No menu items!

ஆண்மை விருத்தி: கண்டாமிருகங்களுக்கு என்ன சம்பந்தம்? – நோயல் நடேசன்

ஆண்மை விருத்தி: கண்டாமிருகங்களுக்கு என்ன சம்பந்தம்? – நோயல் நடேசன்

எனது பாடசாலை நண்பரான டாக்டர் திருச்செல்வத்துடன் இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்தேன். பலவகையில் வித்தியாசமான அனுபவம். இதுவரையிலும் நாம் பார்த்த இந்தியாவாக இந்தப் பிரதேசம் இருக்கவில்லை.

இந்தியாவின் ஏழு தென் கிழக்கு மாநிலங்கள். அத்துடன் சிக்கிம் சேர்ந்து எட்டாகும். ஆரம்ப காலங்களில் ஒன்றாக இருந்து பிற்காலத்தில் பிரிக்கப்பட்டவை. இவை மொழி, கலாச்சாரம், மதம், மக்கள் உருவ அமைப்பில் மற்றைய இந்தியாவிலிருந்து மாறுபட்டது. பெரும்பாலானவர்கள் பர்மிய இன முகச் சாயல் கொண்டவர்கள். இதுவரையில் புவியியல் சார்ந்து தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததால், பொருளாதார முன்னேற்றம் குறைவு. ஆனால், தற்காலத்தில் பாதைகள், பாடசாலைகள் வேகமாக அமைக்கப்படுகிறது.

நான் அசாம், மேகாலயா, அருணாசலப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு சென்றேன். அருணாசலப் பிரதேசத்திற்குப் போகவேண்டுமென்றபோது, வெளிநாட்டவரான எனக்கு விசேட அனுமதி, மத்திய அரசிடமிருந்து எடுக்கவேண்டும் என்றார்கள். அதற்காக, எனது புகைப்படத்துடன், நான் சமீபத்தில் பாகிஸ்தான் போகவில்லை; அங்கு எனது உறவினர் எவருமில்லை, தொடர்புமில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பல தகவல்களை எனது டெல்லி முகவரிடம் கொடுத்தேன்.

மெல்பனில் இருந்து தனியாக புறப்பட்டேன். டாக்டர் திருச்செல்வத்தை சென்னையில் சேர்த்துக்கொண்டேன். அவர் பல காலமாக ஆதார் கார்டுடன் இந்தியாவில் வாழ்பவர். எனது பயணத்திலிருந்த பல கஷ்டங்கள் அவருக்குத் தெரியாது. ஏன் எனக்குக் கூடத் தெரியாது.

ஏற்கனவே குளிருடுப்புகள், நடப்பதற்கான விசேட பூட்ஸ், லைட் மற்றும் பலவற்றை கொண்டு வர வேண்டுமென்றார்கள். நான் மெல்பனில் பார்க்காத குளிரா என்ற அலட்சியத்தில் எதுவும் கொண்டு போகாது போனேன். ஆனால், நான் போட்டிருந்த காலணி சரியானது. எனது நண்பருக்கு, மனைவி புதிதாக தோல் காலணி வாங்கி கொடுத்திருந்தார். நான் இது சரி வராது எனச் சொன்னபோதும், அவர், அது வசதியாக இருக்கிறது என்றார்.

சென்னையில் ஏறியபோது நாங்கள் ஏற்கனவே இன்டர்நெட்டில் இருக்கைகள் பதிவு செய்திருக்க வேண்டும் எனச் சொன்னார்கள். பின்பு 400 இந்திய ரூபாய்கள் கொடுத்ததும் எங்களை அனுமதித்தார்கள்.

எனது விமான இருக்கையின் பக்கத்தில் ஒரு வயதான மலையாளி அமர்ந்திருந்தார். அவர், தாங்கள் 40 பேர் அசாம், மேகாலயா சுற்றுலா போவதாகவும், அதற்காகச் சமையல்காரர் இருவரையும் அழைத்துப் போவதாகவும் சொன்னார். சமையல்காரரை அழைத்துக்கொண்டு ஊர் சுற்றுவது உலகத்தில் இந்தியாவில் மட்டுமே நடக்கும் அதிசயமாகத் தெரிந்தது. ஒரு விதத்தில் ஆச்சரியமாக இருந்தது. அதே நேரத்தில் ஆனந்தமாக தங்களது இடியப்பம், புட்டு, பலாப்பழம் என உணவுண்டு, மம்மூட்டியின் படத்தைப் பார்த்து, ஜேசுதாசின் பாட்டைக் கேட்டபடி அவர்கள் பஸ்சில் போவதை பொறாமையுடன் அவதானிக்க முடிந்தது. அத்துடன் நட்பாக, என்னையும் தங்களுடன் சேர்த்துக்கொள்வதாகச் சொன்னார். சிரித்து நன்றி சொன்னேன்

அசாமின் தலைநகரமான குவஹாத்திக்கு வந்து சேர்ந்தபோது மிகவும் அழகான விமான நிலையமாகத் தெரிந்தது. முழு வடகிழக்கு இந்தியாவுக்கு இதுவே பிரதான விமான நிலையம். எங்களை அழைத்துச் செல்பவர் சிறிது நேரம் வரவில்லை. பேய்க்குப் பேன் பார்த்தது போல் முழித்தோம் – அசாமிய மொழி தெரியாது. இந்தி புரியாது.

எனது பயணத்தை ஒழுங்கு செய்தவரைத் தொடர்புகொண்ட சிறிது நேரத்தில், வெற்றிலையை வாயில் மென்றவாறு ஒரு இளைஞன் வந்தான். வந்தவன் அசாமியராகத் தெரியவில்லை. இளைஞன் என்றாலும், வெற்றிலை போட்டு கார் கண்ணாடியை தொடர்ச்சியாக திறந்தபடி துப்பிக்கொண்டிருந்தான். பல வட இந்தியருக்கு இந்த பழக்கம் உள்ளது. ஆனால், இந்த இளைஞர் வங்காள தேசத்தவர் என ஊகித்தேன்.

குவஹாத்தியில் இரண்டு நாட்கள் தங்குவதற்கு ஏற்பாடாகி இருந்தது. எங்களது விடுதியிலிருந்து பார்க்க பிரம்மபுத்திரா ஆறு கீழே ஓடுவது தெரியும். குவஹாத்தி நகர் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் உள்ளது. நகருடாக பிரம்மபுத்திரா ஆறு ஓடுகிறது. பக்கங்களில் மலைக்குன்றுகள் கண்டியை நினைவுக்குக் கொண்டுவந்தது.

முகாலய மன்னர்களால் இறுதிவரையும் கைப்பற்ற முடியாத பகுதி, அசாம். பலமுறை படை எடுத்தும் தோற்றார்கள் என்ற செய்தி தெரிந்தது. நாங்கள் குவஹாத்தியில் உள்ள அருங்காட்சியகம் சென்றபோது அங்குள்ள சிற்பங்களில் பல ஆண்- பெண் நிர்வாண மற்றும் கூடலைக் காட்டும் சிற்பங்களிருந்தன. அந்த அருங்காட்சியகத்தில் அசாம் பற்றிய அதிகமான தகவல்களைப் புரிந்துகொள்ள முடிந்தது.

மதியத்தில் அங்குள்ள பிரசித்திபெற்ற, நமது மொழியில் காமாச்சி எனப்பெயர் பெற்ற (Kamakhya Temple) அம்மன் கோவிலுக்குச் சென்றோம். அந்தக் கோவில் புதுமையானது. பெண்களுக்கு வரும் மாதவிடாயை, மழைக்குப் படிமமாக்கிய கோவில். அங்கு ஆடு வெட்டப்பட்டு இரத்தத்தினால் பூசை நடக்கிறது. ஆடு வெட்டும் இடத்தை நான் உயரத்தில் ஏறி நின்று பார்த்தேன். தொடர்ச்சியாக வரிசையில் ஆடுகள் கொண்டுவரப்பட்டு கத்தரிக்காயின் முகிழ்ப்பகுதி வெட்டுவதுபோல் கழுத்து துண்டிக்கப்பட்டது.

ஏனோ ஆடுகள் அசாமில் சிறிதாக இருக்கின்றன. தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் வேள்விக்காக வெட்டப்படும் ஆடுகள் கொழுத்து வளர்ந்திருக்கும். ஊரில் வேலை செய்யாது உடல் பெருத்தவர்களை, “என்னடா வேள்விக் கிடாய்போல் வளர்ந்ததுதான் மிச்சம்“ என்ற பேசுவதை கேட்டிருப்போம்.

பிரம்மபுத்திரா நதியில் இரு மணி நேரம் ஒரு படகில் போய் வரலாம் எனப் புறப்பட்டோம். பிரம்மபுத்திரா இந்தியாவில் அகலமானது. அத்துடன் அதிக நீர் கொண்டுள்ளது. படகில் நாங்கள் சென்றபோது அங்கு பிறந்தநாள் விழா நடந்தது. இந்திப் பாட்டுகள் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கெங்கும் ஒலிக்க எங்கள் ஒரு நாள் பயணம் முடிவுக்கு வந்தது.

இந்தப் பயணத்தில் அசாமில் காஞ்சிரங்கா (Kaziranka National Forest) வனத்திற்குப் போவது எனது இலக்காக இருந்தது. ஒரு மிருக வைத்தியராக எங்கு போனாலும் வன விலங்குகளைப் பார்ப்பது எனது விருப்பம்.

இந்திய ஒற்றைக்கொம்பன் காண்டாமிருகம் ஆசியாவிற்கானது. இது ஆப்பிரிக்கா காண்டாமிருகத்திலிருந்து வேறுபட்டது. குதிரை இனத்திற்கு உறவான இந்த மிருகம் சாதுவானது. புல் மேயும் தாவர பட்சணி. இலை குழை தின்னும். பார்ப்பதற்கு அக்கால ரோம வீரர்களிடமிருந்து, அவர்களது கேடயத்தை இரவல் வாங்கி அணிந்த தோற்றம் கொண்ட தோற்பகுதியை கொண்டது. அதைவிட ஒரு முக்கிய வித்தியாசம், மற்றை தாவர பட்சணிகள் போலல்லாது தனிமையாகத் திரியும்.

தாவர பட்சணிகள், உயிருக்குப் பயந்து ஒற்றுமையாக இருப்பன. யானைகள் கூட்டமாகவே திரியும். இனப்பெருக்க காலத்தில் மட்டுமே ஆண் யானை பிரிந்து திரியும். ஆனால், இந்த ஒற்றைக்கொம்பன் காண்டாமிருகம் ஆணும் சரி பெண்ணும் சரி ஒற்றையாகத் திரியும்.

காண்டாமிருகங்களை சாம்பல், கறுப்பு நிறங்களில் நான் கண்டுள்ளேன். நேபாளத்தில் சித்துவான் வனத்தில் சாம்பல் நிறத்தில் படுத்துக் கிடந்தது. அதை நெருங்கிப் பார்க்க முடியவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் கொம்புள்ளது. ஆனால், அவை சாதுவானவை. தங்களிடையே உடலுறவுக் காலத்தில் சண்டை பிடிக்கும்போது குதிரைகள் போல் முன் பற்களால் கடிக்கும். மோப்ப சக்தியும் குரலால் எழுப்பும் ஓசையும் இனப்பெருக்க காலத்திற்கு திசைகாட்டிகளாக உதவும்.  15 மாதங்கள் கர்ப்ப காலம். அதன்பின், பெண் காண்டாமிருகம் நான்கு வருடங்கள் கன்றோடு திரியும். அக்காலத்தில் ஆணை நெருங்கவிடாது.

காண்டாமிருகம், 45-47 வருடங்கள் உயிர் வாழும். மனிதர்கள்போல் பல வருடங்கள் வாழ்வதால் தமக்கு உணவு கிடைக்கும் இடங்களை அவை தனியாகவே கண்டுபிடித்து அவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும். மிகவும் தேர்ந்த மோப்ப சக்தி உள்ளது.

ஒற்றைக்கொம்பன் காண்டாமிருகம், சிந்து நதி பிரதேசத்திலிருந்ததற்கான அடையாளமாக அங்கு எடுக்கப்பட்ட பசுபதி முத்திரையில் உள்ளது. தற்பொழுது சிந்து நதிக்கரையில் இருந்தவர்கள், அவர்களது நாகரீகம், மொழி எங்கு போனது என்று திணறுவதுபோல் அக்கால மிருகங்களும் அழிந்துவிட்டன. குஜராத்தில் ஒரு கோவிலில் இந்து பெண் தெய்வத்தின் (Dhavdi) வாகனமாக ஒற்றைக்கொம்பன் காண்டாமிருகம் உள்ளது.

ஒரு காலத்தில் கங்கை சமவௌியில் ஏராளமாக அலைந்த காண்டாமிருகங்கள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டதால் அருகி நூற்றுக்கணக்கில் வந்தன. அதனால், 1910ஆம் ஆண்டளவில் சட்டரீதியாக வேட்டையாடல் தடைசெய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்டன. வேட்டையாடும் மிருகங்கள் காண்டாமிருகத்தைக் கண்டால் ஒதுங்கிப்போகும்; மனிதர்களே அதன் எதிரிகள். காரணம், ஆப்பிரிக்கா காண்டாமிருகங்களை போல் இவற்றுக்கும் நிமிராத லிங்கங்களே வில்லனாகின்றது.  காண்டாமிருகம் மூக்கிலுள்ள கொம்பிலிருந்து வயாகரா போன்ற வஸ்துவை எடுக்க முடியுமென்ற நம்பிக்கை. இவ்வளவிற்கும் அந்த கொம்பு நமது மயிர் நகம் போன்ற கரட்டினால் (Keratin) ஆனது. அதற்கும் ஆண் குறிக்கும் என்ன சம்பந்தம்?

தற்பொழுது கிட்டத்தட்ட மூவாயிரம் ஒற்றைக்கொம்பன் காண்டாமிருகம் இந்தியா, நேபாளம், பூட்டான் பகுதிகளில் வாழ்கிறது. இதில் 70 வீதமானவை அசாமிலுள்ள காஞ்சிரங்கா வனத்திலுள்ளன. எங்களது பயணத்தில் இதைப் பார்ப்பது முக்கியமாக இருந்தது.

காஞ்சிரங்கா வனத்திற்குப் போவதற்கு முன் வனத்திற்கு சிறிது தூரத்தில் பங்களா போன்ற தங்குமிடம் கிடைத்தது. அங்கு அறை வசதியானது. ஆனால், குளியலறை மற்றும் மலசலகூடம் இருந்த வெளிப்பகுதிக்கு கூரை இருக்கவில்லை. இரவு படுத்து விட்டு காலையில் எழுந்து குளிக்கசென்றபோது மெல்லிய நீண்ட பாம்பொன்று அங்கு என்னை வரவேற்றது.

தண்ணீர் ஊற்றி அதை கலைத்தால், அங்குமிங்கும் போக இடமில்லாது அகதியாகத் தத்தளித்தது. சுவரில் ஏறிப் போகமுடியாது. மரங்கள் எதுவுமில்லை. பாம்பைப் பார்த்தால் பாவமாக இருந்தது. இறுதியில் அங்கு வேலை செய்பவர்கள் இந்த வேலையில் விற்பன்னராக இருக்கலாம் என வரவழைத்தபோது டெட்டோலை தெளித்து பாம்பைத் துரத்த பார்த்தார்கள். நாங்கள் இருவரும் மிருக வைத்தியர்கள். எனவே, பாம்புக்கு எங்களால் இறப்பு வருவதை விரும்பவில்லை. இறுதியில் நாங்களே அவர்களுக்கு துணி போடும் ஹங்கரை நிமிர்த்திக் கொடுத்து பாம்பை வெளியே தூக்கிப் போடச் சொன்னோம்.

காலையில் வனத்திற்கு யானைச் சவாரியில் சென்றேன். அசாமிய யானைகள் எல்லாம் பெரியவையாகத் தெரிந்தன. டாக்டர் திருசெல்வம் யானையில் ஏற துணிவற்று மறுத்துவிட்டார். எனக்கு காஞ்சிரங்கா யானைகளைப் பார்த்தபோது மகாபாரத்தில் வரும் சுப்ரதீகம் என்ற யானை நினைவுக்கு வந்தது. ஆனாலும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக எனது கமராவுடன் ஏறி அமர்ந்தேன். அதே நேரத்தில் யானைப்பாகன் யானையைத் திருப்புவதற்காக, யானையின் முதுகில் தடியால், வெள்ளாவியின் பின்பு அழுக்குத் துணியை கல்லில் அடிப்பதுபோல் யானையின் முதுகில் விளாசியபோது மனம் தடுமாறியது. தயக்கத்துடன் ஆறு பேருடன் ஏறி அமர்ந்தேன். அது வசதியானது மட்டுமல்ல காண்டாமிருகம் அருகே செல்லக்கூடியதாகவும் இருந்தது. ஒற்றையாக ஒரு காண்டாமிருகம் மேய்ந்து கொண்டிருப்பதை யானையின் மீது அமர்ந்து மிக அருகில் சென்று பார்த்தேன். அதே போல் மற்ற மிருகங்கள் அருகில் செல்ல முடிந்தது. யானை தங்கள் அருகே வருவதை அவை பொருட்படுத்தவில்லை. இருந்தாலும் யானை சேற்றில் சதக் சதக் என நடக்கும்போது விழுந்துவிடுவோமா என்ற சிறிய பயம் மனதில் அட்டையாக ஊர்ந்தது.

மாலையில் வனத்தை ஜீப்பில் வலம் வந்தோம். அப்போது தூரத்தில் மட்டுமே மிருகங்களை பார்க்க முடிந்தது. அது காலையில் கிடைத்த யானைச் சவாரியை எனக்குப் பேரதிர்ஷ்டமாக நினைக்க வைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...