No menu items!

அடுத்தடுத்து தொகுதி உடன்பாடு – எழுகிறது இந்தியா கூட்டணி!?

அடுத்தடுத்து தொகுதி உடன்பாடு – எழுகிறது இந்தியா கூட்டணி!?

பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் பக்கத்தில் வந்துவிட்ட நிலையில், இந்த 2024 பொதுத்தேர்தலை மனதில் கொண்டு, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட கூட்டணிதான், இந்தியா கூட்டணி. காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கூடி கடந்த ஜூன் மாதம் இந்தக் கூட்டணியைத் தொடங்கின.

இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டாலும்கூட, நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத்தேர்தலை, இந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகள் தனித்தனியாகவே எதிர்கொண்டன. தற்போது பொதுத்தேர்தலை கூட்டாக எதிர்கொள்ளும் முனைப்பில் இந்தியா கூட்டணி இருக்கிறது.

இந்தியா கூட்டணி, எடுத்த எடுப்பில் சில இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தியா கூட்டணியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், பிகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதாதள கட்சி தலைவருமான நிதிஷ்குமார், அவ்வளவு சீக்கிரம் இந்தியா கூட்டணியை விட்டு விலகி, பாரதிய ஜனதா கூட்டணியில் இணைவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

அடுத்ததாக, உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்குப்பகுதியில், ஜாட் மக்களின் செல்வாக்கு மிக்க கட்சியான ராஷ்டிர லோக் தளம், இந்தியா கூட்டணிக்கு ‘குட்பை’ சொன்னது. நிதிஷ்குமார் போலவே ராஷ்டிர லோக் தள தலைவரான ஜெயந்த் சவுத்திரியும், பாரதிய ஜனதா கூட்டணியில் போய் சேர்ந்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

அடுத்தடுத்து நேர்ந்த இந்த அதிர்ச்சிகளுக்குப்பின், இன்னும் சில பின்னடைவுகளும் இந்தியா கூட்டணிக்குக் காத்திருந்தன.

ஆம் ஆத்மி கட்சி, டெல்லியிலும், பஞ்சாபிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் முறுக்கிக் கொண்டது. ‘ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி தனித்துப் போட்டியிடும்’ என அந்தக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா அறிவித்தார். ஆக மொத்தம், இந்தியா கூட்டணிக்கு அடி மேல் அடி!

மேற்கு வங்கத்தின் 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத கட்சி காங்கிரஸ் கட்சி. 2019 பொதுத் தேர்தலில் பெர்காம்பூர், மால்டா என 2 எம்.பி. தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்தநிலையில் திரிணாமூல் கட்சி வெறும் 2 தொகுதிகளைத் தர முன்வர, காங்கிரஸ் கட்சி, 5 எம்.பி. தொகுதிகளைக் கேட்க, இறுதியில், ‘ஒரு தொகுதி கூட தர முடியாது’ என திட்டவட்டமாக அறிவித்தார் முதல்வர் மம்தா பானர்ஜி.

‘பைனாகுலர் வழியாகப் பார்த்தால் கூட காங்கிரசுக்கு 3ஆவது தொகுதி எதுவும் தென்பட வில்லை’ என்று திரிணாமூல் கட்சி செய்தித் தொடர்பாளர் கூட கேலி செய்திருந்தார்.

இந்த மாதிரியான பின்னடைவுகள் தொடர்கதையாகத் தொடர, ஒருகட்டத்தில், இந்தியா கூட்டணி நிற்குமா? நிலைக்குமா? என்ற சந்தேகம் பலருக்கு வந்துவிட்டது.

இக்கட்டான இந்த சூழ்நிலையில்தான், சோனியா காந்தி, பிரியங்கா வாத்ரா இருவரும் களம் புகுந்தனர்.

‘இந்த பொதுத்தேர்தல், பாரதிய ஜனதாவுக்கும், வாக்கு எண்ணிக்கை இயந்திரத்துக்கும் எதிராக நாம் நடத்தும் வாழ்வா சாவா போர். தற்போதுள்ள சூழலில் காங்கிரஸ் கட்சிதான் இறங்கி வர வேண்டும்’ என்ற நிலைப்பாட்டுக்கு வந்த அம்மாவும், மகளும், அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்களிடம், ‘யதார்த்தத்தைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள்’ என்று அறிவுறுத்தத் தொடங்கினார்கள். இந்தியா கூட்டணியின் பல்வேறு மாநில தலைவர்களுடன் தாயும், மகளும் தொலைபேசியில் பேசினர். அதைத் தொடர்ந்து அதிசயம் நிகழத் தொடங்கியது.

ஏழு தொகுதிகள் கொண்ட டெல்லியில், ஆம் ஆத்மிக்கு 4 தொகுதிகள், காங்கிரசுக்கு 3 தொகுதிகள் என முடிவானது.

42 தொகுதிகள் கொண்ட மேற்குவங்கத்தில் 37 இடங்கள் திரிணாமூல் காங்கிரசுக்கும், 5 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும் என முடிவு எட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 80 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேசத்திலும், இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது.

உ.பி.யில், 62 தொகுதிகள் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு. 17 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு. எஞ்சிய ஒரு தொகுதி சந்திரசேகர் ஆசாத் கட்சிக்கு.

இந்தியா கூட்டணியின் மிகப்பெரிய வெற்றியாக இந்த உத்தரபிரதேச தொகுதி உடன்பாடு கருதப்படுகிறது. காரணம் மக்களவைத் தேர்தல் வெற்றியின் முக்கிய குவிமையம் 80 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேசம்தான்.

உத்தர பிரதேசத்துக்கு அடுத்தபடி அதிக அளவில், அதாவது 48 எம்.பி.க்களை, மக்களவைக்கு அனுப்பும் மாநிலம் மகாராஷ்டிரம். அங்கே, காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேயின் சிவசேனைக் கட்சி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையே 39 தொகுதிகளில் ஏறத்தாழ உடன்பாடு எட்டப்பட்டு விட்டது. 9 தொகுதிகளில் மட்டுமே சிக்கல் நீடிக்கிறது.

சிவசேனை கட்சி 23 தொகுதிகளுக்கும் குறையாமல் கேட்கும், சரத்பவாரும் அவரது பிடிவாதத்தை விட மாட்டார் என்பன போன்ற கணிப்புகள் இருந்தாலும், மகாராஷ்டிரத்தில் இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடியும் அறிகுறிகள் தென்படுகின்றன.

சிவசேனை 18 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 11 தொகுதிகளுக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளுக்கும்கூட ஒத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

மும்பை தென்மத்திய தொகுதி, மும்பை வடமேற்கு தொகுதி யாருக்கு என்பதில் போட்டா போட்டி நிலவுகிறது. எனினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஜோடோ நீதி நடைபயணம் மகாராஷ்டிர மாநிலத்துக்குள் நுழையும் வேளையில், 9 தொகுதி சிக்கல் உள்பட அனைத்து சிக்கல்களும் அங்கே சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அசோக் சவான், மிலிந்த் தியோரா, போன்றவர்கள் பாரதிய ஜனதாவுக்கும், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனைக்கும் இடம்பெயர்ந்து விட்டார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சியும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனைக் கட்சியும் இப்போது பிளவுபட்ட கட்சிகள். இருந்தாலும்கூட, இந்த 3 பெரும் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி உடன்பாடு, இந்தியா கூட்டணியில் புதிய உற்சாகத்தை எழுப்பியுள்ளது.

உ.பி., மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடி அனைத்து அரசியல் நோக்கர்களின் பார்வையும் பதிந்திருக்கும் இடம் பிகார். 40 தொகுதிகள் கொண்ட பிகாரில், இதற்குமுன், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளமும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும் தலா 16 தொகுதிகளை பிரித்துக் கொண்டு 8 தொகுதிகளை காங்கிரசுக்குத் தந்தன. தற்போது , நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் அணி மாறி விட்டநிலையில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் 25 இடங்கள் வரை கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிகாரிலும், விரைவில் தொகுதி உடன்பாட்டை எட்டும் முடிவில் இந்தியா கூட்டணி முனைப்புடன் இருக்கிறது.

ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் இடையே, டெல்லியைத் தொடர்ந்து குஜராத், ஹரியானா, கோவா, சண்டிகார் போன்ற இடங்களில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு வருகிறது.

ஹரியானாவில்  காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என கிட்டத்தட்ட முடிவாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் 24 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது. பரூச், பவநகர் ஆகிய 2 தொகுதிகள் ஆம் ஆத்மிக்கு ஒதுக்கப்பட உள்ளன. பரூச் தொகுதி, காங்கிரஸ் தலைவர் அகமது படேல் 3 முறை வென்ற தொகுதி. இந்தமுறை பரூச் தொகுதி மீது அகமது படேலின் மகள் மும்தாஜ் கண்வைத்திருந்தார். இருந்தும் பரூச் தொகுதியில் இந்தியா கூட்டணி உடன்பாட்டுக்கு முன்பே ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டது ஒரு நெருடல்.

இதுபோல கோவா, சண்டிகார் போன்ற இடங்களிலும் இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு எட்டப்பட உள்ளது.

13 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் இந்தியா கூட்டணியில் எந்த உடன்பாடும் இல்லை. 2019 பொதுத்தேர்தலில் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும்,  ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. சட்டமன்றத்தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களை ஆம் ஆத்மி வென்றது. இன்று பஞ்சாபில் ஆளும் கட்சி ஆம் ஆத்மி கட்சிதான்.  இந்தநிலையில் பஞ்சாப் மாநிலத்தில் 13 இடங்களிலும் ஆம் ஆத்மியும், காங்கிரஸ் கட்சியும் தனித்தனியே போட்டியிட உள்ளன.

மத்திய பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடனும், ஆந்திரத்தில் இரு இடதுசாரி கட்சிகளுடனும் காங்கிரஸ் கட்சி தொகுதிப்பங்கீடு செய்ய இருக்கிறது. 14 தொகுதிகள் கொண்ட அசாம் மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு ஒருசில இடங்களை ஒதுக்கிவிட்டு, ஏனைய இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் எனத் தெரிகிறது. இரண்டு தொகுதிகள் கொண்ட மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட விரும்புகிறது.

காங்கிரஸ் ஆளும், கர்நாடகம், தெலங்கானா மாநிலங்களில் இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் பெரிய சிக்கல் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.

இந்தியா கூட்டணி உருவான பிறகு அதுபெற்ற முதல் வெற்றி சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் வெற்றிதான். அந்த முதல் வெற்றி சிக்கலுக்குள்ளாக்கப்பட்டு நீதிமன்றம் வரை சென்று முடிவில் வெற்றி செல்லும் என தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா கூட்டணியின் இந்த வெற்றி, பொதுத்தேர்தலிலும் தொடரும் என்பது அந்த கூட்டணி தலைவர்களின் எதிர்பார்ப்பு.

அரசியல் பரமபதத்தில், ஒரு கட்சியோ கூட்டணியோ, பல ஏணிகளையும், பாம்புகளையும் எதிர்நோக்கித்தான் ஆக வேண்டும். அதுபோலத்தான், இந்தியா கூட்டணியும் பல ஏணிகளையும், பாம்புகளையும் சந்தித்து வருகிறது.

தற்போதுள்ள சூழலில், அடுத்தடுத்த மாநிலங்களில் தொகுதி உடன்பாடுகள் மூலம் இந்தியா கூட்டணி புதிய வேகம் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இந்தியா கூட்டணியின் வெற்றி, அந்த கூட்டணி அடுத்தடுத்து வைக்கப்போகும் சரியான அடிவைப்புகளில்தான் உள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...