No menu items!

நீயா நானா ‘வைரல்’ பெண்கள் சொல்வது சரியா?

நீயா நானா ‘வைரல்’ பெண்கள் சொல்வது சரியா?

விவாகரத்து பற்றி ஒளிபரப்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. இதே விவகாரத்தை பேசியிருந்த ‘இறுகப்பற்று’ திரைப்படமும் சமீபத்தில் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. ‘நீயா நானா வைரல்’ பெண்கள் பேசியதுபோல் விவாகரத்து ஒரு தவறான உச்சகட்ட முடிவா? விவாகரத்தானவர்களில் அதிகமானோர் பின்னர் தவறு செய்துவிட்டோம் என்றுதான் உணர்கிறார்களா? விவாகரத்து முடிவுக்கு தம்பதியரின் உறவுகள் முக்கிய காரணமாக அமைகிறார்களா?

வைரல் பெண்மணிகள்

கடந்த ஞாயிறு (28-01-24) அன்று ஒளிபரப்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் ‘மணமுறிவு பெற்ற பெண் Vs சமூகம்’ என்கிற தலைப்பில் இரு பிரிவினர் விவாதித்தார்கள். விவாகரத்து பெற்றவர்கள் தங்கள் எண்ணங்களை, சரியாக சொல்ல வேண்டுமென்றால் வேதனைகளை வெளிப்படுத்தினர். எதிரணியில் இருந்த பொதுமக்கள் விவாகரத்து செய்துகொள்வதை தங்களால் ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பேசியிருந்தனர்.

மாமா மகனை மணந்த பெண்மணி ஒருவர் விவாகரத்து பெற்று ஏழு ஆண்டுகளுக்கு பின்னரும் தனது துணை மீது காதலுடன் இருப்பதை வெளிப்படுத்தியது பலரை நெகழ்ச்சியடைய செய்தது. மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், “நம் இருவருக்கு இடையேயான விவகாரத்தை ஏன் வெளியே கொண்டு சென்றீர்கள். அதனால்தானே இவ்வளவு சிக்கலானது. நம் இருவருக்குள் பேசி தீர்த்திருக்கலாமே, நாம் இருவரும் சேர்ந்து வாழ்த்திருக்கலாமே” என்று அந்த பெண்மணி பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

“விவகாரத்து செய்த பிறகு நாம எடுத்த முடிவு தப்பா போயிட்டதே என்று நீங்கள் யோசித்து இருக்கீங்களா” என்று கோபிநாத் கேட்ட கேள்விக்கு சில பெண்கள் சொன்ன பதில்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தன. அதில் ஒரு பெண் தான் விவாகரத்து செய்தபிறகு பட்ட வேதனை குறித்து பேசி இருந்தது பலரையும் கண்கலங்க வைத்திருந்தது.

“என்னுடைய கணவருக்கு ஆறு மாதங்கள் வேலை இல்லை. அந்த நேரத்தில் நான் அதை பெரியதாக எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய அண்ணன், தம்பிகளும், பெற்றோரும் நீ அவரை விட்டு வந்துவிடு. அவரோடு நீ கஷ்டப்பட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. இனி நாங்களே உனக்கு ஒரு வீடு தருகிறோம். நீ அதில் இருந்துகொள். நாங்கள் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வோம் என்று சொன்னார்கள்.

நானும் அப்போது எனக்குள் இருந்து ஈகோ காரணமாக அவரை விட்டுவிட்டு வந்துவிட்டேன். அதற்குப் பிறகு கொஞ்ச நாளில் என்னுடைய அண்ணனுக்கும் தம்பிக்கும் கல்யாணம் முடிந்தது. அவர்களுடைய திருமணத்திற்கு பிறகு அவர்கள் என்னை வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்லவில்லை. ஆனால், நான் வெளியே போகிற மாதிரி அவர்கள் நடவடிக்கை இருந்தது. அதனால் நான் வெளியே வந்துவிட்டேன். அதற்குப் பிறகு நான் இப்போது ஒரு ஷூ கம்பெனியில் வேலை பார்க்கிறேன். இரவு வந்து பிளவுஸ் ஸ்டிச் பண்ணி கொடுக்கிறேன். இப்போது இப்படி உழைக்கிறேன் ஆனால், அந்த நேரத்தில் நான் என்னுடைய திமிரை விட்டுவிட்டு அவரோடு அந்த நேரத்தில் கொஞ்சம் அட்ஜஸ்மெண்ட் செய்து போயிருந்தால் இப்போது எங்களுக்கு இரண்டு வருமானம் இருந்திருக்கும். நானும் நிம்மதியாக இருந்திருக்கலாம்.

பகலில் எல்லாம் ஓடி ஓடி வேலை செய்யும் போது எனக்கு பெரியதாக வருத்தம் தெரியவில்லை. ஆனால், ராத்திரி நேரத்தில் வீட்டில் இருக்கும்போது தான் அந்த அமைதி என்னை ஒவ்வொரு நாளும் கொல்கிறது. கணவரை விட்டு பிரிந்து வந்தது தப்பு என்று நான் பத்து வருடங்கள் கழித்து புரிந்துகொண்டேன். அவரோடு சேர வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால், அப்போது அவருக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டது. ஒரு ஆறு மாத காலம் வேலை இல்லை என்பதற்காக அவரை பிரிஞ்சு இப்போ கடுமையா வேலை செஞ்சாலும் வாழ்க்கையே வெறுமையா இருக்கிறது. என்னுடைய வீட்டாரின் பேச்சைக் கேட்டு நான் தப்பு பண்ணிவிட்டேன்” என்று உருக்கமாக பேசியிருந்தார். இந்த வீடியோவும் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதுபோல், தனது கணவர் பற்றி மிக சிலாகித்துச் சொன்ன ஒரு டாக்டர் பெண்மணியின் விடியோவும் வைரலாகியுள்ளது. ஆனால், “உங்கள் கணவரோடு நீங்கள் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா?” என்று கோபிநாத் கேட்ட போது, அதை உறுதியாக மறுத்துவிட்டார். ரத்தினச் சுருக்கமாக ஒரே வரியில் ‘ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது’ என்று மிகவும் அழகாகக் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த நிகழ்ச்சியில் பேசிய பெரும்பாலான பெண்கள், விவாகரத்தை தாங்கள் எடுத்த தவறான முடிவாக உணர்வதாகவே குறிப்பிட்டார்கள்.

விவாகரத்து தவறான தீர்வா?

‘ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது’ என்ற டாக்டர் பெண்மணியின் பேச்சு குறித்து, “அறிவு, அழகு, அந்தஸ்து, சார்ந்திருக்கும் தொழில் இப்படி ஏதாவது ஒன்றில் சமபலம் பொருந்திய இருவர் திருமண பந்தத்துக்குள் செல்லும்போது பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்சினை இதுதான். யார் அதிகம் திறமைசாலி, யார் அதிகம் அறிவாளி, யாருடைய தீர்வு சரியானது, யாருடைய முடிவு இறுதியானது என்பதில் எல்லாம் தர்க்கங்கள் இருந்துகொண்டே இருக்கும். ஈகோ பெரிய அளவில் தலைதூக்கும். முக்கியமாக தாம்பத்யம், அதாவது செக்ஸ் வாழ்க்கை பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகும். முதலில் அழைப்பது யார் என்பதில் தொடங்கி விருப்பத்தோடு அதில் உடன்படுவது வரை நிறைய இடத்தில் ஈகோ எட்டிப் பார்க்கும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கிட்டத்தட்ட இருக்காது. இது மிகப்பெரிய அளவில் உளவியல் பிரச்சினைகளை உருவாக்கும். இது கடைசியில் விவாகரத்தில் போய்தான் நிற்கும். அல்லது மன இறுக்கத்தோடு பிள்ளைகளுக்காக பல்லைக் கடித்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டி முடிக்கும் தம்பதிகளும் குறைந்த அளவில் இருப்பார்கள்.

அவர் தனது கணவரைப் பற்றி மிக உயர்வாகவே பேசினார். அவரது சிறந்த பண்புகளை பட்டியலிட்டார். ஆனாலும் முழு மனச்சம்மதத்தோடு இருவரும் பிரிந்திருக்கிறார்கள். இரண்டு அறிவாளிகள் அல்லது திறமைசாலிகள் மிகச்சிறந்த நண்பர்களாக இருக்க முடியுமே தவிர ஒருபோதும் ஆதர்ச தம்பதிகளாக மாற முடியாது” என்கிறார், எழுத்தாளர் சிவகுமார் வெங்கடேசன்.

வழக்கறிஞரும் எழுத்தாளருமான இரா. முருகவேள், “விவாகரத்து, அடல்ட்றி போன்றவை கவர்ச்சிகரமாக தோன்றினாலும் கடும் வேதனையை கொண்டு வருகின்றன. குறிப்பாக பெரும்பாலான பெண்களுக்கு விவாகரத்து விடுதலை தருவதில்லை. கணவனின் தொல்லையில் இருந்து தகப்பன், அண்ணன் தம்பி ஆதிக்கத்தில் பெண்களை தள்ளுகிறது.

இந்திய சமூகங்களின் குடும்ப அமைப்பு, சிறு கூடுகள் போன்ற வீடுகள், அற்ப ஊதியம் ஆகியவை மூச்சுத் திணற வைக்கும் சூழலை உருவாக்குகின்றன. தவிர முற்றிலும் வேறு வகையான இருவர் மண உறவில் இணையும் போது வரும் சிக்கல்கள் தனி. எனவே பிரச்சினை வரத்தான் செய்யும்.

ஆனால், விவாகரத்தின் சுமை முழுவதும் பெண்மீது விழுகிறது. அதிலும் வயது வந்த குழந்தைகள் இருந்தால் இன்னொரு திருமணம் பிரச்சினை ஆகிவிடுகிறது. ஆகிரமிப்பு செய்யாத ஆரோக்கியமான தோழன் என்பது பெரும்பாலும் கனவுதான். காதலர்களும் குடும்பம் உள்ளவர்களாக அமைந்து விட்டால் சித்திரவதை தான்.

ஆண்கள் தங்கள் குழந்தைகளின் மீதான உரிமையை முற்றிலும் இழக்கிறார்கள். இது மிகப் பெரிய இழப்பு.

குடும்பத்துக்கு வெளியே வேறு உறவுகள் கணவன் மனைவி இருவரில் ஒருவருக்கு ஏற்படாத வரை முடிந்தவரை அட்ஜஸ்ட் செய்யப் பார்க்கலாம்.

சமந்தா, தனுஷ் போன்றோரின் வர்க்கம் வேறு. ‘மூணு இடத்தில் கட்டிக் குடுத்தாங்க; மூணு இடத்திலும் சண்டை போட்டுட்டு வந்துட்டா’ என்று ‘காவல் கோட்டம்’ சமூக அமைப்பு முறை வேறு. இன்றைய நகர்ப்புற நடுத்தர குடும்ப அமைப்பு வேறு.

விதி விலக்குகள் எப்போதும் இருக்கத்தான் செய்யும். நசுக்கும் உறவுகளில் இருந்து விடுபட்டு தன் அடையாளத்தை மீட்டெடுத்து வெற்றி கண்டவர்கள் உண்டுதான். இந்த மனஉறுதி உள்ளவர்களுக்கு மேலே சொன்ன எதுவும் பொருந்தாது” என்கிறார்.

எழுத்தாளர் தீபலட்சுமி, “உறவுகளைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடுவதும், அவை மேம்பட வேண்டும் என்று மெனக்கெடுவதும் அவசியம்தான். ஆனால், பிரிய இருவர் முடிவெடுப்பதும் ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றமில்லை. கட்டாயத் திருமணத்தை விட டிவோர்ஸ் ஒன்றும் தப்பில்லை, அது அந்தந்தத் தம்பதியரின் சூழலைப் பொருத்தது என்ற மனநிலை சமூகத்தில் அதிகரிக்கும் போது உறவுகள் சுமையான அழுத்தமாக இருக்காது. இறுகப்பற்ற வேண்டிய அவசியமும் இருக்காது” என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...