No menu items!

புத்தகம் படிப்போம்: முல்லா நஸ்ருத்தீன் கதைகள்

புத்தகம் படிப்போம்: முல்லா நஸ்ருத்தீன் கதைகள்

சஃபி

முல்லா நஸ்ருத்தீன் நமக்கு நன்கு பரிச்சயமானவர்தான். தெனாலி ராமன் கதைகள், பீர்பால் கதைகள் போன்ற சிறுவர்களுக்கான வேடிக்கைக் கதைகளின் வரிசையில் முல்லாவுக்கும் ஓரிடமுண்டு.

ஆனால், நாம் வளரவளர நமக்கும் முல்லாவுக்குமான இடைவெளி அதிகரித்து, காலப்போக்கில் முல்லாவைப் பற்றி ஒரு தெருக் கோமாளிச் சித்திரமே நமது மனதின் ஓரத்தில் கலையாமல் கிடக்கிறது. வாழ்வின் போக்கில் நமது மனம் இயந்திர கதியில் ஒரே மாதிரியாகச் சிந்திக்கப் பழகிவிடுகிறது. அவ்வாறில்லாமல் வாழ்வின் இயக்கத்தை ஒரு குழந்தையின் வியப்புடன் பார்க்கும் தன்மை நமக்குள் மிச்சமிருந்து, நாம் முல்லாவுடன் உரையாடத் தொடங்கினால், நம் கண்ணுக்குத் தட்டுப்படாமல் போயிருந்த கூடுதலான விசேஷ அம்சங்கள் நமக்கு முல்லாவிடம் புரிபடும்.

முல்லா கதைகளின் கடைசி வால் பகுதியில் நீதி உபதேசங்கள் தொங்குவதில்லை. கதைகளின் இறுதிப் பகுதிகளானது கேள்விகளை நம்மை நோக்கித் திருப்பி விட்டபடியேதான் இருக்கின்றன. சினேக பாவத்துடன் நம்மையும் நம்மைச் சுற்றிய சூழலையும் பரிசீலிக்கச் சொல்லுகின்றன அக் கேள்விகள்.

முல்லாவின் கதைகள் சுவாரஸ்யமானவை, அவரது ஹாஸ்யத் துணுக்குகள் நமக்கு ஆசுவாசத்தைத் தரக்கூடியவை. ஆனால், இந்த மேலோட்டமான கேளிக்கை மதிப்பைத் தவிர்த்து, முல்லாவின் கதைகளை ஊன்றிப் படிக்கும்போது கதைகளில் இழையோடும் ஆழ்ந்த பரிமாணங்களைப் புரிந்துகொள்ள முடியும். கதைகளின் வரிகளுக்கிடையே இருக்கும் சொல்லாத சேதிகளைப் பற்றி யோசிக்க வைக்கவும் தூண்டும்.

கவனிக்காமல் விட்டுப்போன தனிமனித மன இயக்கங்களையும் சமூக மனோபாவங்களையும் துண்டுதுண்டாக எடுத்து மீண்டும், நம் கவனத்துக்கு உட்படுத்தும் உளவியல் ஆவணங்களாக இருக்கின்றன முல்லா கதைகள்.

முல்லா கதைகளை மொத்தமாகப் படிக்கும் போது சில மையமான அம்சங்கள் தென்படுகின்றன. ஒரே விஷயத்தைப் பற்றிப் பல்வேறு கதைகள் வெவ்வேறு தளங்களில் பின்னப்பட்டிருக்கின்றன. கதைகள் ஒன்றுக்கொன்று தொடர்பையும் உள்ளீடாக வரும் தொடர்ச்சியையும் கொண்டிருக்கின்றன. உதாரணமாக திருடுதல் என்ற விஷயத்தைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

ஒரு சில கதைகளில் முல்லாவே கழுதைகளைத் திருடுகிறார்; கோதுமையைத் திருடுகிறார். இன்னொரு கதையில் தன்னிடமிருந்த ஒரேயொரு போர்வையையும் கண்ணெதிரே திருடர்களிடம் பறிகொடுத்து விடுகிறார். இன்னொரு கதையில், முல்லா வீட்டிலிருந்து திருடிய பொருட்களைத் தன் வீட்டில் ஒரு திருடன் வைத்துக் கொண்டிருக்கும்போது, முல்லா அத் திருடன் பின்னாலேயே போய், “நாம் வீடு மாற்றிக் கொண்டிருக்கிறோம், அப்படித்தானே?” என்கிறார். இன்னொரு கதையில், முல்லா இரவில் அகஸ்மாத்தாகப் பாட, அவர் வீட்டில் களவாட நுழைந்த திருடன், அதைக் கேட்டுப் பயந்துபோய் வெளியே ஓடி விடுகிறான்.

இன்னொரு கதையில் உண்மையான திருடனின் ரோமங்களில் அரிசி ஒட்டியிருக்கும் என்ற அறிவிப்பின்படி திருடனைக் கண்டறிவதற்காக அடையாள அணிவகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது, நிஜத் திருடன் தைரியமாக நின்று கொண்டிருக்க, முல்லா ‘அப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற கதையாகத் தன் தாடியில் இல்லாத அரிசி மணியைத் தட்டிவிட்டு வம்பாகப் போய் மாட்டிக்கொள்கிறார்.

இன்னொன்றில், தன் வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் தனது பரிதாப நிலையைப் பார்த்து, “அவர்களே ஏதாவது பொருளை வைத்துவிட்டுச் செல்வார்கள்” என்று தன் மனைவியிடம் சொல்லுகிறார். இன்னொரு கதையில், திருடர்கள் வந்த சமயம், திருடர்கள் கொண்டு செல்லும் அளவுக்கு மதிப்பான பொருளெதுவும் தனது வீட்டில் இல்லாததால் அவமானமடைந்து அலமாரிக்குள் போய் ஒளிந்துகொள்கிறார். இன்னொரு கதையில் திருடு நடந்து கொண்டிருக்கும் போது அதைக் கண்டும் காணாதது மாதிரி சத்தங்காட்டாமல் போவார் முல்லா.

இதற்கெல்லாம் உச்சபட்சமாக ஒரு கதையில், முல்லா தம் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி ஒரு கோணிப்பையில் போட்டு நிரப்பிய பின் ஒரு நண்பரைப் பார்த்துவிட்டு வரலாம் என நினைக்கிறார். கூலியாளைக் கூப்பிட்டு, “இந்த மூட்டையை வீட்டில் சேர்ப்பித்து விடு” என்று சொல்கிறார். அதற்குக் கூலியாளும் சம்மதித்து, “எங்கே இருக்கிறது உங்கள் வீடு” என்று கேட்கிறார். அதைக் கேட்டு சந்தேகமடைந்த முல்லா, “திருட்டுப் பயலே, என் விலாசம் தெரிந்துகொண்டு, அப்புறம் ஒரு நாள் என் வீட்டிற்கு வந்து திருடலாம் என நினைக்கிறாயா? நான் அவ்வளவு சுலபத்தில் ஏமாறமாட்டேன். என் வீட்டு விலாசத்தை உன்னிடம் சொல்லவேமாட்டேன்” என்று முன்னெச்சரிக்கையுடன் பதில் கொடுக்கிறார்.

இப்படி சாமர்த்தியமாக கழுதைகளைத் கடத்துவதிலிருந்து, அதற்கு எதிர்முனையில் சாதாரண பலவீனராக, பாதுகாப்புணர்வற்றராக, சந்தேகப்படுகிறவராக என்று எந்த வகைபாடுகளுக்குள்ளும் அடங்காதராக பல மட்டங்களில் நிற்கிறார் முல்லா.

திருட்டின் மறுபக்கமான நீதித்துறை சம்பந்தப்பட்டும் அதிகமான முல்லாக் கதைகள் இருக்கின்றன. அதில் தன்னுணர்வோடும் சுய உணர்வோடும்தான் நஸ்ருத்தீன் தீர்ப்புக் கூறுகிறார். ‘பல்லுக்குப் பல்’ என்ற ஆவேசமானத் தீர்ப்புகளை அவைகளில் காண முடிவதில்லை.

‘நாம் யார்? இப் பிரபஞ்சத்தில் ஏன் இருக்கிறோம்?’ என்ற அடிப்படைத் தத்துவக் கேள்விகளை எழுப்பிய வண்ணமும் பல கதைகள் முல்லாவிடம் இருக்கின்றன.

ஒரு கதையில், இரவு நேரத்தில் ஏதோ வினோதமான ஒன்று அசைந்தாட, அதன் மீது முல்லா அம்பெய்துவிடுவார். காலையில் பார்த்தால், அம்பெய்யப்பட்டப் பொருளானது முல்லாவின் சட்டையாக இருக்கும். அப்போது, “நல்ல வேளை இந்தச் சட்டையை அணியவில்லை. அணிந்திருந்தால், அம்பினால் நானும் கொல்லப்பட்டிருக்கக் கூடும்” என்று முல்லா சொல்லுவார்.

இன்னொரு கதையில் பள்ளிவாசலில் தொழுகைக்கான அழைப்பைக் கொடுத்துவிட்டு, முல்லா வேகமாக ஓடுவார். “ஏன் ஓடுகிறார்?” என்று கேட்பவர்களுக்கு, “எனது இனிமையான குரல் எவ்வளவு தூரம் போய்ச் சேருகிறது என்பதைக் கண்டறிவதற்காக ஓடுகிறேன்” என்று பதில் சொல்லுவார் முல்லா.

இன்னொரு கதையில், நட்டநடு ராத்திரியில் தெருவில் அலைந்து கொண்டிருப்பார். “முல்லா, ஏன் அலைகிறீர்கள்?” என்று கேட்டவர்களுக்கு, “எனது தூக்கம் தொலைந்துவிட்டது. அதைத் தேடுகிறேன்” என்று பதில் சொல்லுவார். தூக்கம் சம்பந்தப்பட்ட இன்னொரு கதையில், “எனக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கமுண்டு. அப்படி நான் நடந்து போவதைப் பார்ப்பதற்காகத்தான் தெருவில் நிற்கிறேன்” என்று முல்லா பதில் சொல்லுவார்.

இப்படி தன் குரலையும் தன்னையுமே பார்ப்பது என்பது நடைமுறையில் சாத்தியப்படாத தர்க்கத்துக்கு ஒவ்வாத விஷயம். அவருடைய பதிலும் சாதாரணத் தளத்தில் கேட்கமுடியாத பிறழ்வான பதில்தான். அப்படி இருக்கும்போது, இந்தக் கதைகள் சொல்லும் செய்தி என்ன? இப்படித் தன் பிம்பத்தை, தனது சுயத்தின் சாயலைத் தேடும் கற்பனையான, வெறுமனே நினைவுத் தளத்தில் மட்டும் நிகழும் இந்தத் தீவிர மனநிலைக்கு இணையான உதாரணத்தை உளவியல் வரலாற்றில் காட்டமுடியும். கதைகளுக்குள் போகப்போக முல்லாவைப் பற்றிய எளிய பிம்பமானது மறையத் தொடங்குகிறது. அவரது சிந்தனையின் அடர்த்தி தட்டுப்படுகிறது.

‘நார்சிசஸ்’ (Narcissus) என்ற கிரேக்கப் புராணப் பாத்திரம் பிறரின் காதலை ஏற்றுக்கொள்ளாத தன்மீதே மோகித்திருக்கும் சுயகாதல் வயப்பட்ட பாத்திரமாகும். ஆற்று நீரில் தனது பிம்பம் பிரதிபலிப்பதைப் பார்த்து அந்தப் பிம்பமானது தனது சொந்தப் பிம்பம்தான் என்று பாதி அறிந்தும் அறியாமலும் அந்தச் நீரிலுள்ளச் சுயபிம்பத்தையே தழுவக் காலமெல்லாம் கரையில் காத்திருக்கும் பாத்திரம் அது.

நம் எல்லோருக்குள்ளும் இந்தச் சுயமோக ஆசை ததும்பி வழிகிறது என்று உளவியல் கோட்பாடுகள் சொல்கின்றன. அந்த ஆசை மிதமிஞ்சிப் போய் நோய்க்கூறாக ஆகாமல் மட்டுப்படுத்த, நம்மை எச்சரிக்கை செய்ய உருவாக்கப்பட்டவை மேற்சொன்ன முல்லா நஸ்ருத்தீன் கதைகள் என்று நாம் அர்த்தப்படுத்திக் கொள்வதற்கு இடமுண்டு.

முல்லா பங்கேற்றப் பாத்திரங்கள் எல்லாம் நம் வாழ்க்கையில் சந்தித்தவைதான். நாமும் முல்லா மாதிரியே ஏதோவொரு தருணங்களில் உணர்ந்திருக்கிறோம், செயலாற்றியிருக்கிறோம். இந்தப் பொதுத்தன்மைதான், நம்முடைய மனத்தடைகளை அற்றுப்போகச் செய்து முல்லாவிடம் ஆசுவாசமாக உணரச் செய்கிறது.

முல்லா நஸ்ருத்தீன் சூஃபி ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம். வாழ்க்கை பற்றி சூஃபிகளின் பார்வைகளை, மதிப்பீடுகளைப் பரப்பவும்; சுய ஆய்வுக்காக, மனதைத் தயார்படுத்தும் பயிற்சிக்காகவும் சூஃபி ஞானிகளால் தயாரிக்கப்பட்டவைகளே முல்லா நஸ்ருத்தீன் கதைகள். தினசரி வாழ்விலிருந்து ஒரு சம்பவத்தைத் துண்டித்து எடுத்து, நம் முன் போட்டு, அதில் நம் கவனத்தைக் குவிய வைத்து, நம்மையே கேள்வி கேட்க, சுயவிமர்சனம் செய்துகொள்ள உருவாக்கப்பட்டவைகள்.

முல்லாவின் கதைகளுக்குச் சர்வதேச வாசகப் பரப்பு இருக்கிறது. பாகுபாடில்லாமல் அமெரிக்காவிலும் கம்யூனிச சீனாவிலும் ரஷ்ய நாடுகளிலும் முல்லாவின் கதைகளானது விரும்பி வாசிக்கப்படுகின்றன. ‘ஏழாவது வானத்தில் தமிழே பேசப்படுகிறது’ என்ற சொல்லாட்சியுள்ள தமிழ் இஸ்லாமியச் சூழலிலும் முல்லாவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

முல்லாவின் ஏழு கதைகளை ஒருவர் தொடர்ந்து கேட்பது, அவரை பரிபூரண நிலைக்குத் தயார்படுத்தும் என்பது சூஃபி மரபில் ஒரு நம்பிக்கையாகும். முல்லாவின் மீது விழுந்த சாபமானது, நமது சாப விமோசனத்திற்கானத் திறவுகோலைக் கொண்டிருக்கிறது.

(விரைவில் வெளிவர இருக்கும் ‘என்றார் முல்லா – முல்லா நஸ்ரூத்தின் கதைகள்’ இரண்டாம் பதிப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை. சித்திரம்: நபி ஹைதர் அலி)

என்றார் முல்லா – தமிழில்: சஃபி; விலை ரூ. 160; வெளியீடு: உயிர்மை பதிப்பகம், 5 முதல் தெரு, பரமேஸ்வரி நகர், அடையார், சென்னை – 600020; மின்னஞ்சல்: [email protected]; தொலைபேசி: 044 – 48586727

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...