No menu items!

ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான்; காதுகள் இல்லை – மு.க. ஸ்டாலின் விமர்சனம்

ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான்; காதுகள் இல்லை – மு.க. ஸ்டாலின் விமர்சனம்

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ தொடரில் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில், “ஆளுநர்கள் அரசியலில் தலையிடக்கூடாது என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளதே?” என்ற கேள்விக்கு, “இதுவரையிலான செயல்பாடுகளைப் பார்த்தால், ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு, காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது” என்று ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து, ‘டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, “எதிர்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை, வெளிப்படையாகவே மிரட்டுகிறது. பாஜக என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இது. பிரதமருக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதி இருக்கிறேன். எதிர்க்கட்சிகளை தேர்தல் மூலமாக வெல்லலாமே தவிர விசாரணை ஆணையங்கள் மூலமாக வெல்ல நினைக்கக்கூடாது’ என்று பதிலளித்துள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியது என்ன? – அதிமுக அறிக்கை

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் கழகச் செயலாளர்களும், பிற மாநிலக் கழகச் செயலாளர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், திமுக அரசின் பல்வேறு மக்கள் விரோதச் செயல்களை பட்டிதொட்டியெங்கும் வாழும் மக்களிடம் எடுத்துரைப்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை வழங்கினார்” என்று கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலை வாய் கொழுப்புடன் பேசுகிறார்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுக – பாஜகவினருக்கு இடையில் நடைபெற்று வரும் வார்த்தைப் போர் தொடர்பான கேள்விக்கு, ”பாஜகவுக்கு சகிப்புத்தன்மை இல்லை. அதிமுக, திமுகவில் இருந்து பாஜகவில் யார் வேண்டும் என்றாலும் இணையலாம். ஆனால், பாஜகவில் இருந்து யாரும் மற்ற கட்சியில் இணையக் கூடாதா. ஜனநாயக நாட்டில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது சகஜம் தான். எங்கள் கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்த போது இனித்தது. தற்போது பாஜகவில் இருந்து அதிமுகவில் சேரும் போது கசக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ”பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும். வாய் அடக்கம் தேவை. வாய் கொழுப்புடன் பேசக் கூடாது. மத்தியில் ஆளுகின்றோம் என்ற திமிருடன் பேசக் கூடாது. எடப்பாடி பழனிசாமி படத்தை எரிக்கும் அளவுக்கு பாஜகவினர் தரம் தாழ்த்து போய்விட்டனர். இவர்களை அடக்கி வைக்க வேண்டிய அண்ணாமலை வாய் கொழுப்புடன் பேசுகிறார்” என்றார்.

நானும் ஜெயலலிதா போன்ற தலைவர் தான் என்ற அண்ணாமலையின் பேச்சு தொடர்பான கேள்விக்கு, “மோடியா? இந்த லேடியா? என்று கூறி தனித்து நின்று வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. அவரை போல எவராலும் வர முடியாது. உயர உயர பறந்தாலும் ஊர் பருந்து குருவி ஆகாது” என்று தெரிவித்தார்.

அரசு பள்ளியில் பொருட்களை அடித்து நொறுக்கிய மாணவ – மாணவிகள் இடைநீக்கம்

தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 40 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கடந்த வாரம் அரசு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் ஒரு வகுப்பறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில மாணவர்கள் வகுப்பறையில் இருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி வீசினர். மேலும் கம்பால் மின்விசிறிகள், சுவிட்ச் போர்டு ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். மாணவிகளும் மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தினர்.

இதுகுறித்து அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர், ரகளையில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து நடந்த சம்பவங்களை கூறினார். பின்னர் பள்ளியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று மாணவ-மாணவிகளிடம் எழுதி வாங்கப்பட்டது. இந்தநிலையில் மாணவ-மாணவிகள் ரகளையில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரத்தில் 5 மாணவர், மாணவிகளை 5 நாள் இடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...