No menu items!

சாதி, மத கலவரத்தை தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

சாதி, மத கலவரத்தை தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகர்கோவிலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச் சிலையை திறந்து வைத்தார். பின்னர் பேசிய ஸ்டாலின், “நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் உலவிக் கொண்டிருப்பவர்கள், நமது திராவிட மாடல் ஆட்சி மக்களைக் கவரும் வகையில் செயல்படுகிறதே, இந்த ஆட்சியை இப்படியே விட்டால் நம் பிழைப்பு என்னாவது என்று எண்ணி புழுதி வாரி தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியை எப்படியாவது அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று எண்ணி திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். எங்காவது சாதிக் கலவரத்தைத் தூண்டலாமா, மதக் கலவரத்தை ஏற்படுத்தலாமா, ஆங்காங்கே மக்களிடையே பிளவைத் தூண்டலாமா என்று பல்வேறு காரியங்களிலே ஈடுபட்டிருக்கிறார்கள்.

மார்ச் 1ஆம் தேதி என் பிறந்தநாள் விழாவில் பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் முன்னிலையில் பேசியபோது தமிழ்நாட்டைப் போல தேசிய அளவிலும் மத சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று வலியுறுத்தினேன். கருத்து வேறுபாடுகளையும். தன் முனைப்பையும் விட்டுவிட்டு பாரதிய ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற அனைவரும் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதைச் செய்தால் தமிழ்நாட்டை மட்டுமின்றி, இந்தியாவையும் காப்பாற்ற முடியும் என்று குறிப்பிட்டேன். அதைத்தான் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன்” என்று பேசினார்.


பாஜக ஐ.டி. விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன் அதிமுகவில் இணைந்தார்

தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியிலிருந்து இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலச் செயலாளர் திலீப் கண்ணனும், அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று (பிப்.6) அறிவித்தார். இந்நிலையில், அவரும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். அப்போது, சிடிஆர் நிர்மல்குமாரும் உடன் இருந்தார்.


வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்கள் பரப்பிய பீகார் வாலிபர் கைது

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து பரப்பப்படும் வதந்தியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் வட மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஐஏஎஸ் குழுவினர் திருப்பூரில் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.

இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலியான வீடியோக்கள் குறித்து திருப்பூர் சைபர் க்ரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஸ்குமார் (25) என்பவருடைய ட்விட்டர் கணக்கில் வேறு மாநிலங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தமிழகத்தில் நடந்தது போன்று போலியான வீடியோக்களை சித்தரித்து பதிவிட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் அவரை தொடர்பு கொண்டு இது போலியான வீடியோக்கள் என்றும் உடனடியாக ட்விட்டர் கணக்கில் இருந்து அந்த வீடியோக்களை நீக்கம் செய்யவும் அறிவுறுத்தினர். ஆனால் ரூபேஷ் குமார் அதனை நீக்கம் செய்யாமல் தொடர்ந்து போலியான வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதை அடுத்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ரூபேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்த திருப்பூர் சைபர் க்ரைம் போலீசார், அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். பீகாரில் இருந்து வெளியேறிய ரூபேஷ்குமார் தெலுங்கானாவில் பதுங்கி இருந்தார். அவரது செல்போன் எண்ணைக் கொண்டு அவர் இருந்த இடத்தை அறிந்த தனிப்படை போலீசார் தெலுங்கானாவில் வைத்து அவரை கைது செய்தனர் தற்பொழுது அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


என் அப்பா எனக்கு செய்த பாலியல் துன்புறுத்தல்: மனம் திறந்த குஷ்பு

மூத்த ஊடகவியலாளர் பர்கா தத் நடத்திய ‘We the women’ என்னும் நிகழ்ச்சியில் பங்குபெற்று பேசிய நடிகை குஷ்பு, “ஆணோ, பெண்ணோ ஒருவர் தான் குழந்தையாக இருக்கும்போது எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தலானது அவர்களது வாழ்க்கை முழுவதும் ஆறாத வடுவாய் தொடரும். நான் என்னுடைய எட்டு வயதில் சொந்த தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அதை வெளியேக் கூறினால் என்னுடைய அம்மாவையும் சகோதரர்களையும் அடித்து துன்புறுத்துவேன் என்று அவர் என்னை மிரட்டினார். அதனால் அப்போது அதுகுறித்து என்னால் வெளியே பேச முடியவில்லை.

அதேபோல் தனது மனைவியையும் குழந்தைகளையும் அடிப்பதை தன்னுடைய உரிமையாக அவர் கருதினார். தன்னுடைய சொந்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதையும் அவர் தன்னுடைய பிறவி உரிமையாக கருதினார். எனது அம்மாவுக்கு அமைந்தது மிகவும் மோசமான திருமண வாழ்கை.

எட்டு வயதில் அனுபவித்த பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக என்னால் பதினைந்து வயதில்தான் குரல் கொடுக்க முடிந்தது. அதற்கான தைரியம் எனக்கு அப்போதுதான் வந்தது. அம்மாவிடம் இதுகுறித்துக் கூறினால் அவர் அதை முதலில் நம்புவாரா என்ற தயக்கம் இருந்தது. ஏனெனில் அவர் கணவனின் மேல் பற்றுக் கொண்ட ஒரு மனைவியாக இருந்தார். ஆனால், இதற்கு மேல் இதை தாங்கிக் கொள்ள முடியாது என்று, எனது தந்தையை எதிர்த்து பேச துவங்கினேன். ஒரு சிறுமியாக என் மீது நான் கொண்ட தன்னம்பிக்கையின் பொருட்டு, தைரியத்தை வர வைத்து கொண்டு என்னுடைய பதினைந்து வயதில் அவரை எதிர்த்தேன். ஒரு பெண்ணாக வீட்டிலிருக்கும் ஒரு ஆணை எதிர்க்கும் துணிவு வந்துவிட்டால் இந்த உலகத்திலும் நம்மால் எதையும் எளிதாக எதிர்கொள்ள முடியும் ” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள குஷ்பு, “ஒரு எட்டு வயது குழந்தையாக பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ளும்போது, நம்மால் அந்த சிறு வயதில் என்ன செய்துவிட முடியும்.அதுவொரு வன்கொடுமை. ஆனால், இன்றைக்கு அதுகுறித்து நான் பேசியிருக்கிறேன் என்றால் அதிலிருந்து இப்போது நான் மீண்டு வந்திருக்கிறேன் என்று அர்த்தம். ஆனால், அதற்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதேசமயம் இது போன்ற கொடுமைகளை அனுபவித்தவர்களுக்குதான், அது எத்தகைய மனச் சிதைவை ஏற்படுத்தும் என்பது புரியும்.

இங்கே நடக்கும் 90சதவீத பாலியல் துன்புறுத்தல்கள் நமக்கு நன்கு தெரிந்த, நம்மைச் சுற்றியுள்ள நபர்களால்தான் ஏற்படுகின்றன என்று தரவுகள் கூறுகின்றன. பாலியல் ரீதியாக ஒருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகும்போது, அதனுடைய காயங்கள் ஆறினாலும் அந்த தழும்புகள் நமது வாழ்நாள் முழுவதும் தொடரும்.

நம் சமூகத்தில் ஒரு பிரச்னை இருக்கிறது. ஒரு பெண் தனக்கு நிகழும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளியே பேசினால், திரும்ப அவர்களை நோக்கியே பல கேள்விகள் கேட்கப்படும். அவன் உன்னை சீண்டும் வகையில் நீ என்ன செய்தாய், நீ எப்படி உடை அணிந்திருந்தாய், அந்த நேரத்தில் நீ எதற்காக அங்கே சென்றாய், அவனிடம் நீ எதற்காக வாய் கொடுத்து பேசினாய் போன்ற முறையில்லாத கேள்விகள் அவர்களை நோக்கி வீசப்படுமே தவிர, தவறு செய்த ஆண்களை நோக்கி கேள்விகள் எழுப்ப மாட்டார்கள்.

இப்போது நான் எனது தந்தையால் பாதிக்கப்பட்ட விஷயத்தை பகிர்ந்ததற்கு கூட, என்னை நோக்கிதான் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்படுகின்றன. ட்விட்டரில் படித்த பேராசியர் ஒருவர், “இப்போது நீங்கள் உங்களது குழந்தைப் பருவ துன்புறுத்தல்கள் குறித்து பேசுயிருப்பது, உங்களது தந்தை குறித்த தவறான பிம்பத்தை மக்கள் மத்தியில் கட்டமைக்காதா, உங்களது குழந்தைகள் அவர்களது தாத்தாவை பற்றி தவறாக நினைக்க மாட்டார்களா” என்று என்னைப் பார்த்து கேள்வியெழுப்புகிறார். இப்போது கூட ஆண்களின் பிம்பங்களை பற்றியே அவர்கள் கவலை கொள்கிறார்கள். இந்த சமூகத்தில் படித்தவர்களின் நிலையே இவ்வளவு கேவலமாக இருக்கிறது.

அதனால்தான் ஒரு விஷயத்தை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன், தங்களுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளியே பேசுவதற்கு பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வெட்கப்பட தேவையில்லை. உண்மையில் வெட்கப்பட வேண்டியது இத்தகைய தவறுகளை செய்யும் ஆண்கள்தான். இன்றைக்கு நான் என்னுடைய அனுபவங்கள் குறித்து பேசியிருப்பதற்கான காரணம் அதனை வலியுறுத்துவதற்காகத்தான்” என்று உறுதியான குரலில் கூறுகிறார்.

குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளியே பேசினால் அந்த குழந்தைகளுடைய எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற கருத்து இங்கே ஆழமாக பதிவாகியிருக்கிறது. என்னுடைய பதினைந்து வயதில் எனக்கு நேர்ந்த பிரச்னைகள் குறித்து, தைரியமாக நானே குரல் கொடுத்தேன். அதன்பின் சொந்தமாக உழைக்க துவங்கி, இன்று வரை இந்த சமூகத்தில் ஒரு மரியாதைக்குரிய இடத்தில் இருக்கிறேன். ஒரு குடும்ப தலைவியாக பல பொறுப்புகளை கையாள்கிறேன். எனது தந்தை செய்த தவறுகளை சுட்டிக்காட்டி அவரை எதிர்த்ததால், எனது வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.

இத்தனை ஆண்டுகள் கழித்து இதுபற்றி வெளியே பேசுவதற்கு எனக்கு தைரியம் வந்துள்ளது. அந்த தைரியத்தை எனக்களித்தது என்னுடைய குழந்தைகள். அதேபோல் எனது கணவரும் எனக்கு துணையாக இருக்கிறார். ஆனால், அனைவருக்கும் எனக்கு கிடைத்தது போன்ற ஆதரவுகள் கிடைக்குமென சொல்ல முடியாது. ஆனால், காலங்கள் மாறி வருகிறது. எனவேதான் மீண்டுமொரு முறை சொல்கிறேன் இந்த சமூகத்தில் இத்தகைய விஷயங்களில் நிச்சயம் மாற்றம் வர வேண்டும்” என்று குஷ்பு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...