No menu items!

மாறிய இயக்குநர்…, டப்பிங் பேச மறுத்த ஜனகராஜ் – குணா ரகசியங்கள்!

மாறிய இயக்குநர்…, டப்பிங் பேச மறுத்த ஜனகராஜ் – குணா ரகசியங்கள்!

‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தின் வெற்றிக்கு பிறகு, கமல் நடித்த குணா திரைப்படம் ரசிகர்களிடையே மீண்டும் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த சூழலில் குணா திரைப்படத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை அப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், இயக்குநருமான ராசி. அழகப்பன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்…

அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் ஆகிய படங்களின் கமர்ஷியல் வெற்றிக்குப் பிறகு, வித்தியாசமான ஒரு கலைப் படத்தை எடுக்க கமல் விரும்பினார். இதற்கான முயற்சியின் விளைவுதான் குணா திரைப்படம். இப்படத்துக்காக கமல் உடல் எடையைக் குறைப்பது, உடல் நிறத்தை குறைப்பது என பல மாற்றங்களைச் செய்தார்.

குணா திரைப்படத்தை முதலில் மலையாள இயக்குநரான சிபி மலையில்தான் இயக்குவதாக இருந்தது. இப்படத்தின் கதை விவாதங்கள் மற்றும் லொகேஷன் தேடும் பணிகளில் ஆரம்ப காலத்தில் இவரும் கமலுடன் பணியாற்றினார். ஆனால் பிறகு சில காரணங்களால் குணா படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அதிலிருந்து விலகினார்.

குணா திரைப்படத்தின் படப்பிடிப்பை முதலில் குணசீலம் பகுதியில்தான் நடத்துவதாக இருந்தது. ஆனால் குளுமையான பகுதியில் படத்தை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த கமல், கொடைக்கானலில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டார்.

இயக்குநர் ராசி அழகப்பன், சந்தான பாரதியின் சகோதரரும் நடிகருமான சிவாஜி ஆகிய 2 பேர் மட்டுமே இப்படத்தின் உதவி இயக்குநர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.

குணா படத்தில் சிபிஐ அதிகாரியாக முக்கிய வேடத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடித்துள்ளார். அவருக்கு சுவாசப் பிரச்சினை இருந்தது. அதனால் மலைப் பகுதிகளில் படப்பிடிப்பில் பங்கேற்பது கடினம் என்று கமலிடம் எஸ்.பி.பி கூறியிருந்தார். ஆனால் எஸ்.பி.பிதான் இந்த வேடத்தில் நடிக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த கமல், அதில் எஸ்.பி.பியின் கதாபாத்திரத்துக்கும் சுவாசப் பிரச்சினை இருப்பதுபோல் கதையை அமைத்தார்.

குணா குகைக்கு டெவில்ஸ் கிச்சன் என்பதுதான் முன்பு பெயராக இருந்தது. ஆபத்தான அந்த பகுதியில் விழுந்தால் உயிருக்கே ஆபத்து என்று கமலிடம் அந்த இடத்தைக் காட்டிய ஜோசப் என்ற வழிகாட்டி எச்சரித்துள்ளார். ஆனால் கமல் அந்த இடத்தில்தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார். படப்பிடிப்பு குழுவினரில் அந்த குகைக்குள் முதலில் இறங்கியவர் கமல்ஹாசன்.

இப்படத்தின் ஷூட்டிங்கின்போது சண்டைப் பயிற்சியாளர் விக்ரம் தர்மாவின் குழுவைச் சேர்ந்த 10 சண்டைப் பயிற்சியாளர்களை கமல் உடன் வைத்திருந்தார். குணா குகையின் மீது ஒரு ராட்டிணத்தைப் பொருதி, படக்குழுவினரை குகைக்குள் கொண்டுசெல்லும் முயற்சிக்கு அவர்கள்தான் உதவியாக இருந்திருக்கிறார்கள்.

குகைக்குள் படப்பிடிப்பு நடக்கும்போது உள்ளே இருப்பவர்கள் சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். வேகவைத்த சிக்கன் துண்டுகள் மற்றும் பிஸ்கெட்களை மட்டுமே அவர்கள் சாப்பிட்டு இருக்கிறார்கள்.

குணா படத்தின் டப்பிங்கின்போது ஜனகராஜுக்கும் இயக்குநர் சந்தான பாரதி – சிவாஜி சகோதரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பிறகு அது கைகலப்பில் முடிந்துள்ளது. அதனால் படத்தின் டப்பிங்குக்கு வர ஜனகராஜ் மறுத்துள்ளார். இயக்குநர்கள் சங்கம் வரை இப்பிரச்சினை சென்றிருக்கிறது. பிறகுதான் ஜனகராஜ் டப்பிங் பேசியிருக்கிறார். இந்த சம்பவத்துக்கு பிறகு ஜனகராஜை தனது திரைப்படங்களில் நடிக்கவைப்பதை கமல்ஹாசன் தவிர்த்தார். ஜனகராஜின் சினிமா வாழ்க்கையில் சரிவு ஏற்பட தொடங்கியது.

குணா படம் வெளியான அதே காலகட்டத்தில் ரஜினி நடித்த தளபதி படம் வெளியானது. அப்போதைய சூழலில் தளபதி ஹிட் அடிக்க, குணா வசூலில் சொதப்பியது. ஆனால் வசூல் ரீதியாக பெரிய சாதனை படைக்காவிட்டாலும், விமர்சன ரீதியாக குணா நல்ல பெயர் வாங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...