No menu items!

தமிழர் பண்பாட்டு பெருமை பேசும் கீழடி அருங்காட்சியம் – என்னென்ன உள்ளது?

தமிழர் பண்பாட்டு பெருமை பேசும் கீழடி அருங்காட்சியம் – என்னென்ன உள்ளது?

மதுரையிலிருந்து பன்னிரெண்டு கி.மீ. தொலைவில், வைகை நதியின் தென்கரையில் அமைந்துள்ளது, கீழடி. அழகான இந்தச் சிற்றூரைக் கடந்து கிழக்கே மேலும் ஒரு கிலோமீட்டர் தொலைவு சென்றால் மணலூர் கண்மாயின் மேற்கரையில் இருக்கிறது பள்ளிசந்தை திடல். சுற்றிலும் தென்னந்தோப்புகள் சூழ்ந்து, ஆளரவமற்று அமைதியாக இருக்கும் இந்த இடத்தில், 2600 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு நகரம் இருந்தது; அரசாங்கம், பல்வேறு வெளிநாடுகளுடன் வாணிபம், அதுசார்ந்த போக்குவரத்து, கடை வீதி, வீடுகள், விளையாட்டு என மக்கள் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் முதலில் சொன்னபோது பலரும் நம்பவில்லை, நகைத்தார்கள். இப்போது மறுத்தவர்களுக்கு பதில் கூறும்விதமாக அறிவியல்பூர்வ ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு, மண்ணுக்குள் புதைந்த நகரம் மண்ணுக்கு மேலே, உலகம் முழுவதும் தமிழர்கள் பெருமையை சொல்லும் விதமாக அருங்காட்சியகமாக எழுந்து நிற்கிறது.

செட்டிநாடு கலைநயத்துடன் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31, 000 சதுர அடி பரப்பளவில் 18. 43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 5.3.2023 அன்று திறந்து வைத்துள்ளார்.  

கீழடியும் அகழாய்வும்

உலகில், மனிதன் தோன்றிய நாள் முதற்கொண்டு தொடரும் மனித வரலாற்றை அறிவதற்கு, உலகம் முழுக்க அறிஞர்கள் பெரிதும் தொல்லியல் துறையைத்தான் சார்ந்திருக்கிறார்கள். இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள மனித வரலாறு, மனிதன் தோன்றி பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் இருந்துதான் தொடங்குகிறது. மனிதன் தோன்றியது முதல் இலக்கியங்கள் படைக்கப்பட்டது வரையிலான இடைப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் நடவடிக்கைகளைத் தெரிந்துகொள்ள, அக்கால மக்கள் விட்டுச்சென்றுள்ள தொல்பொருள்கள்தான் இன்று நமக்கு முக்கிய ஆவணங்கள். அத்தகைய தொல்பொருட்கள் உலகின் பல்வேறு இடங்களில் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிதான் அகழாய்வு.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு வகை அகழாய்வுகள் மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் வாழ்விடப் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகத் தமிழகம், வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் பிறப்பிடம் என்பதும், தொன்மையான நாகரிகத்தினை உடைய ஒரு பிரதேசம் என்பதும் ஆதிச்சநல்லூர் உட்பட பல அகழாய்வுகளில் ஏற்கெனவே நிரூபணமாகியுள்ளது. இப்போது மீண்டும் கீழடியில் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே கீழடிதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும். 2013ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறையால் தொடங்கப்பட்டு, தமிழ்நாடு தொல்லியல் துறையால் தொடரப்பட்டு இப்போது வரை நடைபெற்றுள்ள கீழடி அகழாய்வில் 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இதில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சிந்து, கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின், இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள், தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய், சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. 1000-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தமிழர்கள் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் தொல்லியல் துறை உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வகங்களுக்கு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை அனுப்பி அதிகாரபூர்வமான முடிவுகளைப் பெற்றுள்ளது. அதன்படி, கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் காலக்கணிப்பு கி. மு. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்ததை உறுதிப்படுத்தியது.

கி. மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகம் கல்வியறிவும் எழுத்தறிவும் பெற்றிருந்தனர் என்பதையும் அறிவியல் அடிப்படையில் கீழடி நிலைநிறுத்தியுள்ளது. பானை ஓடுகளில் குவிரன் ஆதன், ஆதன் போன்ற தனிநபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதன் வாயிலாக சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பதை வெளிப்படுகிறது.

கீழடியில் கிடைத்த சூதுபவள மணிகள், அகேட் போன்ற கல்மணிகள் மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் பகுதிகளில் கிடைக்கப்பெறுகின்ற மூலக்கற்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இது அப்பகுதியுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பைக் காட்டுகின்றன. அதுபோல, கங்கைச் சமவெளியைச் சார்ந்த கி. மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய வெள்ளி முத்திரைக் காசுகள் கிடைத்திருப்பதன் மூலம் கங்கைச் சமவெளியுடன் வணிகப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதை உறுதி செய்ய முடிகிறது. மேலும், ரோம் நாட்டுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்புக்கு நாட்டு நாணயங்களும், ரோம் நாட்டு ரௌலட்டட் மற்றும் அரிட்டன் வகை பானை ஓடுகளும் வலு சேர்க்கின்றன.

கீழடி அருங்காட்சியத்தில் என்னென்ன உள்ளது?

கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் நடந்த 8 கட்ட அகழாய்வுகள் மூலம் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கொந்தகையில் கீழடி அருங்காட்சியகம் (அகழ்வைப்பகம்) அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில், மதுரையும் கீழடியும், வேளாண்மையும் நீர் மேலாண்மையும், கலம் செய்கோ, ஆடையும் அணிகலன்களும், கடல்வழி வணிகம், வாழ்வியல் எனும் ஆறு பொருண்மைகள் அடிப்படையில் தனித்தனி கட்டடங்களில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பழங்கால மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையிலான ஓவியங்கள், வைகை கரையில் வாழ்ந்த மக்களின் வேளாண்மை, நீர் மேலாண்மை குறித்து விளக்கும் தொல்பொருட்கள், பழங்காலத்திலேயே தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்று வாழ்ந்ததற்கான சான்றுகளாக உள்ள தொல்பொருட்கள், இரும்பு, நெசவு, கைவினைத் தொழில்கள், கடல் வணிகம் செய்ததற்கான தொல்பொருள் சான்றுகள், கலை சார்ந்த தொல்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வரலாற்றினையும், கீழடியின் முக்கியத்துவத்தையும் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் 15 நிமிட ஒளி-ஒலிக் காட்சி குளிரூட்டப்பட்ட அரங்கில் காட்சிப்படுத்தப்படுகிறது.

வைகை ஆற்றங்கரையில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அறிந்து கொள்ளும் வகையில் தொடுதிரை காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளும் மாணவர்களும் தமிழர் விளையாட்டுகளை தொடுதிரையில் விளையாடும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது பெயரினை தொடுதிரையில் எழுதினால் தமிழி எழுத்தில் தங்களது பெயரைக் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கால தமிழர்களின் வேளாண்மை, இரும்புத் தொழில், நெசவு, மணிகள் தயாரித்தல் கடல்வழி வணிகம், மேம்பட்ட சமூகம் மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றிற்கு உரிய விளக்கம் இரண்டு நிமிட உயிரூட்டுக்காட்சி (Animation) வாயிலாக காட்சிப்படுத்தப்படுகிறது.

கீழடி அகழாய்வுப் பணிகள், தோற்றம், செயல்பாடுகள் ஆகியவற்றை மெய்நிகர் காட்சி (Virtual Reality Exhibition) வாயிலாக தத்ரூபமாக உணர்ந்து கொள்ளும் வகையில் சிறப்பாக மெய்நிகர் காட்சிக்கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சூதுபவள கற்களால் செய்யப்பட்ட மோதிரக்கல்லின் மாதிரி சுழன்று காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சங்ககால மக்களின் கடல்சார் வணிகத்தினை பிரதிபலிக்கும் வகையில் சங்ககால கப்பலின் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அகழாய்வில் அரிதாக கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்கள், மட்பாண்டங்கள், அகழாய்வுக் குழிகள், செங்கற்கட்டுமானங்கள் போன்றவற்றின் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அதிமுக்கியமான தொல்பொருட்கள் முப்பரிமாண வடிவில் (3 Dimension) பொதுமக்கள் உவகையுடன் கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...