No menu items!

CSKயின் புது ரூட் – கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்?

CSKயின் புது ரூட் – கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் ஐபிஎல் மீது திரும்பியுள்ளது. அடுத்த ஆண்டில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கான ஏலம் வரும் டிசம்பர் 19-ம் தேதி நடக்கப் போவதுதான் இதற்கு காரணம். ஏலத்துக்கு முன்னதாக ஐபிஎல்லில் ஆடும் ஒவ்வொரு அணியும் சில வீர்ர்களை விடுவித்துள்ளது. இதன்படி சிஎஸ்கே அணி இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை விடுவித்திருக்கிறது.

காரணம் என்ன?

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் 16.25 கோடி ரூபாய் கொடுத்து பென் ஸ்டோக்ஸை வாங்கியிருந்தது சிஎஸ்கே. அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினால், அவருக்கு பதில் ஸ்டோக்ஸை கேப்டனாக்கும் எண்ணத்தில்தான் சிஎஸ்கே அப்போது அவரை வாங்கியது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக தோனி, கடந்த ஐபிஎல் போட்டியில் அனைத்து ஆட்டங்களிலும் ஆடினார். ஆனால் ஸ்டோக்ஸோ காயம் காரணமாக 2 போட்டிகளில்தான் ஆட முடிந்தது.

இந்த ஆண்டும் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்டோக்ஸ், அதிலிருந்து மீள ஐபிஎல் தொடரில் ஆடாமல் ஓய்வெடுக்க விரும்பியுள்ளார். சிஎஸ்கே அணியும் அவரை விடுவித்துள்ளது. ஸ்டோக்ஸை விடுவித்ததால் இந்த ஆண்டில் புதிய வீர்ர்களை வாங்க சிஎஸ்கே அணிக்கு கூடுதலாக 16.25 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

தோனி ஆடுவாரா?

ஐபிஎல் ஏலம் நெருங்கும் நிலையில், அடுத்த ஐபிஎல்லில் தோனி ஆடுவாரா என்பது இன்னும் மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி, அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் ஆடுவேன் என்று மறைமுகமாக தெரிவித்தார். இருப்பினும் கால் முட்டியில் செய்துகொண்ட அறுவைச் சிகிச்சைக்கு பின் அவர் இன்னும் முழுமையாக குணமாகவில்லை என்று சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியே குணமானாலும் 42 வயதான தோனியால் எல்லா போட்டிகளிலும் ஆட முடியுமா என்பதும் சந்தேகமாக உள்ளது.

கேப்டனாகிறார் ருதுராஜ் கெய்க்வாட்

2024 ஐபிஎல்லில் தோனி ஆடினாலும், ஆடாவிட்டாலும் ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமிக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இதேபோல் ஒரு முடிவை சிஎஸ்கே எடுத்தது. அப்போது தோனி அணியில் இருந்தாலும், ரவீந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரால் கேப்டன் பதவியின் அழுத்தத்தை தாங்க முடியவில்லை. அது அவரது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு தரத்தை குறைத்த்து. சிஎஸ்கே அணியும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது. அதனால் மீண்டும் தோனியே கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதேபோல் இப்போது தோனி இருக்கும்போதே ருதுராஜை கேப்டனாக்கி அவருக்கு பயிற்சி அளிக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது.

ஜடேஜா ஏற்கெனவே கேப்டனாக இல்லாதவர் என்பதால் அவருக்கு அழுத்தம் ஏற்பட்டது. ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் விஷயத்தில் அப்படி இல்லை. அவர் ஏற்கெனவே மகாராஷ்டிரா அணிக்கு கேப்டனாக இருக்கிறார். அதனால் அவருக்கு கேப்டன் பதவி கூடுதல் அழுத்தத்தை கொடுக்காது என்று சிஎஸ்கே நிர்வாகம் நம்புகிறது.

ஸ்டோக்ஸுக்கு பதில் ரச்சின் ரவீந்திரா

சிஎஸ்கே நிர்வாகத்தின் முன் இருக்கும் மற்றொரு கேள்வி ஸ்டோக்ஸுக்கு பதிலாக யாரை வாங்குவது என்பதே. இந்த விஷயத்தில் நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் ரச்ச்சின் ரவீந்திராவை முதல் சாய்ஸாக வைத்திருக்கிறது சிஎஸ்கே.

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் நியூஸிலாந்து வீர்ரான ரச்சின் ரவீந்திரா. இந்த தொடரில் 578 ரன்களைக் குவித்த ரச்சின் ரவீந்திரா, 5 விக்கெட்களையும் வீழ்த்தினார். இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்பதால் உள்ளூர் ரசிகர்களும் அவருக்கு ஏராளமாக உள்ளனர். அதனால் அவரை வாங்குவதில் சிஎஸ்கே நிர்வாகம் அதிக ஆர்வம் காட்டுகிறது. அவரை வாங்க முடியாவிட்டால் ஆஸ்திரேலிய வீர்ர் டிராவிஸ் ஹெட், நியூஸிலாந்து வீர்ர் டாரில் மிட்செல் அல்லது தென் ஆப்பிரிக்க வீர்ர் ஜெரால்ட் கோயட்சிக்கு குறிவைக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது.

இஷான் கிஷனை நீக்கிய மும்பை இந்தியன்ஸ்:

சிஎஸ்கே அணியில் இருந்து ஸ்டோக்ஸ் விலகிய நிலையில் பல ஐபிஎல் அணிகளும் சில வீரர்களை நீக்கியுள்ளன. இதன்படி டெல்லி கேபிடல்ஸ் அணி பிருத்வி ஷாவையும், மணிஷ் பாண்டேவையும் நீக்கியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆந்திரே ரஸ்ஸல், லாக்கி ஃபெர்கசன் மன்தீப் சிங் ஆகியோரை கழற்றி விட்டுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து இஷான் கிஷன், ஜெயதேவ் உன்ன்கட், முருகன் அஸ்வின், பியூஷ் சாவ்லா, சந்தீப் வாரியர், மெரிடித் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...