No menu items!

பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது

பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது

நடப்பு ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குடியரசு தலைவர்  திரவுபதி முர்மு உரையுடன் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் திரவுபதி முர்மு இன்று உரையாற்றும்போது, “உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது பெருமளவில் மாறி உள்ளது. இந்தியா தனது பிரச்சினைகளை தீர்க்க பிறநாடுகளை சார்ந்திருக்காது. மற்ற நாடுகள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவின் உதவியை எதிர்ப்பார்க்கின்றன. 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை மிகச்சிறந்த நாடாக உருவாக்க நாம் பாடுபட வேண்டும்” என்று கூறினார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்ட பின்னர், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர்  முர்மு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும். நாளை தனது 5-வது நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

நாஞ்சில் சம்பத்துக்கு நினைவு திரும்பியது

இலக்கியவாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் கடந்த 24-ம் தேதி நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டு சுய நினைவின்றி நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மகன் மருத்துவர் சரத் பாஸ்கரை, முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார். மேலும் உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு, சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாகர்கோவில் மேயர் மகேஷ் ஆகியோருக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில் ஒரு வாரத்துக்குப் பின்னர் நேற்று நாஞ்சில் சம்பத் சுய நினைவுக்கு திரும்பினார். அவர், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதானி குழுமத்தில் முதலீடு: எல்ஐசி விளக்கம்

அதானி குழுமத்தில் நடைபெற்ற பல்வேறு விதமான மோசடிகளை அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் அதில் முதலீடு செய்த பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி, எஸ்பிஐ-க்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், இதுகுறித்து எல்ஐசி வெளியிட்ட விளக்க அறிக்கையில், “எல்ஐசி நிறுவனம் நிர்வகித்து வரும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் அதானி குழுமத்தின் பங்கு 0.975 சதவீதம் மட்டுமே. அதாவது ஒரு சதவீதத்துக்கும் குறைவாக மட்டுமே அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதானியின் கடன் பத்திரங்களுக்கு ‘‘ஏஏ’’ மற்றும் அதற்கும் மேலான தர மதிப்பீடுகளே வழங்கப்பட்டுள்ளன. எனவே, எல்ஐசியின் முதலீடுகள் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய (ஐஆர்டிஏஐ) வழிகாட்டுதல்களுக்கு இணக்கமாகவே உள்ளது’ என்று எல்ஐசி தெரிவித்துள்ளது.

பெண் மேலதிகாரியின் பாலியல் ஆசைக்கு இணங்காததால் பணி நீக்கம்: கூகிள் முன்னாள் ஊழியர் புகார்

கூகுள் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட நபர் ஒருவர் தனது பெண் மேலதிகாரி மீது குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவர் கூறியுள்ள பாலியல் தொடர்புடைய குற்றச்சாட்டு 2019-ம் ஆண்டு டிசம்பரில் நடந்து உள்ளது. இதுபற்றி வழக்கும் தொடர்ந்து உள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் தொழில்நுட்பம் சார்ந்த விளம்பர பிரிவில் இயக்குனராக இருப்பவர் டிப்பானி மில்லர் என்ற பெண். இவர் பிரிவில் பணியாற்றியவர் ரையான். ரையானுக்கு திருமணம் நடந்து 7 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் சார்பில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியின்போது, ரையானின் உடல் மற்றும் பிற பகுதிகளை டிப்பானி தொட்டு பேசியுள்ளார். மேலும், உங்களுக்கு ஆசிய பெண்களை பிடிக்கும் என எனக்கு தெரியும். நானும் அவர்களில் ஒருவரே. ஆனால், தனது திருமண வாழ்க்கையில் சுவாரசியம் இல்லாமல் போய் விட்டது என கூறியுள்ளார். இதுபற்றி நிறுவனத்தின் மனிதவள துறையிடம் ரையான் புகாராக பின்னர் தெரிவித்து உள்ளார். ஆனால், அவரது குற்றச்சாட்டின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையும் அவர் தனது வழக்கில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்நிலையில், கூகுள் நிறுவன பணியில் இருந்து ரையான் நீக்கப்பட்டு இருக்கிறார். தனது மேலதிகாரிக்கு உள்ளடக்கிய முறையில் நடக்கவில்லை என்பதற்காக இந்த பணி நீக்கம் நடந்துள்ளது என அந்த வழக்கில் ரையான் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...