No menu items!

5000 மாணவிகளுக்கு விஷம் – ஈரானில் என்ன நடக்கிறது?

5000 மாணவிகளுக்கு விஷம் – ஈரானில் என்ன நடக்கிறது?

உலக மகளிர் தினத்தை கொண்டாடி ஒரு நாள்கூட ஆகவில்லை. அதற்குள் ஈரானில் இருந்து வந்த ஒரு செய்தி ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கி இருக்கிறது. மாணவிகள் கல்வி கற்பதை நிறுத்துவதற்காக, பள்ளியில் அவர்களின் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கலக்கப்பட்டு வந்தது என்பதுதான் அந்த செய்தி. கடந்த பல மாதங்களாக இந்த விஷயம் நடந்து வந்தபோதிலும், ஈரானில் பத்திரிகைகளுக்கு உள்ள கட்டுப்பாடுகளால் மிகத் தாமதமாக இந்த செய்தி வெளியே கசிந்திருக்கிறது..

ஈரானிய மற்றும் மேற்கத்திய செய்தி ஊடகங்கள் இப்போது இதைப் பற்றித்தான் பரபரப்பாக விவாதித்துக்கொண்டு இருக்கின்றன. அந்த ஊடகங்கள் தரும் செய்திகளின்படி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்ட அவர்களில் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது மாணவிகளின் உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. உடனே பாதிப்பு தெரியாத வகையில் விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்துகள் மெல்ல மெல்ல பள்ளி வளாகத்துக்குள் புகைவடிவில் பாய்ச்சப்பட்டிருப்பதாக மேற்கத்திய பத்திரிகைகள் சொல்கின்றன. சுமார் 5000 மாணவிகளின் உடலில் இப்படி விஷம் கலக்கப்பட்டுள்ளது.

பள்ளி செல்லும் வயதில் இருக்கும் மாணவிகளுக்கு யாராவது விஷம் கொடுப்பார்களா? அந்த அளவுக்கு அவர்கள் மீது கோபம் கொண்டிருப்பது யார்? அந்த கோபத்துக்கு என்ன காரணம் என்பதுபோன்ற அடுக்கடுக்கான கேள்விகள் உங்களுக்கு வரலாம்.

அதைப்பற்றி தெரிந்துகொள்ளும் முன் ஈரானில் பெண்களின் நிலையைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம். தற்போது ஆப்கானிஸ்தானில் எப்படி பெண்கள் பல்வேறு விதங்களில் அடக்கி வைக்கப்பட்டு இருக்கிறார்களோ, அதேபோல் ஈரானிலும் ஒரு காலத்தில் பெண்கள் அடக்கி வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு இருந்தது. ஆனால் காலம் காலமாக பெண்கள் அமைப்பினர் செய்த போராட்டங்களால் 2000-ம் ஆண்டுமுதல் இந்த நிலை கொஞ்சம் மாறத் தொடங்கியது.

1976-ம் ஆண்டில் 26 சதவீத பெண்கள் மட்டுமே படிப்பறிவுள்ளவர்களாக இருந்த நிலையில், 2021-ம் ஆண்டில் இது 85 சதவீதமாக உயர்ந்தது. 2011-ம் ஆண்டுமுதல் ஈரானிய பல்கலைக்கழகங்களில் ஆண்களை விட அதிக அளவில் பெண்கள் படிக்கின்றனர். இப்படி படிப்பறிவு கிடைத்ததால் பெண்கள் மத்தியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக முகத்தை மறைத்துக்கொள்ளும் ஹிஜாப்பை ஏன் அணிய வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.

அதேநேரத்தில் பழமைவாதிகளுக்கு இந்த எதிர்ப்புக் குரல் பிடிக்கவில்லை. ஈரானில் மத அடிப்படைவாத ஆட்சி நடப்பதால், ஆட்சியாளர்களைவிட மத குருமார்களுக்கு அங்கே அதிகாரம் அதிகம். அவர்களின் சொல்லைக் கேட்டு பெண்கள் ஹிஜாப்பை அணியவேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தியது. ஆனால் கல்வி கற்ற. சுதந்திரமான சிந்தனை கொண்ட ஈரானிய புதிய தலைமுறை பெண்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஹிஜாப்பை அணிவதும், அணியாமல் இருப்பதும் தங்களின் தனிப்பட்ட உரிமை என்று கூறி ஹிஜாப் அணியாமல் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அப்படி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்களில் ஒருவர்தான் மாஷா அமினி. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஹிஜாப்பை கட்டாயப்படுத்துவதை எதிர்த்து பொது வெளியில் ஹிஜாப் அணியாமல் போராடிய மாஷாவை கைது செய்த ஈரானிய போலீஸார், சிறையில் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. உடல்நிலை பாதிப்புக்கு பின்னர் சிறையில் இருந்து விடுதலையான மாஷா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஹிஜாபுக்கு எதிராக இருந்த பெண்கள் மத்தியில் கதாநாயகியாக மாறினார் மாஷா. போலீஸார் தாக்கியதால்தான் மாஷா இறந்தார் என்று கூறி தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர் பெண்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள்.

மாணவிகளின் இந்த போராட்டத்தைத் தொடர்ந்து பொதுமக்களும் அதில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல் நாடு முழுவதும் இது பரவியது. போலீஸார் தாக்கியதால்தான் மாஷா இறந்தார் என்று போராட்டக்காரர்கள் கூற, கைது செய்யப்பட்டபின்னர் அங்கிருந்த பெண்களுடன் இருந்தபோது, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஆனால் போலீஸாரின் கருத்தை ஏற்காத மாணவிகளும், பொதுமக்களும் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சில மாணவிகள், அயத்துல்லா அலிகாமெனியின் படத்தை தீவைத்து எரித்துள்ளனர். கத்தாரில் கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில்கூட அந்த போராட்டம் எதிரொலித்தது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, உலகக் கோப்பையின்போது ஈரான் வீரர்கள் தேசிய கீதத்தை பாட மறுத்தனர். இதனால் சர்வதேச அளவில் ஈரான் மக்களின் போராட்டம் பேசப்பட்டது. மிகக் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த போராட்டத்தை அரசு கட்டுப்படுத்தியது. இருந்தபோதிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்த போராட்டம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ஹிஜாப்புக்கு எதிரான இந்த போராட்டம் பழமைவாதிகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. ஹிஜாப்புக்கு எதிராடிய போராடிய பெண்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க அவர்கள் நினைத்துள்ளனர். இந்த போராட்டத்தை ஆரம்பித்து வைத்தது மாணவிகள்தான் என்பதால் பெண்கள் கல்வி கற்கவே கூடாது என்று வலியுறுத்தத் தொடங்கினர். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து வந்தனர்.

இந்த சூழலில்தான் மாணவிகளின் உடலில் விஷம் செலுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்குள் விஷ வாயுவை கொஞ்சம் கொஞ்சமாக பாய்ச்சி, மாணவிகள் உடல்நிலையை பழமைவாதிகள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கச் செய்துள்ளதாக அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு அரசும் உடந்தையாக இருப்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.

இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்த மக்கள் போராட்டம், ஈரானில் மீண்டும் தொடங்கி இருக்கிறது. மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து இதுகுறித்து பேசியிருக்கும் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலிகாமெனி, “மாணவிகளுக்கு விஷம் கெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். வேண்டுமென்றே மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருந்தால் இந்த மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரது இந்த கருத்தை ஏற்று மக்கள் போராட்டத்தைக் கைவிடுவார்களா அல்லது போராட்டம் தொடருமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...