். படித்தவர்கள் ‘half caste’ (குறைச் சாதி) என்று இவர்களைப் பழிக்கிறார்கள். ‘vices of both, virtues of none’ என்று இந்தச் சமூகம் இழிபுகழுக்கு ஆளாகிறது. இரு இனங்களின் ஒழுங்கீனங்களாம்; எவரின் ஒழுக்கமும் ஏதுமில்லையாம். தாய் இந்தியப் பெண் என்றாலும் இந்தியர்கள் இவர்களை வெறுத்தார்கள்; ஏற்கவில்லை. தகப்பன் வெள்ளையன் என்றாலும் மேற்கு இவர்களை நிராகரித்தது.

1857இல் சிப்பாய்க் கலகத்தின்போது ஆங்கிலோ இந்தியச் சமூகத்தினர் ஆங்கிலேயர்களுக்குப் பக்கபலமாக நின்றனர். அதற்குப் பிறகே சுங்கம், ரயில்வே, தொலைபேசி போன்ற துறைகளில் இச்சமூகம் தலையெடுத்தது. பெண்கள் டீச்சர்கள் ஆனார்கள்; நிறுவனங்களில் செக்கரட்டரியாக வேலை பார்த்தார்கள்; சினிமாவிலும் நடிக்கத் தொடங்கினார்கள். இடர்கள் எதுவாயினும் இன்பம் ஒன்றே இயல்பு என வாழத் தொடங்கினர்.

இந்த எளிய மனிதர்கள் கொண்ட சமூகத்தின் வரலாறு தமிழில் எழுதப்படவேண்டும் என்ற ஆசையை என்னுடன் பணியாற்றிய ரிச்ச்ர்ட் ஓ கானர்ஸ் என்ற ஆங்கிலோ இந்திய நண்பரிடம் சொன்னேன். அப்படி ஒரு வரலாற்றை எழுத அந்தச் சமூகத்தில் தமிழில் எழுதக்கூடியவர்கள் எவரும் இல்லை. ரிச்சர்ட் ஆங்கிலோ இந்திய சமூகவியல் ஆய்வாளராகப் பெரும்பணி ஆற்றி வருபவர்.

எஸ். முத்தையாவின் சில ஆக்கங்களுக்கு உறுதுணையாக நின்றவர். ‘Anglos in the wind’ என்பது இந்தச் சமூகத்திற்கான ஓர் இதழ். இதன் ஆசிரியரான ஹாரி மெக்லேர் என்பவரை ரிச்சர்ட் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர் நடத்தி வந்த பத்திரிகையின் பிந்தைய இதழ்களை எனக்கு அளித்தார். அந்த இதழ்களில் அதிகம் பங்களித்திருந்தவர்கள் இன்றைய தலைமுறையினர். ரிச்சர்டும் ஹாரியும் இணைந்து சென்னை ஆங்கிலோ இந்தியச் சமூகம் குறித்துப் பத்துக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறார்கள். அவை அனைத்தையும் யூ ட்யூபில் ‘PEPPER WATCHES’ என்ற ஒளியலை வரிசையில் காணலாம்.

ஆங்கிலோ இந்திய இன வரலாறு குறித்த ஆங்கில நூல்களைத் தேடிக்கொண்டிருந்தேன். ஹெர்பர்ட் ஸ்டார்க் என்பவர் எழுதிய ‘HOSTAGES TO INDIA’ என்ற நூலின் பிரதி கிடைத்தது. இந்த நூலை 1926ஆம் ஆண்டு ‘கல்கத்தா ஃபைன் ஆர்ட் காட்டேஜ்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. நூலாசிரியர் ஹெர்பர்ட் ஸ்டார்ஜ் வங்காளத்தின் கல்வித்துறையில் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய இன்னொரு நூல் ‘CALL OF THE BLOOD’.
‘HOSTAGES TO INDIA’ நூலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட முடிவு செய்தேன்.

என்னுடன் சுங்கத் துறையில் பணியாற்றிய அனுராதாவும் நிர்மல்ராஜும் இணைந்து இந்நூலை மொழிபெயர்த்துத் தந்தார்கள்; ‘இந்தியாவின் பிணைக்கைதிகள்’ என்ற பெயரில் சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. ஆங்கிலோ இந்தியச் சமூகம் குறித்த அரிய அழகிய நிழற்படங்களை ஹாரி மெக்லேர் தந்து உதவினார். என் கனவு நிறைவேறியது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘பன்னாட்டு ஆங்கிலோ இந்தியர்களின் கூடுகை’ (INTERNATIONAL ANGLO INDIAN REUNION) என்ற நிகழ்வு ஒன்று நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அத்தகைய நிகழ்வு ஒன்றின் ஒரு பகுதியாக சென்னை லயோலா கல்லூரியில் ஆங்கிலோ இந்திய எழுத்தாளர்களின் கருத்தரங்கம் ஒன்று நடபெற்றது. ANGLO IN THE WIND அமைப்பின் செயலாளர் ஹாரியின் அழைப்பை ஏற்று அந்தக் கருத்தரங்கில் நானும் ஆங்கிலத்தில் உரையாற்றினேன். அன்றைய தினத்தின் வரவு கணக்கற்ற புதிய உள்ளங்கள். ‘STRANGERS ARE MY LOVERS’.

2009இல் சென்னை அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள மியூசியம் தியேட்டரில் நாட்டுப்புற இசை (Country music) நிகழ்ச்சியை ஆங்கிலோ இந்தியச் சமூகம் ஏற்பாடு செய்திருந்தது. ரிச்சர்ட் ஓ கார்னர்ஸ் அழைப்பின் பேரில் நானும் எனது சக சுங்க அதிகாரியான ஸ்ரீதரும் கலந்துகொண்டோம். ‘கன்ட்ரி மியூசிக்’ என்ற இசை அடிநாள் தொட்டே ஆங்கிலோ இந்தியர்களின் ஆவியில் கலந்திருந்தது.

மியூசியம் தியேட்டரில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை சுமார் 550. தியேட்டருக்குள் சுமார் 700 பேர் திரண்டிருந்தனர். எல்லோரும் ஆங்கிலோ இந்தியர்கள் எங்கள் இருவரைத் தவிர. அந்த நிகழ்ச்சிக்கு ‘Blazing Guitars’ (பிளேசிங் கிடார்ஸ்) என்று பெயர் வைத்திருந்தார்கள். கன்ட்ரி மியூசிக் இசைப் பாடல்கள் இயற்கை, காதல், பிரிவு, ரயில்வே, தொழிலாளிகள் குறித்து எழுதப்பட்ட பாடல்களாக இருக்கும்; இல்லத்தரசிகளின் வாழ்க்கையைப் பாடும் பாடல்களும் உண்டு.

இவை உழைக்கும் வர்க்கத்தின் குரல். 19ஆம் நூற்றாண்டு கண்ட இந்த இசை வடிவத்தை இங்கிலாந்தின் மேல்தட்டு வர்க்கம் பொதுவெளியில் அங்கீகரிக்கவில்லை. ஆனால், தனி நபர்கள் இந்த இசையை ரசிக்கவும் செய்தனர். தொடக்க காலத்தில் கிடார் மட்டுமே கன்ட்ரி மியூசிக் நிகழ்வுகளில் இடம்பெற்று வந்த ஒரே இசைக்கருவி. கொஞ்சம் கொஞ்சமாக இன்னும் சில பக்க வாத்தியங்கள் கன்ட்ரி மியூசிக் மேடைகளில் இடம்பிடித்துக் கொண்டன.

‘பிளேசிங் கித்தார்’ நிகழ்வுக்குச் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணைத் தூதரும் வந்திருந்தார். மேடையில் தோன்றிய பாடகர்கள் தலையில் கவ் பாய் (cow boy) தொப்பியும் இடுப்பில் பொம்மைத் துப்பாக்கியும் வைத்திருந்தனர். இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிலரும் இதே வேடத்தில் திரிந்தனர். இடைவேளையின் போது பொம்மைத் துப்பாக்கியுடன் வந்திருந்த ஒருவர் அரங்கத்திற்கு வெளியே உள்ள டீக்கடைக்கு வந்திருந்தார். அவரை ஏதோ கொலைகாரராக அல்லது கேடியாகக் கற்பனை செய்துகொண்ட ஒரு வழிப்போக்கர் போலீசுக்கு போன் செய்துவிட்டார். சில நிமிடங்களில் காவல்துறை படையெடுத்து வந்தது. உண்மை தெரிவதற்குள் அந்த ஆங்கிலோ இந்தியர் ஒரு நவரச நாடகத்தை நடத்தி முடித்துவிட்டார்.

இந்த கன்ட்ரி மியூசிக் பாடல்களை இலங்கை வானொலிதான் ஒலிபரப்பி வந்தது. ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய ஆங்கிலோ இந்தியர்கள் ரேடியோ சிலோனைக் கேட்காத நாள் இருக்காது என்கிறார் ரிச்சர்ட்ஸின் மனைவி ஸீனா.

பொதுவாக ஆங்கிலோ இந்தியர்களின் காலை உணவில் பிரட், முட்டை, பழங்கள் இடம்பெற்றிருக்கும். சென்னையில் இருந்தாலும் பில்டர் காபி பழக்கம் கிடையாது. ஓட்ஸ் அல்லது பிளாக் காபி அருந்துவார்கள். பன்றிக் கறியோ, மாட்டுக் கறியோ பிரதான மதிய உணவு. POKE VINDALOO என்ற வைன் அல்லது வினிகரில் ஊறவைத்த பன்றிக்கறி அவர்களது விசேச உணவு. கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விழா நாட்களில் இஞ்சி, எலுமிச்சை, சிகப்பு மிளகாய், இலவங்கம், ஏலம் முதலியவற்றைக் கொண்டு வீட்டிலேயே ‘ஜிஞ்சர் ஏல்’ தயாரிப்பார்கள். இதை O.T என்று அழைக்கிறார்கள். அதாவது Old Temperance. ரிச்சர்ட்ஸின் மனைவி ஸீனாவுக்கு ஓ.டீ கைவந்த கலை. இன்னும் பத்து நாட்களில் கிறிஸ்துமஸ் வரப்போகிறது. ஸீனாவின் ஓ.டீயும் என்னை நோக்கி ஓடிவரும்.

சென்னையில் ரயில்வே மற்றும் ஐசிஎஃப் (ICF)இல் வேலை பார்த்த ஆங்கிலோ இந்தியர்கள் பெரம்பூர் தூய லூர்து அன்னை ஆலயம் மற்றும் பிரெசென்டேசன் கான்வென்ட் அமைந்திருக்கும் இடம் ஆகியவற்றை மையமாக வைத்துத் தங்களது வாழ்விடங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். பியர் ஷாப் ரோடு, பல்லார்டு தெரு, பாக்ஸன் தெரு முதலிய பெரம்பூர் தெருக்களின் பெயர்களிலேயே ஆங்கிலேய வாசனை வீசுகிறது. ஆங்கிலோ இந்தியர்களும் இங்கு கணிசமான எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள். சென்னை சாந்தோம் பகுதியும் ஆங்கிலோ இந்தியச் சமூகத்தின் அடையாளம் என்று சொல்லலாம்.

மூன்றாவதாக ஆங்கிலோ இந்தியச் சமூகத்தின் அடர்த்தியைப் பறங்கி மலையில் காணலாம். செயின்ட் தாமஸ் மலையின் அடிவாரத்திலிருந்து மேலே செல்லச் செல்ல ஆங்கிலோ இந்தியக் குடும்பங்கள்தான் கண்ணில் படும். பிரிட்டிஷ் இந்தியாவில் ராணுவத்தில் பணியாற்றிய ஆங்கிலேயர்களின் வழித்தோன்றல்கள் வாழ்கிற இடம் இம்மலைப் பகுதி. பல்லாவரத்தில் இயங்கி வந்த ‘Veteran Lines’ ராணுவப் பிரிவில் பணியாற்றிய ஆங்கிலோ இந்தியர்களுக்கும் தாமஸ் மலைக்கும் இடையறாத பிணைப்பு இருந்து வருகிறது.

இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதலே சென்னையின் ஆங்கிலோ இந்தியச் சமூகம் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயரத் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய நாவலாசிரியரான நிக்கோலா மார்ஷ் என்கிற ஆங்கிலோ இந்தியப் பெண் சென்னையிலிருந்து நாடு கடந்தவர். உலகம் முழுவதும் இவரது சுவாரஸ்யமான எழுத்தை ஒரு பெரும் கூட்டம் படித்து மகிழ்ந்து வருகிறது.

தட்டுத் தடுமாறித் தமிழ் பேசும் இந்தச் சமூகத்திலிருந்து தமிழ்த் திரையுலகில் நடிகையாகவும் பிண்ணனிப் பாடகியாகவும் உருவெடுத்திருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. மேடை நாடகங்களில் நடித்துவந்த ஆண்ட்ரியா 2005இல் ‘கண்ட நாள் முதல்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்தார். 2007இல் ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் நடிகையாக அறிமுகமானவர். 2010இல் ‘ஆயிரத்தில் ஒருவன்’, பின்னர் கமலஹாசனின் ‘விஸ்வரூபம்’, வெற்றிமாறனின் ‘வடசென்னை’ என இவரது திரைப்பயணம் தொடர்ந்தது. நடிகையானது விஷயமல்ல, தமிழ்த் திரைப்படங்களில் அவர் பிண்ணனிப் பாடகியாகிப் புகழ்பெற்றது ஆங்கிலோ இந்தியச் சமூகத்தின் கலாசார மாற்றத்தின் நேரடி சாட்சி.

புஷ்பா படத்தில் ஆண்ட்ரியா பாடிய ‘ஊம் சொல்றியா மாமா. ஊகூம் சொல்றியா மாமா’ என்ற தரை லோக்கலான பாடல் வைரல் ஆகியது. ‘தேகமெல்லாம் மோகம் முற்றி திருடப் பார்க்கும் ஆம்பள புத்தி’ என்பது போன்ற வரிகளுக்காக இந்தப் பாடல் சர்ச்சைக்கும் உள்ளானது.

இந்தப் பாடலுக்கு நடனமாடிய நடிகை சமந்தாவும் ஆங்கிலோ இந்தியப் பெண். அவரது அம்மா ஆங்கிலோ இந்தியர். அவரது தாய்மாமன் ஆன்டி மர்ரே சென்னை விமான நிலையத்தில் சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அல்கபர்க் ஆதரவளித்து உருவாக்கிய ஆங்கிலோ இந்தியச் சமூகத்தின் பண்பாடுகள் கரைந்து, ஆண்ட்ரியாவின் தமிழோசை தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இன்று சென்னையில் சுமார் ஆயிரம் ஆங்கிலோ இந்தியக் குடும்பங்கள் இருக்கலாம். அந்தக் குடும்பங்களில் இந்தியத் தன்மை குடியேறியிருக்கலாம். பொது நீரோட்டத்தில் மூழ்கியிருக்கலாம். ஆனால், ஆங்கிலோ இந்தியர்களின் முகத்தில் காணப்படும் கனிவு மட்டும் காணாமல் போகாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...