No menu items!

அமெரிக்காவில் கொலை முயற்சி – இந்தியாவுக்கு சிக்கல்

அமெரிக்காவில் கொலை முயற்சி – இந்தியாவுக்கு சிக்கல்

கனடாவில் நிகழ்ந்த காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டி வரும் நிலையில், காலிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அமெரிக்க குடிமகனான குர்பத்வந்த் சிங் பன்னுனை அமெரிக்காவில் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக, முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால், கனடா – இந்தியா இடையேயான சிக்கல் இப்போது, கனடா – இந்தியா – அமெரிக்கா என்ற முக்கோண சிக்கலாக வளர்ந்துள்ளது. உண்மையில் என்ன நடக்கிறது?

கனடா – இந்தியா இடையே என்ன பிரச்சினை?

சீக்கிய மதத்தைச் சேர்ந்த மக்களை ஒன்று திரட்டி காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கவேண்டும் என்பதற்காக ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவால் அமைக்கப்பட்டது அமைப்பு காலிஸ்தான். இந்த இயக்கம் இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் பஞ்சாப் பகுதியையும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தையும் இணைத்து ஒரு தனி நாடு உருவாக்க வேண்டும் எனக் கூறி போராடி வருகிறது. இந்தியா முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலைக்கு பின்னால் இருந்தது இந்த விவகாரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், காலிஸ்தான் இயக்க ஆதரவாளரும் கனடா குடிமகனுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கனடாவில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்தது இந்தியாதான் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, இந்தியா – கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசு அதிகாரிகள், பிஷ்னோய் என்ற கும்பலைப் பயன்படுத்தி ‘கொலைகள், மிரட்டிப் பணம் பறித்தல், வன்முறைச் செயல்கள், காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தின் ஆதரவாளர்களைக் குறிவைத்தல்’ ஆகிய குற்றங்களைச் செய்வதாக கனடிய காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. பிஷ்னோய் கும்பலை சேர்ந்த பலர் பல்வேறு வழக்குகளில் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்தியா, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான எந்த ஆதாரத்தையும் கனடா வழங்கவில்லை என்று கூறியுள்ளது.

அமெரிக்கா என்ன சொல்கிறது?

அமெரிக்கா, கனடா இரு நாடுகளின் இரட்டைக் குடியுரிமை பெற்றவரும் காலிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படுபவருமான குர்பத்வந்த் சிங் பன்னுனை அமெரிக்காவில் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக, முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி விகாஷ் யாதவ் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

குர்பத்வந்த் சிங் பன்னுனை கொல்ல முயன்றதற்காக விகாஷ் யாதவ் மீது ‘ஆள் வைத்துக் கொலை செய்தல் மற்றும் பணமோசடி’ ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க்கின் தெற்கு மாகாணத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் நேற்று (17-20-24) தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் நிகில் குப்தா, பிராக் (Prague) சிறையில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பன்னுனை கொலை செய்வதற்கான சதித் திட்டத்தின் பின்னணியில் விகாஷ் யாதவ் இருந்துள்ளதாக அமெரிக்கா காவல்துறை குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கொலைத் திட்டத்தைச் செயல்படுத்த அவர் குப்தா என்பவரை நியமித்தார் என்றும் குற்றப்பத்திரிகை சொல்கிறது. “பன்னுன் படுகொலையைச் செயல்படுத்தினால், அதற்கு ஈடாக, மே 2023இல் குப்தாவுக்கு எதிராக இந்தியாவில் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்வதாக விகாஷ் யாதவ் உறுதியளித்துள்ளார்” என்றும் குற்றப் பத்திரிகை கூறுகிறது.

“ஜூன் 2023இல் அல்லது அதற்குப் பிறகு, படுகொலைக்கான சதித் திட்டத்தைச் செயல்படுத்த, குப்தாவிடம் விகாஷ் யாதவ், குர்பத்வந்த் சிங் பன்னுன் பற்றிய தனிப்பட்ட தகவல்களை வழங்கியுள்ளார். இந்தத் தனிப்பட்ட தகவல்களில், நியூயார்க் நகரில் இருக்கும் பன்னுனின் வீட்டு முகவரி, அவருடன் தொடர்புடைய தொலைபேசி எண்கள், அவரின் தினசரி விவரங்கள் ஆகியவை உள்ளது” என்றும் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த குற்றப் பத்திரிகை விகாஷ் யாதவை, “இந்திய குடிமகன், இந்தியாவில் வசிப்பவர். விகாஸ், அமானத் என்ற இரு பெயர்கள் இவருக்கு உள்ளது. இவர் இந்திய அரசின் அமைச்சரவை செயலகத்தில் பணியில் இருந்தார். அதன் கீழ்தான் இந்தியாவின் உயர் புலனாய்வு அமைப்பான `ரா’ (RAW) செயல்படுகிறது. `ரா’ உளவு அமைப்பு பிரதமர் அலுவலகத்தினுடைய (PMO) அதிகாரத்தின் கீழ் செயல்படுகிறது.

‘பாதுகாப்பு மேலாண்மை’, ‘உளவுத்துறை’ ஆகிய பிரிவுகளில் பணி புரியும் ‘மூத்த கள அதிகாரி’ (Senior Field Officer) என்று யாதவ் தனது பதவியை விவரிக்கிறார். இவர் இந்தியாவின் துணை ராணுவ மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) பணியாற்றியுள்ளார். போர்க் கருவிகள், ஆயுதங்களில் பயிற்சி பெற்றுள்ளார்” என்றும் கூறுகிறது.

இந்த வழக்கு விசாரணையில் இந்தியாவின் ஒத்துழைப்பு திருப்தி அளிப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

எனினும், விகாஷ் யாதவ் மீதான குற்றப்பத்திரிகை, அமெரிக்காவில் நடந்த ஒரு கொலை முயற்சியில் இந்திய அரசை நேரடியாகச் சம்பந்தப்படுத்துகிறது என்பதால், இந்த விவகாரம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தியாவின் பதில் என்ன?

இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டால் கனடாவுடன் மோதல் போக்கை கடைபிடித்தாலும், அமெரிக்கா குறிப்பிடுவது போல், அமெரிக்காவில் நடக்கும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், விகாஷ் யாதவ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை.

அதேநேரம், இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “அமெரிக்க நீதித்துறையின் குற்றப் பத்திரிகையில் ‘சிசி-1’ என்று குறிப்பிடப்பட்ட நபர் இந்திய அரசால் பணியமர்த்தப்பட்ட ஒருவர் இல்லை” என்று கூறியுள்ளார். ரந்தீர் ஜெய்ஸ்வால், விகாஷ் யாதவ் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், அவர் யாதவைதான் குறிப்பிடுகிறார் என்று யூகிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கனடா குற்றச்சாட்டு குறித்தும் பேசியுள்ள ஜெய்ஸ்வால், “கனடா குறிப்பிடும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலில் சில நபர்கள் கனடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த நபர்களை நாடு கடத்துமாறு கனடாவிடம் இந்தியா பலமுறை கேட்டுக் கொண்டது. ஆனால், அதற்கு கனடா தரப்பில் எந்தப் பதிலும் வரவில்லை” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...