No menu items!

சிக்கலுக்கு மறுபெயர் C.A.A.? -ஆதரவு…எதிர்ப்பு…அடுத்து என்ன?

சிக்கலுக்கு மறுபெயர் C.A.A.? -ஆதரவு…எதிர்ப்பு…அடுத்து என்ன?

மத்திய அரசில் துறைமுகம், கப்பல் போக்குவரத்து, நீர்வழித்துறை இணை அமைச்சராக இருப்பவர் சாந்தனு தாக்கூர். இந்த மகானுபாவன், நேர்காணல் ஒன்றில் போகிற போக்கில் தெரிவித்த கருத்து, இப்போது பூகம்ப குலுக்கலை ஏற்படுத்தி வருகிறது.

அப்படி என்ன சொன்னார் அமைச்சர்?

‘சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம், ஏழு நாள்களில் நாடு முழுவதும் முழுவீச்சில் நடைமுறைக்கு வரும். இதற்கு நான் உத்தரவாதம்’ என்பதுதான், இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்த கருத்து.
இந்திய வரலாற்றில் அதிக எதிர்ப்பைச் சந்தித்த சட்டத்திருத்தங்களில் ஒன்று சி.ஏ.ஏ. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் என்னதான் சிக்கல்? இதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு? ஆர்ப்பாட்டம்? கண்டனம்?

1955-ம் ஆண்டு இந்திய குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 2016-ம் ஆண்டு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சி நடந்தது. அப்போது இந்த அளவுக்கு ஆர்ப்பாட்டம், கூச்சல் எதுவும் இருக்கவில்லை. 2019-ம் ஆண்டு, மக்களவையில் 334 எம்.பி.க்களின் ஆதரவுடனும், மாநிலங்களவையில் 125 எம்.பி.க்களின் ஆதரவுடனும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதலும் அளித்துவிட்டார். 2020-ம் ஆண்டு ஜனவரி 10 முதல் சி.ஏ.ஏ நடைமுறைக்கு வந்துள்ளது.

சரி. இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் என்ன சொல்கிறது?

2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்து குடியேறிய 6 வகை சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள், சமணர்கள், கிறிஸ்துவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்பதுதான் இந்த திருத்தச் சட்டத்தின் சாராம்சம்.

அப்படி குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள் சட்டத்துக்கு புறம்பான குடியேறிகளாகக் கருதப்பட மாட்டார்கள். குடியேறிய 11 ஆண்டுகளுக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளில் அவர்கள் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம். போதிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும் கூட அவர்களது குடியுரிமை கோரிக்கை ஏற்கப்படும். சட்டத்துக்குப் புறம்பான குடியேற்றம் தொடர்பாக அவர்கள் மீது ஏற்கெனவே வழக்குகள் இருந்தால் அவை தள்ளுபடி செய்யப்படும். இதுதான் இந்த திருத்தச் சட்டத்தின் முதன்மையான அம்சங்கள்.

‘ஆகா. அருமையான சட்டமாக இருக்கிறதே’ என்று ஆரம்பத்தில் பலர் பூரித்தநிலையில், ‘இந்த திட்டத்தில் மிக கவனமாக முஸ்லீம்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு குதித்து எழுந்தது.
அதாவது சங்கரும், சலீமும் குறிப்பிட்ட காலத்துக்கு முன் இந்தியாவில் ஊடுருவி குடியேறி இருந்தால், அவர்கள் இருவருமே சட்டத்துக்குப் புறம்பான வந்தேறிகள்தான். இந்திய மனைவிகள் மூலம் அவர்கள் குழந்தை பெற்றிருந்தால் அந்த குழந்தையும்கூட சட்டத்துக்குப் புறம்பான வந்தேறிதான்.

ஆனால் தற்போதைய குடியுரிமை திருத்தச் சட்டப்படி, சங்கர் துரிதகதியில், விரைவு வழிப்பாதையில் இந்திய குடிமகனாகி விடுவார். சலீம் தகுதியற்றவர் ஆகிவிடுவார்.

குடியுரிமைக்கான அளவுகோலாக மதம் எப்போதும் பயன்படுத்தப் படுவதில்லை. ஆனால், சி.ஏ.ஏ.வில் குடியுரிமைக்கான அளவுகோலாக மதம் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டதால், உலகளாவிய விமர்சனத்துக்கு இந்தியாவின் சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் இலக்கானது. ‘இந்த திருத்த சட்டம் பாரபட்சமானது’ என ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர் ஆணையர் அலுவலகம் கண்டனம் தெரிவித்தது.

‘இந்த சட்டத் திருத்தம், இந்தியாவில் வாழும் 20 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்களை இரண்டாம்தரக் குடிமக்களாகி விடும். அவர்களை நாடற்றவர்களாக்கி விரட்டுவதற்கு தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) உடன் சேர்ந்து சி.ஏ.ஏ பயன்படும். அதற்காகத்தான் இந்த சி.ஏ.ஏ சட்டத்திருத்தம்’ என்ற கண்டனக் கணைகள் பாய ஆரம்பித்தன.

நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஏற்கெனவே வங்கதேசத்தில் இருந்து வரும் அகதிகளால் அதிக அளவில் அவதிக்குள்ளாகி இருக்கும் அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் அதிக அளவில் ஆர்ப்பாட்டம் வெடித்தது. ‘சி.ஏ.ஏ. சட்டத்தால் வடகிழக்கு மாநிலங்களின் நில உரிமை, அரசியல் உரிமை, கலாச்சாரம் எல்லாம் காலியாகப் போகிறது’ என்ற கூக்கூரல் எழுந்தது.

அலிகார் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் போன்ற கல்விக்கூடங்கள் போர்க்களமாயின. நாடு தழுவிய விதத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 27 உயிர்கள் பறி போயின.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பல கேள்வி பதில்கள் இருக்கின்றன.

‘மதம் தொடர்பான இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியல் அமைப்பின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானதல்லவா?’ என்று சிலர் கேட்க, ‘இந்த திருத்தச் சட்டம் இந்தியர்களுக்கான சட்டமே இல்லை. இந்தியாவுக்குள் வந்து குடியேறுபவர்களுக்கான சட்டம். இதில் மதச்சார்பு, அரசியல் அமைப்பு எங்கிருந்து வந்தது?’ என்று கேட்கிறார்கள் சி.ஏ.ஏ ஆதரவாளர்கள்.

‘பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் சிறுபான்மை இந்து, சீக்கியர் போன்ற 6 மதப்பிரிவினருக்கு குடியுரிமை தருகிறீர்கள். இவர்களில் இஸ்லாமியர்கள் ஏன் இல்லை?’ என்று கேட்டால், ‘இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர்கள் ஏன் துன்புறுத்தப்படப் போகிறார்கள்?’ என்று சி.ஏ.ஏ ஆதரவாளர்கள் பதில் தருகிறார்கள்.

‘ஆனால், பாகிஸ்தானில் அகமதியா முஸ்லீம்களும், ஷியா பிரிவினரும் பர்மா எனப்படும் மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்களும் மதரீதியாக துன்புறுத்தப்படுகிறார்களே? அவர்களை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை?’ எனக் கேட்டால், அதற்கு சி.ஏ.ஏ ஆதரவாளர்கள் தரும் பதில் வேறு விதமாக இருக்கிறது.
‘பர்மா வாழ் ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்திய வம்சாவளி ஆதிகுடிகள் இல்லை. அவர்கள் 7-ம் நூற்றாண்டில் முஸ்லீமாக மாறிய பர்மியர்கள். அல்லது அவர்கள் வங்கதேசத்தில் இருந்து பர்மா சென்று குடியேறியவர்களாக இருக்க வேண்டும். ரோஹிங்கியா அகதிகளுக்கு அடைக்கலம் தருவது பற்றி, இஸ்லாமிய நாடான வங்கதேசமே கவலைப்படவில்லை. அப்படியிருக்கும் போது இந்தியா ஏன் கவலைப்பட வேண்டும்?’ என்பதுதான் சி.ஏ.ஏ ஆதரவாளர்கள் தரும் அட்டகாசமான பதில்.

குடியுரிமை திருத்தச்சட்டத்தின்படி 3 இஸ்லாமிய நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய 6 மதப்பிரிவினர் மட்டுமே குடியுரிமை பெற தகுதியானவர்கள். மற்றபடி இலங்கையைச் சேர்ந்த இந்து, கிறிஸ்துவ தமிழ் அகதிகள், இலங்கை பௌத்தர்கள், பூடான் கிறிஸ்துவர்கள் இந்திய குடியுரிமை பெறத் தகுதியற்றவர்கள். ‘தமிழகத்தின் 24 மாவட்டங்களில் 107 அகதி முகாம்களில் 59,716 இலங்கை அகதிகள் முப்பது ஆண்டுகளாகத் தவிக்கிறார்களே? இவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்குவது பற்றி சி.ஏ.ஏ ஏன் கலைப்படவில்லை? என்ற கேள்விக்கும் சி.ஏ.ஏ ஆதரவாளர்கள் பதில் வைத்திருக்கிறார்கள்.

‘சி.ஏ.ஏ குடியுரிமை திருத்தச் சட்டம், மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கானது. இலங்கையில் தமிழர்கள் மதரீதியாகத் துன்புறுத்தப் படவில்லை. இனரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள்’ என்கிறார்கள் சி.ஏ.ஏ ஆதரவாளர்கள். நல்லவேளை. ‘இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை தந்தால், இலங்கையில் தமிழர்கள் எண்ணிக்கை மேலும் குறைந்துவிடும்’ என்ற கருத்தை இவர்கள் முன்வைக்கவில்லை.

‘சி.ஏ.ஏ சட்டம் இந்தியாவில் வாழும் 20 கோடிக்கும் அதிகமான முஸ்லீம்களுக்கு ஆபத்தாகப் போகிறது’ என்ற கருத்துக்கு, ‘இல்லை. இந்தியாவில் வாழும் 14 சதவிகித முஸ்லீம்களுக்கு எந்த ஆபத்தும் வராது. இது வெறும் 30 ஆயிரம் பேர்கள் தொடர்பான குடியுரிமைப் பிரச்சினை’ என்கிறார்கள் சி.ஏ.ஏ ஆதரவாளர்கள்.

‘இந்தியாவில் அகதிகளாக வந்து அடைக்கலம் கோரும் முஸ்லீம்களுக்கு ஏன் குடியுரிமை தரக்கூடாது?’ என்று கேட்டால், ‘இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் பரம்பரையாக வாழும் பூர்வகுடி மக்களை விட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வங்கதேசத்தில் 1951-ம் ஆண்டு 22 சதவிகிதமாக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை இப்போது 8.5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது’ என்கிறார்கள் சி.ஏ.ஏ ஆதரவாளர்கள்.

சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ‘இந்த திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம்’ என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த விட மாட்டோம்’ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறைகூவல் விடுத்திருந்தார்.

ஆனால், ‘இது முழுக்க முழுக்க மத்திய அரசு தொடர்பான விவகாரம். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மாநில அரசுகளுக்கு ஏது அதிகாரம்? திட்டத்தை நிறைவேற்ற விடாமல் அவர்களால் எப்படித் தடுக்க முடியும்?’ என்கிறார்கள் சி.ஏ.ஏ ஆதரவாளர்கள்.

ஒருகாலத்தில் உலகம் முழுவதும் இருந்து மத துன்புறுத்தலுக்கு ஆளாகி ஓடிவந்த மக்களை அள்ளி அரவணைத்து அவர்களுக்கு அடைக்கலம் தந்த நாடு இந்தியா. அப்படித்தான் மலபார் யூதர்கள், சிரியன் கிறிஸ்துவர்கள், ஈரான் எனப்படும் பெர்சியாவில் இருந்து வந்த பார்சிகள் இந்தியாவில் குடிபுகுந்தனர். ‘இந்தியாவின் அத்தகைய மாண்பை மறுதலிக்கும் சட்டமாக சி.ஏ.ஏ இருக்கிறது’ என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

‘2005ஆம் ஆண்டு எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் வங்கதேசத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார். அப்போதிருந்த காங்கிரஸ் அரசு அவருக்கு குடியுரிமை தரவில்லையே? அப்போது இந்த மாண்பு எங்கே போனது?’ என்று கேட்கிறார்கள் சி.ஏ.ஏ ஆதரவாளர்கள்.

எது எப்படியோ? சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் ஒருவேளை சரியான சட்டமாக இருந்தாலும்கூட, பாரதிய ஜனதா அரசு தவறான நேரத்தில் அதை நடைமுறை படுத்தப்பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

மக்களவை தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம் என்ற நிலையில், பொதுத்தேர்தலுக்கு முன் சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான விதிமுறைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது, சர்ச்சைகளை மேலும் சதிராட வைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...