No menu items!

அதானி சிக்கல் – எல்.ஐ.சி.க்கு ஆபத்தா? அச்சமில்லையா?

அதானி சிக்கல் – எல்.ஐ.சி.க்கு ஆபத்தா? அச்சமில்லையா?

எல்.ஐ.சி துவக்கப்பட்டு 66 ஆண்டுகளில் ‘எங்களை நம்புங்கள், ஒரு பிரச்சினையும் இல்லை’என்று எல்.ஐ.சி. அறிக்கைவிட்டதே கிடையாது.

இப்போது அப்படியொரு அறிக்கையை வெளியிட்டுருக்கிறது.

நாங்கள் எதில் முதலீடு செய்கிறோம் என்பதை நாங்கள் எப்போதும் சொன்னதே இல்லை ஆனால் இப்போதுள்ள அசாதரண சூழலில் சொல்ல வேண்டியிருக்கிறது என்று எல்.ஐ.சி.யின் அறிக்கை துவங்குகிறது.

அது என்ன அசாதரண சூழல்?

இந்தியாவில் கடந்த சில வருடங்களில் அசுர வளர்ச்சி கண்ட அதானி குழுமத்தின் நிதி மற்றும் பங்குகள் குறித்த ஆய்வறிக்கையை ஹிண்டன்பர்க் என்ற அமெரிக்க நிறுவனம் (Hindenburg Research) வெளியிட்டிருக்கிறது.

அதானி குழும முதலீடுகளையும் நிதி நிலைமையையும் பங்குகள் குறித்தும் இரண்டு வருடங்கள் ஆய்வு செய்ததில் அதானி குழுமம் பல முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில் பல கடுமையான குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

குறைந்த வரியுடைய சின்ன நாடுகளில் போலியான கம்பெனிகளை உருவாக்கி பங்கு விலைகளை அதானி குழுமம் ஏற்றியுள்ளது.

அதானி குழுமத்தில் பெரும்பாலான பங்குகள் அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது.
நிறுவனத்தின் உண்மையான மதிப்பிலிருந்து தற்போதைய பங்குகளின் விலை 85% அதிகமாக இருக்கிறது.

அதானி நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்கள் நியாயமானதாக இல்லை.

அதானி குழுமத்துக்கு அரசிடமிருந்து பல்வேறு சலுகைகள் கிடைத்திருக்கிறது.

அதானி குழுமத்தின் முறைகேடுகள் தெரிந்தும் இந்திய பொருளாதார அமைப்புகள் நடவடிக்கை எடுக்கவில்லை

இப்படி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். அதானி குழுமத்துக்கு 88 கேள்விகளையும் எழுப்பியது.

ஹிண்டன்பர்க் அறிக்கை வந்ததுமே அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு வேகமாக சரிந்தன.

இந்த சரிவு கொஞ்சமல்ல, சுமார் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் சரிவு. உலகப் பணக்காரர்களில் இரண்டாமிடத்தில் இருந்த அதானி இப்போது 8-ம் இடத்துக்கு வந்துவிட்டார். இன்னும் சரிந்துக் கொண்டே இருக்கிறது அதானியின் பங்குகள்.

அதானியின் பங்குகள் சரிவு என்பது அதானிக்கு ஏற்பட்ட நஷ்டம் என்று தள்ளி நின்று பார்க்க முடியாது. அதானியின் பங்குகளில் லட்சக்கணக்கான இந்தியர்களின் பணம் இருக்கிறது. அதானியின் பங்குகளின் மதிப்பு சரிந்தால் அதை வாங்கியவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

ஹிண்டன்பர்க் அறிக்கையை மறுத்த அதானி குழுமம் 413 பக்கத்துக்கு விளக்க அறிக்கையும் வெளியிட்டது.

அதானி மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு தேசத்தை அரணாக இழுத்தது.

அதானி குழுமத்தின் 413 பக்க விளக்க அறிக்கைக்கு ஹிண்டன்பர்க் பதிலளித்திருக்கிறது. ’நாங்கள் 88 கேள்விகள் கேட்டிருந்தோம். அவற்றில் 62 கேள்விகளுக்கு அதானி குழுமம் பொத்தாம் பொதுவாக பதில் சொல்லியிருக்கிறது. இந்தியா துடிப்பான ஜனநாயகம், வளர்ந்து வரும் வல்லரசு. அதன் வளர்ச்சியை திட்டமிட்டு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது அதானி குழுமம். தேசபக்தி என்ற போர்வையில் மோசடிகளை மறைக்க முடியாது’ என்று குறிப்பிட்டிருக்கிறது.

இதெல்லாம் சரி, ஏதோ கம்பெனிகளுக்குள் நடக்கும் பிரச்சினை….கோடிகளில் புரள்பவர்களின் பிரச்சினை…எனக்கென்ன இதில் என்று தள்ளிப் போக முடியாது.

அதானி குழுமத்தின் சிக்கலில் இந்தியாவின் மிடில் கிளாஸ் மக்களும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அது பணக்காரர்களின் – பங்கு சந்தையில் புரள்பவர்களின் – உலகம். அதில் எப்படி எளிய மக்கள் சிக்கியிருக்கிறார்கள் என்ற கேள்வி நிச்சயம் எழும்.

அதற்கான விடை அதானியின் பங்குகளை வாங்கியிருக்கும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருக்கிறது.
குறிப்பாக எல்.ஐ.சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் லைஃப் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன்.
மிடில் கிளாஸ் மக்கள் தங்கள் சேமிப்புகளை வைத்திருக்கும் நம்பிக்கை பெற்றிருக்கும் நிறுவனம் எல்.ஐ.சி. ரிட்டயர்மெண்டுக்குப் பிறகு எல்.ஐ.சி.யில் போட்டு வைத்திருக்கும் பணம்தான் அவர்கள் உயிர்நாடி.
இந்த எல்.ஐ.சி நிறுவனம் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கி வைத்திருக்கிறது.

சுமார் 36 ஆயிரத்து 474 கோடி ரூபாய்களுக்கு அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது எல்.ஐ.சி.

அதானி குழுமத்துக்கு சிக்கல் என்றால் எல்.ஐ.சி நிறுவனம் போட்டு வைத்திருக்கும் 36 ஆயிரத்து 474 கோடி ரூபாய்க்கும் ஆபத்து.

அத்தனை பணமும் எளிய மக்கள் தங்கள் சேமிப்புக்காக எல்.ஐ.சி.யிடம் போட்டு வைத்திருக்கும் பணம்.

எல்.ஐ.சி மட்டுமல்லாமல் இந்திய பொதுத் துறை வங்கிகளும் அதானி குழுமத்துக்கு ஏராளமான கோடிகள் கடன் கொடுத்திருக்கின்றன.

இந்தக் கடன் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் என்று சில புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது அதானி குழுமத்தின் மொத்தக் கடனில் 38 சதவீதம் என்றும் கூறப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் பேங்க் மட்டும் 7000 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது.

வங்கிகள் கொடுத்திருக்கும் கடன் ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்திருக்கும் அளவுக்குள்தான் இருக்கிறது. அதனால் பிரச்சினையில்லை என்று வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எல்.ஐ.சி. மற்றும் பொதுத் துறை வங்கிகளில் இருக்கும் பணம் கோடிக் கணக்கான பொதுமக்களின் பணம். இந்தப் பணம்தான் அதானி குழுமத்துக்கு கடனாக சென்றிருக்கிறது.

எல்.ஐ.சி.யும் பொதுத் துறை வங்கிகளும் தாங்கள் பணம் சம்பாதிக்க பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதும் வட்டி வசூலிப்பதும் பொதுவான நடைமுறைதான். அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், டாடா குழுமம், பிர்லா குழுமம் என பல மிகப் பெரிய நிறுவனங்களில் பொதுத் துறை நிறுவனங்கள் பங்குகள் மூலம் முதலீடு செய்து அதன் மூலம் வருவாய் பெறும்.

ஆனால் பொதுவாக மிகக் குறுகிய காலத்தில் அசூர வளர்ச்சி பெறும் நிறுவனங்களிடம் பொதுத் துறை வங்கிகள், நிறுவனங்கள் சற்று கவனமாய்தா ன் இருக்கும். டாடா, பிர்லா, ரிலையன்ஸ் போன்றவை மிக நீண்ட காலமாக தங்கள் நிறுவனங்களை உறுதியாக்கிக் கொண்டவை.

ஆனால் மிக குறுகிய காலத்தில் அபரிதமான வளர்ச்சியைக் காட்டிய அதானி குழுமத்தில் இத்தனை ஆயிரம் கோடி பணத்தை பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்தது சரியா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

சரி, இப்போது எல்.ஐ.சி.யில் பணம் போட்டவர்களுக்குப் பிரச்சினை வருமா?

வராது. எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது எல்.ஐ.சி.

அதற்கு சில காரணங்களையும் கூறுகிறது.

அதானி நிறுவனங்களில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ள 36 ஆயிரத்து 474 கோடி ரூபாயில் 30 ஆயிரத்து 127 கோடி ரூபாய்க்கு அதானி பங்குகளை வாங்கியிருக்கிறது. அந்தப் பங்குகளின் இப்போதைய மதிப்பு – அதாவது ஜனவரி 27 2023 அன்று – 56 ஆயிரத்து 142 கோடி ரூபாய். அதனால் இப்போதும் லாபத்தில்தான் இருக்கிறது என்பது எல்.ஐ.சி.யின் கணக்கு.

அது மட்டுமில்லாமல் எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு 41.66 லட்சம் கோடி ரூபாய். அதில் அதானி குழுமத்தில் முதலீடு செய்திருப்பது 0.975 சதவீதம்தான், அதனால் கவலைப்படாதீர்கள் என்கிறது எல்.ஐ.சி.

அதாவது அந்த 36 ஆயிரம் கோடி ரூபாய் போனாலும் மீதி இருக்கும் பணத்தில் எல்.ஐ.சி வாழும் என்று சொல்லாமல் சொல்லுகிறது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஜனவரி 27 அன்று 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு என்று எல்.ஐ.சி சொல்லுகிறது. ஆனால் அதற்கு சில தினங்களுக்கு முன் என்ன மதிப்பு என்பதை சொல்லவில்லை.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வந்த பிறகு அதானியின் பங்குகளின் மதிப்பு வேகமாக கீழிறங்கியது. அதனால் எல்.ஐ.சி நஷ்டப்பட்டது 18 ஆயிரம் கோடி ரூபாய். இந்த பங்குகளின் மதிப்பு வீழ்ச்சி அடைய அடைய எல்.ஐ.சி.யின் லாபக் கணக்கும் குறைந்துக் கொண்டே வரும் என்பதுதான் உண்மை.

இதேதான் பொதுத் துறை வங்கிகளுக்கும். லாபத்தில் நஷ்டம் என்றுதான் பார்க்கின்றன. முதலுக்கு பிரச்சினை இருக்காது என்று நம்புகின்றன.

எல்.ஐ.சி.யிலோ பொதுத் துறை வங்கிகளிலோ மிடில் கிளாஸ் மற்றும் எளிய மக்களின் பணத்துக்கு ஆபத்து இல்லை என்றே கூறப்படுகிறது.

இப்போது நம்முன் இருக்கும் கேள்வி இதுதான்.

பங்குகள் சரிவுடன் அதானி குழும சிக்கல் நின்று விடுமா? அல்லது அதானி குழுமமே சரிந்து விடுமா?

பங்கு மதிப்பு மட்டும் சரிந்தால் லாபத்தில் நஷ்டம். அவ்வளவே.

ஆனால் அதானி குழுமமே சரிந்தால் பொதுத் துறை வங்கிகளும் எல்.ஐ.சி.யும் முதலீடும் செய்திருக்கும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் மக்கள் பணம் போய்விடும் என்பது மட்டும் நிச்சயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...