No menu items!

ரிலீஸ் ஆகாத துருவ நட்சத்திரம் – யார் காரணம்?

ரிலீஸ் ஆகாத துருவ நட்சத்திரம் – யார் காரணம்?

கெளதம் வாசுதேவ் மேனன் ஒரு இயக்குநராக பரபரப்பாக இயங்கிய காலத்தில், விஜய்க்கு ஒரு கதை சொன்னார்.

அந்த கதைதான் ’யோஹன்: அத்தியாயம் ஒன்று’.

கதையைக் கேட்டார் விஜய். அவருக்குப் பிடித்தும் இருந்தது. ஆனால் விஜய் அந்த கதையில் நடிக்கவில்லை. அதற்கு காரணம், படம் நெடுக ஆங்கிலத்தில் வசனம் அதிகம் இருந்தது. ஆங்கிலத்தில் ஸ்டைலாக பேசி நடிப்பது தனக்கு செட்டாகாது என்பதால் விஜய் நடிக்காமல் தவிர்த்துவிட்டார்.

இதனால் ‘யோஹன்: அத்தியாயம் ஒன்று’ கிடப்பில் போடப்பட்டது. அடுத்தடுத்தப் படங்களில் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் பண்ண ஆரம்பித்தார். இந்த கால இடைவெளியில் ‘யோஹன்: அத்தியாயம் ஒன்று’ கதையில் இருப்பது போன்ற சம்பவங்கள் காட்சிகள் மற்றப்படங்களில் இடம்பெற்றன.

ஆனாலும் அந்த கதையை விட கெளதமுக்கு மனம் இல்லை. அதை கொஞ்சம் மாற்றி தயார் செய்ததுதான் ‘துருவ நட்சத்திரம்’.

இந்தகதையை விக்ரமுக்கு சொன்னார் கெளதம் வாசுதேவ் மேனன். விக்ரமுக்குப் பிடித்து போகவே, தானே தயாரித்து இயக்கலாம் என களத்தில் இறங்கினார்.

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு ஒரு பழக்கமுண்டு. தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் படம் பண்ண அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு, பிறகு டேட்ஸ் கொடுப்பார். சில மாதங்களிலோ அல்லது ஒரு வருடத்திலோ அட்வான்ஸ் வாங்கிய ப்ராஜெக்ட் நடைப்பெறாமல் போயிவிடும். முடிந்தால் அட்வான்ஸை திருப்பிக் கொடுப்பார். இல்லையென்றால் அந்த அட்வான்ஸ் அப்படியே அவர் வசம் தங்கிவிடும்.

இப்படி பேசப்பட்ட படம்தான் சிம்புவை வைத்து திட்டமிட்ட ‘சூப்பர்ஸ்டார்.’ ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் அதன் பங்குதாரர் விஜய் ராகவேந்திரா 2 கோடியே 40 லட்சம் அட்வான்ஸாக கொடுத்தார்.

ஆனால் அந்த சூப்பர்ஸ்டார் பேச்சு அளவிலேயே இருந்து, காணாமல போனது. அந்த அட்வான்ஸை கெளதம் வாசுதேவ் மேனன் திருப்பிக்கொடுக்கவே இல்லை.

இந்நிலையில் கெளதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் துருவ நட்சத்திரம் வெளியாக இருப்பதை கவனித்து கொண்ட விஜய் ராகவேந்திரா, இப்போது தங்களிடம் வாங்கிய அட்வான்ஸை கெளதம் திருப்பித்தர வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இந்த விஷயத்தில் படம் வெளியாகும் நாளான 24-ம் தேதி நவம்பர் காலைக்குள் 2 கோடியே 40 லட்சத்தை விஜய் ராகவேந்திராவுக்கு கொடுத்தால், ’துருவ நட்சத்திரத்தை’ திரையரங்குகளில் வெளியிட தடை இல்லை என்று நீதிமன்றம் கூறியது.

ஆனால் கெளதம் வாசுதேவ் மேனன் அந்த தொகையை சொன்னப்படி கொடுக்க முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. அதனால் துருவ நட்சத்திரம் சொன்ன தேதியில் வெளியாகவில்லை.

எப்படியாவது இன்னும் இரண்டு நாட்களில் வெளியிட வேண்டுமென கெளதம் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கெளதம் வாசுதேவ் மேனன்  ஒரு நடிகராக நாளொன்றுக்கு 10 லட்சம் சம்பளமாக வாங்குகிறார். அப்படியிருக்கும் போது அவரால் இந்த தொகையை கொடுக்க முடியவில்லையா என்று முணுமுணுப்பு கோலிவுட்டில் எதிரொலிக்கிறது.


தமிழுக்கு  வரும் ஸ்ரீதேவி வாரிசு!

’கந்தன் கருணை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஸ்ரீதேவி. அப்போது அவருக்கு நான்கு வயது. அதன் பிறகு குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் கதாநாயகியும் ஆனார். அடுத்த 50 ஆண்டுகள் இந்திய சினிமாவில் இளைஞர்கள், முன்னாள் இளைஞர்களின் கனவில் வந்து தூக்கத்தைக் கலைக்கும் கவர்ச்சிக்கன்னியாகவும் இருந்தார். இது வரலாறு.

ஆனால் அவரது இரு மகள்களான ஜான்வி, குஷி ஆகிய இருவரும் அம்மாவின் வழியில் தங்களது திரைப்பட பயணத்தைத் தொடங்க ஆர்வத்தோடு களமிறங்கி இருக்கிறார்கள்.

மூத்த மகள் ஜான்வி கபூர், ‘தடக்’ என்ற ஹிந்திப் படத்தில் நாயகியாக அறிமுகமானார். ஸ்ரீதேவியின் மகளாக இருந்தாலும், அவருக்கு ஹிந்தியில் பெரியளவில் ஹிட் படங்கள் அமையவில்லை. இதனால் இப்போது தெலுங்கு சினிமா பக்கம் தனது அதிர்டஷ்த்தை சோதித்துப் பார்க்க ஹைதராபாத்திற்கு கிளம்பி வந்துவிட்டார். இப்போது ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் ‘தேவரா’ படத்தில் நாயகியாக நடித்து கொண்டிருக்கிறார்.

அக்கா தட்டுத்தடுமாறி தெலுங்குப் பக்கம் தனது ஜாகையை மாற்ற, தங்கை குஷி என்ன செய்வதென்று கடும் யோசனையில் இருந்த போதுதான் அவருக்கு ‘த ஆர்ச்சீஸ்’ பட வாய்ப்பு வந்தது.

‘த ஆர்ச்சீஸ்’ வழக்கம் திரையரங்குகளில் வெளிவராமல் ஒடிடி-தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக இருக்கிறது.

’ஸ்ரீதேவியின் வாரிசு’ என்ற அடையாளம் ஒரு படத்தின் விளம்பரத்திற்கு நன்றாக இருக்கும் என்று யோசித்த இயக்குநர் ஆகாஷ், இப்போது தான் அதர்வாவை வைத்து இயக்கும் படத்தில் குஷி கபூரை நடிக்க வைக்கும் வேலைகளில் இறங்கி இருக்கிறாராம். அனிருத் இசையமைக்க இருக்கிறார். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது.

இந்த கூட்டணியைப் பார்த்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது இரண்டாவது மகள் தமிழில் அறிமுகமாக இப்படம் ஒரு சரியான படமாக இருக்கும் என பச்சைக்கொடி காட்டியிருக்கிறாராம்.

அக்கா ஜான்வி தெலுங்கிலும், தங்கை குஷி தமிழிலும் அறிமுகமாக இருப்பதால், ஸ்ரீதேவியின் வாரிசு என தென்னிந்திய ரசிகர்கள் இவர்களை கொண்டாடுவார்களா அல்லது ஒரு படத்தோடு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்களா என்பது இனிதான் தெரியும்.


ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு எவ்வளவு?

உலக அழகி என்றாலே இந்தியாவில் ஐஸ்வர்யா ராயின் அந்த புன்னகைக்கும் முகம்தான் பளீச்சென்று வந்துப் போகும். அந்தளவிற்கு ,நிரந்தர உலக அழகி’ யாக இன்றும் ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’, ’ராவணன்’, ஷங்கரின் ஜூன்ஸ், ராஜீவ் மேனனின் ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என அடுத்தடுத்து தமிழில் பெரிய படங்களில் நடித்தவர், ஹிந்தி தெலுங்குப் படங்கள் உட்பட 50 படங்களுக்கும் மேலாக நடித்திருக்கிறார்.

அதேபோல் பல இந்திய ப்ராண்ட்களுக்கும், சர்வதேச ப்ராண்ட்களுக்கும் விளம்பரத் தூதராக இருப்பதால் ஐஸ்வர்யா ராய்க்கு இதன் மூலம் கிடைக்கும் வருமானமே பல கோடிகளுக்கும் மேல்.

இப்படியொரு செழிப்பான நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இத்தனை வருடத்தில் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் ஐஸ்வர்யா ராய் சம்பாதித்த சொத்துக்களின் மதிப்பு ஏறக்குறைய 776 கோடியாம். இதன் மூலம் அதிக சொத்து மதிப்புள்ள இந்திய நடிகைகளின் பட்டியலில் ஐஸ்வர்யா ராய் முக்கியமானவராக இடம்பிடித்திருக்கிறார்.

திரைப்படங்களில் நடிப்பதற்கு இவர் 10 கோடி முதல் 12 கோடி சம்பளம் வாங்குகிறார். தான் நடிக்கும் படத்தில், தன்னுடைய கதாபாத்திரத்திற்கு என்ன மாதிரியான முக்கியத்துவம் என்ன, எவ்வளவு நேரம் தன்னுடைய காட்சிகள் அப்படத்தில் இடம்பெறுகின்றன என பல அம்சங்களுக்கேற்றபடி தனது சம்பளத்தை முடிவு செய்கிறாராம்.

இதேபோல் விளம்பரங்களில் நடிக்க, அதாவது ஒரு நாளில் எடுக்கப்படும் விளம்பரங்களுக்கு 6 கோடி முதல் 7 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று சொல்லப்படுகிறது.

மேலும் ஒரு முன்னணி வர்த்தக தினசரி வெளியிட்டு இருக்கும் செய்தியில், ஐஸ்வர்யா ராய் பல தொழிகளில் முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது. ஊட்டச்சத்து நிறைந்த தயாரிப்புகளை வழங்கும் ‘பாஸிசிபிள்’ என்ற நிறுவனத்தில் 5 கோடியும்,  பெங்களூரைச் சேர்ந்த ஆம்பி என்ற நிறுவனத்தில் சுற்றுச்சூழல் சார்ந்த ஸ்டார் அப் நிறுவனத்தில் ஒரு கோடி முதலீடு செய்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறது.

தனது மாமனார் அமிதாப் பச்சனின் தயாரிப்பு நிறுவனமான ஏபிசிஎல் நிறுவனத்தில் அதன் செயல்பாடுகளில், நிர்வாகத்தில் ஐஸ்வர்யா ராய் பரபரப்பாக இயங்கி வருகிறார்.  இந்த ஏபிசிஎல், விஸ்க்ராஃப்ட் இண்டர்நேஷனல் எண்டர்டெயின்மெண்ட் ப்ரைவேட் லிமிடெட்டுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் 10 கோடி சம்பளம் வாங்கியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...