No menu items!

தலைநகரம் திருச்சி: கலைஞர் எதிர்த்த எம்ஜிஆர். திட்டம் – உயிர் கொடுக்கிறதா திமுக?

தலைநகரம் திருச்சி: கலைஞர் எதிர்த்த எம்ஜிஆர். திட்டம் – உயிர் கொடுக்கிறதா திமுக?

‘தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள திருச்சி, மாநிலத்தின் தலைநகர் ஆகும் காலம் வரும்’ என்று அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளது, சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி எதிர்த்த, ‘தமிழகத்தின் தலைநகரம் திருச்சி’ என்ற எம்.ஜி.ஆரின் கனவு திட்டத்தை திடீரென திமுக கையிலெடுப்பது ஏன்?

துரைமுருகன் என்ன சொன்னார்?

திமுக திருச்சி தெற்கு மாவட்ட அணிகளுக்கான கருத்துரை கூட்டம், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திமுக பொதுச் செயலாளரும் மாநில நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், தனது பேச்சின் இடையே, “தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள திருச்சி, மாநிலத்தின் தலைநகர் ஆகும் காலம் வரும். எனக்கு அதிமுக பிடிக்காவிட்டாலும் இந்தக் கருத்து பிடித்திருக்கிறது. இந்தியாவின் தலைநகர் ரொம்ப துாரத்தில் இருப்பதால், அவர்கள் நமக்கு அன்னியனாக தெரிகின்றனர். எனவே, இந்தியாவின் தலைநகரம் ஹைதராபாத்தாக இருக்க வேண்டும். இதுபோல் தமிழத்தின் மத்திய பகுதியில் தலைநகர் இருக்க வேண்டும் என்றால், திருச்சி தான் சரியான இடம்” என்று தெரிவித்தார். இதனையடுத்து துரைமுருகனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் டிரண்டாகியுள்ளது.

எம்.ஜி.ஆரின் கனவு திட்டம்

அமைச்சர் துரைமுருகன் தனது பேச்சில், ‘எனக்கு அதிமுக பிடிக்காவிட்டாலும் இந்தக் கருத்து பிடித்திருக்கிறது’ என்று சொன்னதற்கு காரணம், திருச்சியை மாநிலத்தின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்று இன்று நேற்றல்ல 40 ஆண்டுகளுக்கு முன்பே அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் முயற்சித்தார் என்பதுதான்.

அரசியல் மற்றும் அரசாங்க நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த தலைநகர் மாற்றம் குறித்த தமது விருப்பத்தை எம்.ஜி.ஆர். 1981ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி முதன்முதலில் வெளிப்படுத்தி, ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார்.

“தமிழகத்தின் வடகோடி முனையில் இருக்கிறது சென்னை தலைமைச் செயலகம். இதைத்தேடி தமிழ்நாட்டின் தெற்கு கோடி மக்கள் வருவது சிரமம். தெற்கு கோடி மக்கள் மட்டுமல்ல, அரசுத் துறைகள் சார்ந்த தங்களது பல்வேறு கோரிக்கைகளுக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள பொதுமக்கள் நீண்ட தூரம் பயணித்து சென்னையிலுள்ள அரசு அலுவலகங்களுக்கு வந்து அதிகாரிகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்த நடைமுறை சிக்கலை களைய, தலைநகர் மாநிலத்தின் மையப் பகுதியில் இருக்க வேண்டும். தமிழகத்தின் நடு மையத்தில் இருக்கக்கூடிய திருச்சியை தலைநகரமாக மாற்றவேண்டும்” என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

சென்னையின் கூட்ட நெரிசலுக்கு நிரந்தர தீர்வாக இதனை எம்.ஜி.ஆர். கருதினார். மேலும், சென்னையின் குடிநீர்ப் பற்றாக்குறையும் இத்திட்டத்திற்கு காரணமாக சொல்லப்பட்டது. 1981-82 ஆண்டுகளில் சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, வறட்சி நிவாரணம் – குடிநீர் வழங்கல் நடவடிக்கைகளுக்காக சென்னையில் 500 கோடி ரூபாய் செலவிடுவதற்கு பதிலாக, அந்த பணத்தை வைத்து திருச்சியை தலைநகராக்கி விடலாம் என்றும் எம்.ஜி.ஆர் பரிந்துரைத்தார்.

கலைஞர் ஏன் எதிர்த்தார்?

திருச்சியை தமிழகத்தின் தலைநகராக்கும் திட்டத்துக்காக 1,000 கோடி ஒதுக்கீடு செய்து, திட்டத்தை செயல்படுத்த எம்ஜிஆர் ஆலோசனை செய்துபோது, அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி இதனை கடுமையாக எதிர்த்தார். இதனையடுத்து கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் மூண்டது.

“சென்னையின் வறட்சி நிவாரணத்திற்காக 500 கோடி ரூபாய் செலவிட முடியாத அரசு, புதிய தலைநகருக்காக 1,000 கோடி ரூபாயை எப்படி செலவிடும்” என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார். மேலும், அரசுக்கு எதிரான பிரச்சினைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவே தலைநகரம் விஷயத்தை எம்.ஜி.ஆர். கையிலெடுத்துள்ளார் என்றும் கருணாநிதி குற்றம்சாட்டனார்.

அதிமுகவிற்கு அக்காலகட்டத்தில் சென்னையில் ஏற்பட்ட தொடர் தோல்விகளும் திமுகவின் வெற்றியும்தான் தலைநகரை மாற்றுவதற்கான உண்மையான காரணம் என்றும் திமுக தரப்பில் சொல்லப்பட்டது.

ஆனாலும், ‘நினைத்தை முடிப்பவன் நான்’ என்று திருச்சியை தலைநகராக்குவதில் எம்.ஜி.ஆர். உறுதியானார்.

திருச்சியில் வீடு வாங்கிய எம்.ஜி.ஆர்.

திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை அதிகாரபூர்வமாக 1983இல் எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

அடுத்த ஆண்டே (1984) திருச்சி நவல்பட்டு அண்ணாநகரில் 1,000 ஏக்கர் பரப்பளவில் துணை நகரம் திட்டத்தை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். அகலமான சாலை, வீட்டுமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம் என அனைத்து வசதிகளுடன் துணை நகரம் தயாரானது. அப்போதே அங்கு 5 ஆயிரம் குடும்பத்தினர் குடியமர்த்தப்பட்டனர்.

தொடர்ந்து, திருச்சியில் தான் தங்குவதற்காக காவிரிக் கரையிலிருந்து உறையூர் செல்லும் சாலையில், குடமுருட்டி ஆற்றங்கரை அருகே, சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவு கொண்ட தோட்டங்களுடன் கூடிய பங்களா வீட்டை எம்.ஜி.ஆர். வாங்கினார். சோமரசம்பேட்டையைச் சேர்ந்த பாதிரியார் ஆரோக்கியசாமி என்பவரிடமிருந்து இந்த வீடு வாங்கப்பட்டது. 1984 மே 8 அன்று திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. கட்சிப் பணம் நான்கு லட்சத்தில் இந்த பங்களாவை எம்.ஜி.ஆர். வாங்கியிருந்தார். இதனால், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் திரு. எம்.ஜி. ராமச்சந்திரன்’ வாங்கியதாகப் பத்திரம் பதியப்பட்டது.

இந்நிலையில் திடீரென எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அரசியல் சூழ்நிலை,  எம்.ஜி.ஆர். உடல்நிலை, இந்திராகாந்தி மரணம், திடீர் தேர்தல், தொடர்ந்து எம்.ஜி.ஆர். மரணம் என சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ, தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களால் திருச்சியை தலைநகராக்கும் எம்.ஜி.ஆர். கனவு திட்டம் சத்தமில்லாமல் கைவிடப்பட்டது.

திருச்சியை தமிழகத்தின் தலைநகரமாக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆர். திட்டத்தின் சாட்சியாக நவல்பட்டில் அமைத்த துணைநகரமும் எம்.ஜி.ஆர். திருச்சியில் வாங்கிய பங்காளாவும் இன்றும் இருக்கிறது. (எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் இந்த பங்களா கட்சிக்குதான் பாத்திரமானது என்று ஒரு பகுதியினரும் தங்களுக்குத்தான் சொந்தம் என்று எம்.ஜி.ஆர். அண்ணன் குடும்பத்தினரும் சொந்தம் கொண்டாடியது தனிக்கதை.)

கண்டுகொள்ளாத ஜெயலலிதா

திருச்சியை தமிழகத்தின் தலைநகராக்க வேண்டும் என்ற கோரிக்கை எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னரும் பலரால் அவ்வப்போது எழுப்பப்பட்டது.

2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவரிடம் திருச்சியை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் கனவு திட்டம் கோரிக்கையாக வைக்கப்பட்டது. ஆனால், அதனை ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது 2020இல் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி போன்றோர் மீண்டும் இந்த விவகாரத்தை  எழுப்பினர்.

எம்.ஜி.ஆர். ஆட்சியில் அமைச்சராக இருந்தவரும் தற்போது காங்கிரஸில் இருப்பவருமான திருநாவுக்கரசரும் இதற்கு ஆதரவு தெரிவித்தார். ‘திருச்சி தமிழகத்தின் இதயம் போன்றது. பூகோள ரீதியாக மாநிலத்தின் மையப்பகுதியாக திகழ்வதால் திருச்சி தான் 2-வது தலைநகரத்திற்கு சரியான இடம். தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் சுமார் 4 மணி நேர பயணத்தில் திருச்சியை அடைந்துவிடலாம்’ என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

தமிழகத்தின் முதல் தலைநகரமாக சென்னையையும்  2வது தலைநகராக திருச்சியையும் அறிவிக்க வேண்டும் என்று அன்றைய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. இதற்கு ஆதரவாக, ‘திருச்சியை 2ஆம் தலைநகரமாக்கினால் அதனை சுற்றியுள்ள கரூர், புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள், மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மட்டுமின்றி, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களும் மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் என நான்கு புறங்களிலும் தொழில் வளர்ச்சி பெருகும். போக்குவரத்தும் எளிதாக இருக்கும். தென்மாவட்ட இளைஞர்கள் பலர் வேலைக்காக சென்னையை நோக்கி படையெடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. திருச்சியிலேயே பெரும்பாலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்’ என்று பலர் தெரிவித்தனர்.

ஆனால், இந்த குரல்களை அடக்கும் விதமாக, அதிமுகவில் இருந்தே அப்போது எதிர்ப்பு குரல்களும் எழுந்தன. ‘கலைக்கும் அரசியலுக்கும்’ பெயர் போன மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று அந்த மாவட்டத்தை சேர்த்த அன்றைய அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

‘புதிய தமிழகம்’ கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை, திருச்சி, கோவை என மூன்று தலைநகரங்கள் வேண்டும் என்றார்.

‘நாம் தமிழர் கட்சி’ தலைவர் சீமான், ‘சென்னை, மதுரை, கோவை, திருச்சி, க ன்னியாகுமரி என்று ஐந்து தலைநகரங்கள் அமைய வேண்டும்’ என்றார். (முன்னதாக 2016 சட்டமன்ற தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் திருச்சியை தமிழகத்தின் தலைநகராக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.)

‘பாட்டாளி மக்கள் கட்சி’ நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ‘தலைநகரை மாற்றுவது மட்டும் போதாது, தமிழகத்தினை இரண்டாக பிரித்து திருச்சியை அதன் தலைநகராக்கி விடுங்கள்’ என்றார்.

இந்த திடீர் ‘இரண்டாவது தலைநகர் விவாதம்’ அன்றைய கொரோனா  சிக்கல்களை திசை திருப்பும் முயற்சி என்றும் சிலர் விமர்சித்தனர்.

இந்த விவாதத்தின் போது, திருச்சியை சேர்ந்தவரும் திமுக முக்கிய தலைவர்களில் ஒருவருமான கே.என். நேரு, ‘தமிழகத்தின் இரண்டாவது தலைநகர் என்றால் அது திருச்சிதான்’ என்று அழுத்தம் திருத்தமாக கருத்து தெரிவித்து அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கே.என். நேருவைத் தொடர்ந்து இப்போது துரை முருகனும் இதே பேச்சை முன்னெடுத்துள்ளார். துரை முருகன் சொல்வது போல், திருச்சி தமிழகத்தின் தலைநகரமாகும் காலம் வருமா?

கொசுறு: வரலாற்றில் தலைநகராக பலமுறை பதவி வகித்த திருச்சி

தமிழகத்தின் தலைநகர் சென்னையா திருச்சியா என்ற இன்றைய விவாதங்கள் ஒருபக்கம் இருக்க வரலாற்றில் பலமுறை தலைநகரம் என்ற பதவியை வகித்துள்ளது திருச்சி.

நாயக்கர் ஆட்சியின் தொடக்கத்தில் மதுரையே தலைநகரமாக இருந்தது. திருச்சிராப்பள்ளி மதுரை நாட்டின் எல்லை நகராக இருந்தது. இந்நிலையில், தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினால், தஞ்சை மன்னரோடு போர் புரிய வசதியாக இருக்கும் என்று கருதி கி.பி.1616இல் முதலாம் முத்துவீரப்ப நாயக்கர், திருச்சிக்கு தலைநகரத்தை மாற்றினார். அன்றைய தஞ்சை மன்னரும் சாமானியரல்ல. இதனால் திருச்சிராப்பள்ளி அடிக்கடி கொடூரமான போர்த் தாக்குதலுக்குள்ளானது. இதனால் முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சியே தள்ளாடியது.

முத்து வீரப்ப நாயக்கருக்குப் பின் ஆட்சிக்கு வந்தார் திருமலை நாயக்கர். திருச்சிராப்பள்ளி அடிக்கடிப் போர்த் தாக்குதலுக்கு உட்பட்டதாலும் தென்பகுதியைத் திருச்சிராப்பள்ளியிலிருந்து கவனிக்க இயலாமையாலும் திருமலை நாயக்கர், தன் ஆட்சியின் ஏழாம் ஆண்டில் கி.பி. 1630இல் தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார்.

அடுத்து வந்தார் சொக்கநாத நாயக்கர். இவரும் போர்ப் பிரியர். மீண்டும் தஞ்சையை உரசிப் பார்க்க விரும்பினார். 1665இல் தஞ்சை மீது படையெடுக்க வசதியாகத் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார், சொக்கநாத நாயக்கர். தாத்தா வீர முத்து நாயக்கரைப் போல் பேரன் சொக்கநாத நாயக்கருக்கும் தண்ணீர் காட்டிவிட்டார்கள் தஞ்சைக்காரர்கள். எனவே, அடுத்த மன்னர் காலத்தில் மரியாதையாக மறுபடியும் தலைநகர் மதுரைக்கு போனது.

குடிமக்கள்தான் பாவம் மதுரைக்கும் திருச்சிக்குமாக அலைந்து நொந்துபோனார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...