No menu items!

இந்தியாவில் Escobarகள்? – மர்ம போதை உலகம்!

இந்தியாவில் Escobarகள்? – மர்ம போதை உலகம்!

இந்தியாவில் நாளுக்குநாள் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது. கடத்தல் தொடர்பாக புதுப்புது பெயர்கள் வெளிவருகின்றன. ‘இந்தியாவின் எஸ்கோபர் யார்?’ என்கிற கேள்விகூட எழுகிறது.

கொக்கையின் என்ற போதைப்பொருள் கடத்தலில், கொடிகட்டிப்பறந்தவர்தான் எஸ்கோபர். அவரைப்பற்றிய ஒரு சிறிய பதிவு இது.

தென் அமெரிக்காவில் கொலம்பியா என்று ஒரு நாடு. அங்கே மெடலின் என்ற நகரத்தில் ஒரு சிறுவன் பிறந்தான். அவனது பெயர் பாப்லோ எமிலியோ எஸ்கோபர் காவ்ரியா. சுருக்கமாக எஸ்கோபர்.

பையனின் அப்பா விவசாயி. அம்மா ஆசிரியை. சிறுவன் சின்ன வயதிலேயே செம துறுதுறு. படிப்பு ஏறவில்லை என்பதால் கல்லறைக் கற்களைத் திருடுகிற சுயவேலை வாய்ப்பில் இறங்கினான் அந்த சிறுவன்.

இறந்தவர்களின் புதைகுழி மேலே நடப்பட்டிருக்கிற கல்லைப்பிடுங்கி அதில் இருக்கிற எழுத்துக்களை அழித்து பனாமா நாட்டு வியாபாரி ஒருவருக்கு விற்க ஆரம்பித்தான் எஸ்கோபர்.

போகப்போக கல்லறைக் கற்கள் குறைய ஆரம்பித்தன. அதனால் கார்களைத் திருடி அக்குவேறு ஆ ணிவேறாகப் பிரித்து விற்க ஆரம்பித்தான் எஸ்கோபர். ஒருமுறை தியாகோ எச்சவரியா என்கிற பெரிய தொழில் அதிபரைக் கடத்திப் போய் 50 ஆயிரம் டாலர்களை எஸ்கோபர் பணயத் தொகையாக வாங்கியபோது, கொலம்பியா நாடு முழுக்க எஸ்கோபரின் பெயர் பிரபலமாகி விட்டது.

இந்தநிலையில், கொக்கையின் என்ற போதைப்பொருளைக் கடத்தி அமெரிக்காவுக்கு விற்றால் குபேரன் ஆகலாம் என்கிற தகவல் எஸ்கோபருக்குத் தெரிய வந்தது.

ஃபாப்லோ ரெஸ்ட்ரெப்போ என்கிறவர்தான், அந்தகாலத்தில் அமெரிக்காவுக்கு கொக்கையின் போதைப் பொருளைக் கடத்திவந்த முன்னோடி. ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை, 40 முதல் 60 கிலோ கொக்கையினை அவர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பார். 1975ஆம் வருஷம் இந்த ஃபாப்லோ ரெஸ்ட்ரெப்போ சுட்டுக் கொல்லப்பட்டு இறந்து போனார்.

அந்த வெற்றிடத்தை நிரப்புகிற வேலையில் இறங்கினார் எஸ்கோபர். கொக்கையின் போதைப் பொருளை பயிர் செய்து, அதை பவுடர் ஆக்கி, அமெரிக்காவுக்கு கடத்த ஆரம்பித்தார்.

கொலம்பஸ் கூட குழம்பிப்போய் திகைத்துப் போய் நிற்கிற அளவுக்கு, அமெரிக்காவுக்கு சரக்குகளைக் கொண்டு போக புதுப்புது வழிகளை எல்லாம் எஸ்கோபர் கண்டுபிடிக்கத் தொடங்கினார்.

அந்தகாலத்தில் சிறுசிறு போதைக் கடத்தல் கும்பல்கள் ஒன்றுகூடி கார்ட்டெல் என்கிற அமைப்பின் கீழ் இயங்கும்.

கார்ட்டெல்களிடம் சொந்தமாக கப்பல்கள், விமானங்கள், படகுகள் இருக்கும். ஒவ்வொரு கார்ட்டெலும் ஒரு குட்டி அரசாங்கம் மாதிரியானது.

எஸ்கோபர் பிறந்த நகரத்தின் பெயர் மெடலின். 1976ஆம் ஆண்டு, சின்னச்சின்ன கொக்கையின் போதைக் கடத்தல் கும்பல்களை தனது தலைமையின் கீழ், மெடலின் என்ற கார்ட்டெலின் கீழ், ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தார் எஸ்கோபர்.

அமெரிக்காவுக்கு கொக்கையின் போதைப் பொருளை கடத்த வசதியாக, கரிபியன் கடலில் அமெரிக்காவின் மியாமி நகருக்குப் பக்கமாக பார்படோஸ் என்ற தீவின் குறிப்பிட்ட ஒரு பகுதியை எஸ்கோபர் விலைக்கு வாங்கினார்.

அங்கே 3,300 அடி நீள ஓடுபாதையுள்ள ஒரு குட்டி விமானதளம், துறைமுகம், படகுத்துறை, ஓர் அடுக்குமாடி ஓட்டல், வீடுகள், 24 மணிநேரமும் குளிரூட்டப்பட்ட ஒரு பெரிய பண்டகசாலை எல்லாம் இருந்தது. அங்கே இருந்து மியாமி நகரத்துக்கு கொக்கையின் போதைப் பொருளை எஸ்கோபர் கடத்த, பணம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டு என்று கொட்ட ஆரம்பித்தது.

சொந்தநாடான கொலம்பியாவில் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஓர் இடத்தை வாங்கி ஹெசியந்தா நாபோலிஸ் என்கிற மாளிகையைக் கட்டினார் எஸ்கோபர். அதைச் சுற்றி ஒரு உயிரியல் காட்சி சாலை, சிலைகளுடன் கூடிய ஒரு பெரிய பூங்கா, ஒரு பெரிய ஏரி, நீருற்று எல்லாமே உண்டு. மெடலின் கார்ட்டெலைச் சேர்ந்தவர்களின் குடும்பங்கள் தங்க அடுக்குமாடி வீடுகள், மருத்துவமனை, காய்கறித் தோட்டம் கூட அங்கே இருந்தது.

கொலம்பியாவில் ஒருமுறை எஸ்கோபர் ஏறிப்போன காரை போலீஸ் அதிகாரி ஒருவர் மடக்கி சோதனை போட்டார். காரில் ஸ்பேர் டயருக்கு உள்ளே இருந்த 39 கிலோ கொக்கையின் போதைப் பொருள் பிடிபட்டது. அதை பறிமுதல் செய்து, எஸ்கோபர் மீது அந்த காவல்துறை அதிகாரி வழக்குப் போட்டார்.

இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தபோது, தீர்ப்பு சொல்ல இருந்த நீதிபதி மாற்றப்பட்டு, எஸ்கோபருக்கு தோதாக, லஞ்சம் வாங்கும் நீதிபதி ஒருவர் போடப்பட்டார். அவர் எஸ்கோபரை விடுதலை செய்தார். எஸ்கோபர் மேல் வழக்குத் தொடுத்த காவல்துறை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொக்கையின் கடத்தலில், எஸ்கோபர் இப்போது கிலோ கணக்கில் இருந்து டன் கணக்குக்கு மாறினார்.
1978ஆம் ஆண்டு எஸ்கோபரிடம் 19 டன் கொக்கையின் இருந்தது. 1980களில் 70ல் இருந்து 80 டன்!

உலக அளவிலே மொத்த கொக்கையின் கடத்தலில் 80 சதவிகிதத்தை எஸ்கோபரின் மெடலின் கார்ட்டெல்தான் நடத்தியது. எஸ்கோபரின் ஒருநாள் வருமானம் மட்டும் ஏறத்தாழ 50 மில்லியன் டாலர்!

ஃபோர்ப்ஸ் என்னும் அமெரிக்க பத்திரிகை வெளியிட்ட தகவலின்படி, லத்தீன் அமெரிக்காவில் அந்த நேரம் மிகப்பெரிய பணக்காரர் எஸ்கோபர்தான். ஒரு கட்டத்தில் அவரது சொத்து மதிப்பு 37 பில்லியன் டாலராக இருந்தது. ஒரு பில்லியன் என்பது 100 கோடி.

பணக்கட்டுகளுக்கு ரப்பர் பேண்ட் போட, ஒரு வாரத்துக்கு ரப்பர் பேண்ட்டுகளுக்காக மட்டும் ஆயிரம் டாலர்களை செலவு செய்தார் எஸ்கோபர். மூட்டை மூட்டையாகக் குவிந்த பணத்தை எண்ணக்கூட முடியாமல் அவர் தவித்தார்.

எஸ்கோபரின் மகள் ஒருநாள், ‘அப்பா குளிருதுப்பா’ என்று சொன்னதற்காக, ‘பல லட்சம் டாலர் ரூபாய் நோட்டுகளை நெருப்பில் போட்டு எரித்து குளிர்காய வைத்தவர் எஸ்கோபர்.

எஸ்கோபரின் குடோனில் குவிந்து கிடக்கும் பணத்தில் பத்து சதவிகிதம் எலி கடித்து சேதமாகி விடும். ஆனால் அதைப்பற்றி எஸ்கோபர் கவலைப்படவே மாட்டார்.

போதைக் கடத்தலில் எஸ்கோபர் பயன்படுத்தும் புகழ்பெற்ற குறிக்கோள் வாசகம் ஒன்று இருந்தது. ‘சில்வர் ஆர் லீடு?’ (‘வெள்ளியா ஈயமா?’) என்கிற வாசகம் அது.

‘நான் தருகிற வெள்ளிப்பணத்தை லஞ்சமாக வாங்கிக் கொண்டு விலகிப்போய்விடு. இல்லாவிட்டால் ஈயத்தில் செய்த துப்பாக்கித் தோட்டா உன்மேலே பாயும்’ என்பதுதான் அந்த குறிக்கோள் வாசகத்துக்கு அர்த்தம்.

இந்த குறிக்கோள் வாசகத்தை சமர்த்தாகப் புரிந்துகொண்ட சுங்கத்துறை, காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு சைலண்ட் ஆனார்கள். எதிர்த்தவர்கள் துப்பாக்கிச் சத்தத்துக்குப் பிறகு சைலண்ட் ஆனார்கள்.

1982ஆம் வருஷம் எஸ்கோபர், லிபரல் அல்டர்னேடிவ் கட்சியில் முக்கிய பொறுப்புக்கு வந்தார். அவருடைய பினாமி ஒருவர், அட்லெட்டிகோ நேஷனல் என்கிற கால்பந்தாட்ட அணியை சொந்தமாக வைத்திருந்தார். அந்த அணி, தென் அமெரிக்க கோபா கால்பந்து போட்டியிலே வெற்றிக் கோப்பையைக்கூட வென்றது.

எஸ்கோபர் ஏழை எளிய மலைவாழ் மக்களுக்காக நிறைய வீடுகள், ஃபுட்பால் மைதானங்களை கட்டிக் கொடுத்தார்.

எஸ்கோபர், கொக்கையின் போதைகடத்தல் மன்னனாக இருந்தாலும், கொலம்பியா நாட்டில் பெரும்பகுதி மக்களிடம் அவருக்கு ரொம்ப நல்லபேர் இருந்தது. இருப்பவர்களிடம் இருந்து பறித்து இல்லாதவர்களுக்குக் கொடுக்கும், ஏழைப் பங்காளனாக, ராபின்ஹூட்டாக மக்கள் அவரைப் பார்த்தார்கள்.

கொக்கையின் போதைக் கடத்தலில் எஸ்கோபரின் மெடலின் கார்ட்டெலுக்குப் போட்டியாக, கேலி என்கிற கார்ட்டெல் இருந்தது. இந்த இரண்டு கார்ட்டெல்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடக்கும். பலபேர் கொல்லப்படுவார்கள்.

1989ஆம் ஆண்டு, கொலம்பியாவில் பாதுகாப்புத்துறை தலைமையக கட்டிடம் மீது தீவிரவாதிகள் நடத்திய லாரிகுண்டு தாக்குதல், ஏவியன்கா பிளைட் 203 என்கிற விமான குண்டுவெடிப்பு ஆகிய 2 சம்பவங்களுக்கும் எஸ்கோபர்தான் காரணம் என்று அவர் மேல் குற்றச்சாட்டு பாய்ந்தது.

1991ஆம் ஆண்டில் மட்டும், போதைக் கடத்தல் கார்ட்டெல்களுக்கு இடையில் நடந்த மோதலில், கடத்தல் புள்ளிகள், நீதிபதிகள், காவல்துறை, சுங்கத்துறை அதிகாரிகள் என்று
25 ஆயிரத்து 100 பேர் கொல்லப்பட்டார்கள்.

கொலம்பியா நாட்டு அதிபர் சீசர் காவ்ரியா, எஸ்கோபரை சரணடையுமாறு வற்புறுத்த, அவரது வேண்டுகோளை ஏற்று, 1991ஆம் வருஷம் எஸ்கோபர் தானாக முன்வந்து சரணடைந்தார். அவருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை கிடைத்தது.

‘நான் இருக்கப் போகும் சிறையை நானே வடிவமைத்து(?!) கட்டிக் கொள்கிறேன்’ என்றார் எஸ்கோபர். அதன்படி ‘லா கேதத்ரால்’ என்ற நவீன சிறைக்கூடம் உருவானது.

அந்த சிறைக்குள்ளே மதுபான விடுதி, உணவுவிடுதி, அருவி, ஜக்குசி குளியல் வசதி, ஜிம், மசாஜ் பார்லர், சிறிய கால்பந்து மைதானம், பொம்மை வீடு எல்லாமே உண்டு.

எஸ்கோபர் ‘சிறைக்குப் போன பிறகும் கொலம்பியாவில் குற்றச்செயல்கள், போதை கடத்தல் மோதல்கள் ஓயவில்லை. 1992ஆம் ஆண்டில் மட்டும் 600 போலீஸ்காரர்கள் உள்பட, 27 ஆயிரத்து 100 பேர் கொல்லப்பட்டார்கள்.

1992ஆம் வருஷம், இந்த ‘லா கேதத்ரால்’ சொந்த சிறைகூடத்தில் இருந்து எஸ்கோபர் தப்பி தலைமறைவானார். அவரைத் தேடி நாடு முழுக்க பெரிய அளவில் மனித வேட்டை நடந்தது.

கொலம்பியா நாட்டு சிறப்பு போலீசார், எஸ்கோபருக்கு எதிரான கேலி கார்ட்டெலைச் சேர்ந்த குண்டர்கள், அமெரிக்க ராணுவத்தின் சீல், டெல்டா, சென்ட்ரா ஸ்பைக் குழு இப்படி பல தரப்பு படைப்பிரிவுகள் எஸ்கோபரைத் தேட ஆரம்பித்தன.

எஸ்கோபரை பிடிக்க முடியாத ஆத்திரத்தில் அவரது உறவுக்காரர்கள், நண்பர்கள் என்று 300 பேர் வரை கொல்லப்பட்டார்கள். எஸ்கோபரின் மெடலின் கார்ட்டெல்லுக்குச் சொந்தமான சொத்துகள் சூறையாடப்பட்டன.

1993ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம்தேதி எஸ்கோபர் பதுங்கியிருந்த வீட்டை கொலம்பியா நாட்டு போதைத் தடுப்பு சிறப்பு அதிரடிப்படை கண்டுபிடித்து சுற்றிவளைத்தது.

எஸ்கோபர், வீட்டின்கூரை மேலே ஏறி அடுத்தவீட்டு கூரைமேலே தாவிக்குதித்து தப்ப முயன்றபோது காவல்துறை சுட்டது.

எஸ்கோபரின் இடுப்பு, வயிறு, காலில் குண்டுகள் பாய்ந்தன. ஒரு குண்டு தலையைத் துளைத்ததில் எஸ்கோபர் இறந்து போனார். எஸ்கோபர் தன்னைத்தானே தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்கிற தகவலும் உண்டு.

எஸ்கோபர் பலியான டிசம்பர் 2ஆம்தேதிக்கு முந்தைய நாள்தான் அவரது 44ஆவது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்கோபரின் இறுதி ஊர்வலத்தில் 25 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டார்கள்.
எஸ்கோபரின் மனைவி மரியா விக்டோரியா, கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட அதே ஆண்டில் இறந்து போனார். எஸ்கோபரின் சொத்துகள் பல பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மிச்சமீதி சொத்துக்களை அவரது பிள்ளைகள் பிரித்துக் கொண்டார்கள்.

எஸ்கோபரின், ஹெசியந்தா நேபோலிஸ் மாளிகையும், அதைச் சுற்றியிருந்த 20 சதுரகிலோ மீட்டர் பரப்பளவும் ஒரு கேளிக்கைப்பூங்காவாக மாற்றப்பட்டது.

போதைக் கடத்தல் மன்னன், கொக்கையின் கோமான் எஸ்கோபரின் வாழ்க்கையைப் பின்னணியாக வைத்து இதுவரை 7 திரைப்படங்கள் வந்திருக்கின்றன.

இன்றைக்கும் கூட கொக்கையின் என்றால் கொலம்பியா நாடு. கொலம்பியா நாடு என்றால் எஸ்கோபர்தான். அந்த அளவுக்கு தன்னுடைய பெயரை நிலைநாட்டிவிட்டுப் போய்விட்டார் இந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன்.

தற்போது நமது இந்தியாவிலும் போதைக் கடத்தல் பேர்வழிகள் பிரபலமாகி, தேடப்பட்டு வருகிறார்கள். இப்படியே போனால், வருங்காலத்தில் இந்தியாவிலும்கூட எஸ்கோபர்கள் உருவாகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...