No menu items!

பாஜகவால் உடைகிறதா பாமக? – மிஸ் ரகசியா

பாஜகவால் உடைகிறதா பாமக? – மிஸ் ரகசியா

“தமிழக அரசியல்ல இப்போதைக்கு ரொம்ப ஹாட்டான ப்ராபர்டி பாமகதான். அந்த ப்ராபர்டி யாருக்கு கிடைக்கும்ங்கிறதுதான் இப்ப பெரிய பேச்சா இருக்கு” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“அவங்க பாஜக பக்கம் போறது முடிவாயிடுச்சுன்னு சொல்றாங்களே?”

“வெளிய அப்படி பேச்சு இருந்தாலும் ராமதாஸுக்கும், பாமக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாஜககூட சேர்றதுல கொஞ்சம்கூட விருப்பம் இல்லையாம். ஆடிட்டர் குருமூர்த்தி வீட்ல வச்சு அண்ணாமலையை சந்திச்சாரம் அன்புமணி. அப்ப பாமகவுக்கு ராஜ்யசபா எம்பி சீட் தரணும், தனக்கு மத்திய அமைச்சர் பதவி தரணும்னு டீல் சொல்லியிருக்கிறார் போல. அண்ணாமலையும் இதுக்கு கிட்டத்தட்ட சம்மதம் சொன்னதா பாமக வட்டாரத்துல சொல்றாங்க”

“அப்புறம் கூட்டணியை அறிவிக்கறதுல என்ன தயக்கம்?”

“இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சில பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு இருக்காங்க. ‘பாஜகவோட சேர்றது தற்கொலைக்கு சமம்’னு அன்புமணியை எச்சரிச்சு இருக்காங்க. அதுக்கு அன்புமணி, ‘கட்சிக்கு நான் தலைவரா இல்லை நீங்க தலைவரா?’ன்னு முறைச்சாராம். சட்டமன்ற உறுப்பினர்களும் எதுக்கு வம்புன்னு விலகி இருக்காங்க. கட்சிக்காரங்ககிட்ட பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு இருக்கறதாலதான் இன்னைக்கு (மார்ச் 15) நடக்கறதா இருந்த பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தள்ளி வச்சிருக்காங்க. பாஜக விஷயத்துல அன்புமணி பிடிவாதம் பிடிச்சா, பாமக உடைஞ்சு சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவுக்கு போகவும் வாய்ப்பு இருக்குன்னு பேசிக்கறாங்க.”

“இந்த விஷயத்துல ராமதாஸ் ஏதும் சொல்லலையா?”

“அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இதுபத்தி ராமதாஸ்கிட்ட பேசி இருக்கார். அதிமுக கூட்டணி கதவுகள் இன்னும் பாமகவுக்காக திறந்தே இருக்குன்னு ராமதாஸ்கிட்ட சொல்லி இருக்கார். அதுக்கு ராமதாஸ், ‘நான் கட்சியின் நலன் கருதி உங்களோடு கூட்டணி வைக்கணும்னு விரும்பறேன். ஆனா அன்புமணி அவரோட நலத்தைக் கருதி பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆசைப்படுறார். என்னை என்ன செய்யச் சொல்றீங்க?’ன்னு கேட்டிருக்கார். இந்த விஷயத்தை சி.வி.சண்முகம் அப்படியே எடப்பாடிகிட்ட சொல்லி இருக்கார்.”

“அதனாலதான் மன்சூர் அலிகான் கட்சியோட அதிமுக பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பிச்சிடுச்சோ?”

“வெந்த புண்ணுல வேலைப் பாய்ச்சாதீங்க. எடப்பாடியே கூட்டணிக்கு யாரும் செட் ஆகலைங்கிற வருத்தத்துல இருக்கார். தேமுதிகவையாவது விடாம பார்த்துக்கங்கன்னு தொகுதி பங்கீட்டு குழுகிட்ட சொல்லி இருக்கார்.”

“இரட்டை இலை சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம்னு ஓபிஎஸ் தொடர்ந்து சொல்லிட்டு இருக்காரே?”

“முதல்ல அவர் கட்சி சார்பா வேட்பாளரை நிறுத்துவாரான்னு பாருங்க.”

“ஏன்… ஓபிஎஸ்க்கு என்ன ஆச்சு?”

“பாஜக அவர்கிட்ட தாமரை சின்னத்துல வேட்பாளரை நிறுத்தச் சொல்லி கேட்குதாம். ஆனா அப்படி நின்னா இரட்டை இலை சின்னத்துக்காக போராட முடியாதுன்னு ஓபிஎஸ் யோசிக்கறார். அதனால இந்த தேர்தல்ல கட்சி சார்பா வேட்பாளர்களை நிறுத்தாம, பாஜகவுக்கு ஆதரவா பிரச்சாரம் மட்டும் செய்யலாமான்னு யோசிக்கறார்.”

“அப்ப டிடிவி தினகரன்?”

“பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களோட பேசின தினகரன், முக்கியமா 2 நிபந்தனைகளை விதிச்சிருக்கார். முதல் நிபந்தனை அதிமுகவோட இரட்டை இலை சின்னத்தை முடக்கணும்கிறது. அப்படி முடக்கினா தங்கள் அணிக்கு நிறைய வாக்குகள் கிடைக்கும்னு தினகரன் நம்பறார். அதோட இரட்டை இலை சின்னத்தை முடக்கினா பாஜக அணி 10 தொகுதிகளில் ஜெயிக்க தான் கேரண்டின்னும் சொல்லி இருக்கார்”

“மோடிஜியோட கேரண்டியைவிட இது பெரிய கேரண்டியா இருக்கே…. இரண்டாவது நிபந்தனை என்ன?”
“குக்கர் சின்னம். ‘நாங்க குக்கர் சின்னத்தில்தான் போட்டி போடுவோம். உங்கள் தாமரை சின்னத்தைவிட குக்கர் சின்னம் தமிழ்நாட்டில் பிரபலம்’ன்னு அடிச்சு சொல்லிட்டாராம்.”

“இதுக்கு பாஜக சைட் ரியாக்ஷன் என்ன?”

“தினகரனோட பேச்சு கரடு முரடா இருந்தாலும், அவர் ஓபிஎஸ்ஸை விட விவரமான தலைவர்னு பாஜக மேலிடம் நினைக்குது. அதனால அவர் கேட்கிற விஷயங்களை செஞ்சு கொடுக்கறதைப் பத்தி யோசிக்கறாங்களாம்.”

“அப்படின்னா ஓபிஎஸ்சுக்கு இங்கயும் இரண்டாவது இடம்தானா?”

“அது அவருக்கு விதிக்கப்பட்டதாச்சே…”

“திமுக நியூஸ் ஏதும் இல்லையா?”

“அவங்க இப்ப தொகுதிப் பங்கீட்டை முடிச்சு வேட்பாளர் தேர்வு ஸ்டேஜுக்கு போயிருக்காங்க. இந்த முறை நிறைய வாரிசுகளுக்கு சீட் கிடைக்க வாய்ப்பு இருக்கறதா சொல்றாங்க. அமைச்சர் நேருவோட மகன் அருண், ஏ.வ.வேலு மகன் கபிலனுக்கு இந்த முறை சீட் நிச்சயம்னு அடிச்சு சொல்றாங்க. கட்சியிலயும் அதுக்கு பெரிய அளவுல எதிர்ப்பு இல்லை. காங்கிரஸ் கட்சியிலதான் சீட்டுக்கு ஏகப்பட்ட கலாட்டாக்கள் நடந்துட்டு இருக்கு”

“அங்க என்ன கலாட்டா?”

“சில மாதங்களாகவே மாநிலத்துல இருக்கற முக்கிய நிர்வாகிகளை ஒருங்கிணைச்சு டெல்லி தலைமை ஜூம் மீட்டிங் நடத்திட்டு இருக்கு. இந்த வாரம் நடந்த மீட்டிங்ல பேசின செல்வப்பெருந்தகை, ‘தொகுதி ஒப்பந்தத்தின்போது திமுக நமக்கு சில தகவல்களை சொல்லியிருக்கு. ஆரணி, திருவள்ளூர், திருச்சி, கரூர் தொகுதி எம்பிகளின் செல்வாக்கு சொல்லிக்கொள்ளும்படி இல்லாததால அந்த தொகுதிகளை தாங்களே எடுத்துக்கறதா திமுக சொல்லி இருக்குன்னு பேசி இருக்கார்.”

“இதுல திருச்சி தொகுதி திருநாவுக்கரசர் தொகுதியாச்சே…”

“அதுதான் பிரச்சினை. செல்வப் பெருந்தகை பேசினதைக் கேட்ட திருநாவுக்கரசர், ‘திருச்சியில் எனக்கு செல்வாக்கு இல்லைன்னு சொல்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? இந்த விவரங்களை அவர்கள் யாரிடம் சேகரித்தார்கள்? அவர்கள் சொல்வதை எல்லாம் அப்படியே நீங்கள் நம்பிடுவீங்களா? தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு எல்லாம் அவர்கள் முடிவுதானா?’ன்னு கொதிச்சிருக்கார். அப்ப அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கே சி வேணுகோபால் திருநாவுக்கரசர் மீது பொரிந்து தள்ளிளிட்டாராம். ”தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி உண்மையில் வளர்ந்திருக்கிறதா? கட்சிக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? நாம் தமிழ்நாட்டில் தனித்து போட்டிடலாமா?’ன்னு கேட்டிருக்கார். உடனே திருநாவுக்கரசர் அடங்கிப் போயிட்டாராம். இந்த கூட்டத்தில் ஜோதிமணிக்கு யாரும் ஆதரவாக குரல் தரலையாம்.”

“சண்டைன்னா சட்டை கிழியறதும், காங்கிரஸ்னா கோஷ்டி மோதல் இருக்கறதும் சகஜம்தானே”

“ஆமாம்” என்று சிரித்துக்கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...