கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயற்சி செய்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் 2018ஆம் ஆண்டு சிபிசிஐடி தாக்கல் செய்த விசாரணை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் நிர்மலா தேவி அளித்த பகீர் வாக்குமூலங்களும் வெளியாகியுள்ளன. அதன்படி, “உயர் அதிகாரிகள் என்பதை ஆளுநர் என்று நிர்மலா தேவி தவறாக புரிந்துகொண்டார். தனது பதவி லாபத்திற்காக மட்டுமே மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல நிர்மலா தேவி திட்டமிட்டிருந்தார். வழக்கில் நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகிய 3 பேர் மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவர்கள். அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு இதில் தொடர்பு என்பது வெறும் கற்பனையே” என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்கால கூட்டத்தொடர்: ஒருநாள் கூட மாநிலங்களவை செல்லாத இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. 13 நாட்கள் வரை நடைபெற்ற கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகை பதிவு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, நியமன எம்.பி.க்களில் தடகள வீராங்கனை பி.டி.உஷா 13 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். ஒரு விவாதத்தில் கலந்துகொண்டார். வீரேந்திர ஹெக்டே 5 நாட்களும், விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா கூட்டத்தொடரின் ஒருநாள் கூட கலந்துகொள்ளவில்லை. அவருடைய வருகைப்பதிவு பூஜ்ஜியமாக உள்ளது.
ராகுல் நடை பயணத்தின் நிறைவு விழா: காஷ்மீரில் வருகிற 30-ந்தேதி ஏற்பாடு
அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக நடைபயணம் செய்து கடந்த 19ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் நுழைந்தார். இன்று ராகுல் 130ஆவது நாளாக காஷ்மீரில் பயணத்தை தொடங்கி நடந்து வருகிறார். அவருடன் காங்கிரஸ் தலைவர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதால் ராகுலுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 3,970 கிலோ மீட்டர்தூரம் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் ராகுலின் ஒற்றுமை நடை பயணம் வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) நிறைவுபெறுகிறது. இந்த நிறைவு விழாவை மிக பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்து உள்ளனர். ஸ்ரீநகரில் நடைபெறும் நிறைவு நாள் விழாவில் ராகுல் காந்தி தேசிய கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
வங்கியில் பட்டப்பகலில் கொள்ளை முயற்சி: ‘துணிவு’ படம் பார்த்து கொள்ளையடிக்க வந்ததாக வாக்குமூலம்
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் வாணிவிலாஸ் சிக்னல் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இன்று காலை ஒரு பெண் உள்பட 4 ஊழியர்கள் பணிக்கு வந்தனர். மற்ற ஊழியர்கள் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென உள்ளே புகுந்த ஒரு வாலிபர் வங்கி ஊழியர்கள் மீது மயக்க ஸ்பிரே மற்றும் மிளகாய்பொடியை தூவினார். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தனர். உடனே அந்த வாலிபர் மற்ற 2 ஊழியர்களை கையை கட்டிபோட முயன்றார். உடனே அவர்கள் கூச்சலிட்டனர். அப்போது வங்கிக்குள் வந்த மேலாளர் மற்றும் ஒரு சில ஊழியர்கள் அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர். இதனையடுத்து நகர்மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் பிடிபட்ட வாலிபரை விசாரித்தபோது திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த கலில்ரகுமான் (வயது 25) என தெரியவந்தது. மேலும், “பல்வேறு இடங்களில் வேலை பார்த்தும் எனக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய தொகையை கொள்ளையடித்து வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்தேன். சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்தை பார்த்து அதேபோல வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்தேன்” என்று வாக்குமூலத்தில் குறிப்பிட்டார்.