No menu items!

தமிழ்நாட்டுக்குள் நுழைந்த சீனா கொரானா: சென்னை, மதுரையில் நான்கு பேருக்கு உறுதி

தமிழ்நாட்டுக்குள் நுழைந்த சீனா கொரானா: சென்னை, மதுரையில் நான்கு பேருக்கு உறுதி

சீனாவில் கொரோனா கிருமியின் பிஎப் 7 ஒமைக்ரான் திரிபு வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை விமான நிலையத்திலேயே கண்காணித்து ஆர்டிபிசிஆர் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் பணிகள் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சீனாலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய் – மகள் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து அவர்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். இதுபோல் சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான நிலையில், எந்த வகையான உருமாறிய கொரோனா என கண்டறிய அவர்களுடைய மாதிரி, சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மாநில பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதில், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் மேலும் 47 அதிகரித்து 3 ஆயிரத்து 468 ஆக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலக பணி நியமனத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “நல்ல நிர்வாகத்துக்கு பொது மக்களுடன் இணக்கமாக பழகுதல், உள்ளூர் மொழி தெரிந்திருத்தல், கலாசாரத்தில் பரிச்சயம் போன்றவை மிகவும் அவசியம். ஆனால் பணியாளர் தேர்வு ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த நபர்களில், 4.5 சதவீதம் அளவில் மட்டுமே தென் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கடந்த 2021-2022-ம் ஆண்டுக்கான பணியாளர் தேர்வாணையத்தின் (எஸ்எஸ்சி) ஆண்டு அறிக்கை தெள்ளத் தெளிவாக கூறுகிறது. தென் மண்டலத்தில் ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தால் தட்டச்சர், எழுத்தர், சரக்கு வண்டி காப்பாளர், இளநிலை கணக்கு உதவியாளர், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அல்லர்.

இது வேலை தேடும் தமிழ்நாடு இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், சமூக, அரசியல் வட்டாரத்தில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சமச்சீரற்ற பணித் தேர்வு முறை தவிர்க்கப்பட வேண்டும். தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாட்டில், பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியங்களால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளையும் தமிழிலும் நடத்த வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழ்நாட்டை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

திமுக குடும்ப கட்சி: கோவை பாஜக கூட்டத்தில் ஜே.பி. நட்டா பேச்சு

கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய நட்டா, “தமிழ்நாட்டுக்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசிடமிருந்து ஏராளமான திட்டங்கள் வருகின்றன. நம் நாடு பாதுகாப்பான கரங்களில் உள்ளது. ஆனால், தமிழ்நாடு பாதுகாப்பான கரங்களில் இல்லை.

திமுக என்பது மாநில கட்சி அல்ல. அது ஒரு குடும்ப கட்சி. வாரிசு கட்சி. மாநிலத்துக்கு ஏற்றதை செய்யும் கொள்கையுடன் அந்த கட்சி இல்லை. குடும்பத்துக்கு தேவையானதை செய்யவே உள்ளது. அதுவும் முதல் குடும்பத்துக்கு மட்டுமே. நாங்கள் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளோம். அவர்கள் குடும்ப நலனில் அக்கறை கொண்டுள்ளனர்” என்று பேசினார்.

சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக கேமரா மூலம் கட்டணம்: மத்திய அமைச்சர் தகவல்

சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய சாலை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

மேலும், “நாடு முழுவதும் 6 மாதங்களில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகன எண்களை பதிவு செய்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்” என்றும் வி.கே. சிங் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...