No menu items!

சிஎஸ்கேவின் கதை – 6: சூதாட்ட புகாரில் சிக்கிய சிங்கங்கள்

சிஎஸ்கேவின் கதை – 6: சூதாட்ட புகாரில் சிக்கிய சிங்கங்கள்


வீரர்களை அடிக்கடி மாற்றும் பழக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருந்ததில்லை. மற்ற அணிகளெல்லாம் ஆண்டுக்கு ஒருமுறை வீரர்களை மாற்றிக்கொண்டு இருந்த நேரத்தில் சிஎஸ்கே மட்டும் தங்கள் வீரர்களை மாற்றாமல் கூட்டுக் குடும்பமாக வைத்திருந்தது. 2013-ம் ஆண்டிலும் சென்னையின் இந்த அணுகுமுறை மாறவில்லை. 2012-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஆடிய 16 வீரர்களை அப்படியே 2013-ம் ஆண்டிலும் தக்கவைத்தது சென்னை.

முதல் போட்டியில் மும்பை அணியிடம் தோற்றபோதிலும் சென்னையின் முன்னேற்றத்துக்கு இந்த முறையும் பங்கம் ஏற்படவில்லை. எப்போதும்போல் லீக் ஆட்டங்களில் வெற்றிகளைக் குவித்து முன்னேறியது.

ஆடுகளத்தில் சென்னை அணி பீடுநடை போட்டாலும், மைதானத்துக்கு வெளியே இந்த ஆண்டு சென்னைக்கு சிக்கல் எழத் தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீது சூதாட்டத்தின் சந்தேக நிழல் படியத் தொடங்கியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களாக இருந்த ஸ்ரீகாந்த், அங்கீத் சவான், அஜீத் சண்டிலா ஆகியோர் சூதாட்ட தரகர்களுடன் பேசியதற்கும், சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கும் ஆதாரம் இருப்பதாக டெல்லி போலீஸார் பதிவுசெய்த வழக்குதான் இந்த சூதாட்டப் புகார்களுக்கு தொடக்கப் புள்ளி. இந்த புகார்களின் அடிப்படையில் 3 வீரர்களும் கைது செய்யப்பட, ஐபிஎல்லில் புயல் வீசியது.

இதைத் தொடர்ந்து சூதாட்ட புரோக்கராக செயல்பட்ட விது தாரா சிங், வைர வியாபாரியான பிரியங் செபானி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். இதில் விது தாரா சிங்கிடம் நடத்திய விசாரணையில், அவருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியாக கருதப்பட்டவரும், அப்போதைய பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) தலைவர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பனுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

இருவரும் செல்போனில் பேசியதற்கான ஆதாரங்கள் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்த ஆண்டு மே 24-ம் தேதி குருநாத் மெய்யப்பன் போலீஸாரின் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். விசாரணையின் இறுதியில் போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிலர் குரல் எழுப்பினர். பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் குரல்கள் எழுந்தன. அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர் தலைமை நிர்வாகி அல்ல என்றும் நிர்வாகக் குழுவில் ஒரு சாதாரண உறுப்பினராகவே அவர் இருந்தார் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்தது. இருப்பினும் சென்னையைச் சுற்றியிருந்த சந்தேக நிழல்கள் அகலாமல் இருந்தன.

இப்படி ஆட்டத்துக்கு வெளியில் சென்னை அணியின் கழுத்தை பலரும் நெறித்திருந்த நேரத்திலும் சென்னை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மே 26-ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸை, சென்னை சிங்கங்கள் எதிர்கொண்டன.

ஒருபக்கம் வலுவான மும்பை அணி, மறுபக்கம் சூதாட்டப் புகார்கள் என ஒரே நேரத்தில் 2 விஷயங்களை எதிர்த்து சென்னை அணி போராடவேண்டி இருந்தது. இப்போட்டியில் முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களைச் சேர்த்தது. சென்னை வெற்றிபெற 149 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சென்னையின் பேட்டிங் வரிசையைப் பொறுத்தவரை இது மிகவும் சாதாரண இலக்குதான். ஊதித் தள்ளிவிடலாம்தான். ஆனால் மைதானத்துக்கு வெளியே சூதாட்டப் புகாரால் சென்னை அணிக்கு இருந்த நெருக்கடி ஆட்டத்தில் எதிரொலித்தது.

எந்தக் கட்டத்திலும் பதறாத தோனி மட்டும், இப்பொதும் ஒருபுறம் நங்கூரம் அடித்து நின்றார். 63 ரன்களைச் சேர்த்து கடைசிவரை அவுட் ஆகாமல் இருந்தார். ஆனால் மறுபுறம் விக்கெட்கள் சரிய 20 ஓவர்களில் சென்னையால் 120 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது சென்னை.


இறுதிப் போட்டியில் அடைந்த தோல்வியைவிட, அணியின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் இருந்தனர் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள். “அணி மீதோ அல்லது அணியின் உரிமையாளர்கள் மீதோ புகார்கள் வந்தால், குறிப்பிட்ட அந்த அணிக்கு தடை விதிக்கப்படும்” என்று பிசிசிஐ விதியில் குறிப்பிடப்பட்டிருந்ததே இதற்கு காரணம். இந்தச் சூழலில் சூதாட்டப் புகார்கள் குறித்து விசாரிக்க மூவர் குழுவை நியமித்து மே 26-ம் தேதி உத்தரவிட்டது பிசிசிஐ.
(செவ்வாய்கிழமை சிங்கங்கள் மீண்டும் கர்ஜிக்கும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...