சமீபத்தில் நாம் அதிகமாக கேள்விபடும் சொல் AI… AI.. AI.. அதாவது Artificial Intelligence, செயற்கை நுண்ணறிவு. இதை பற்றிய புரிதல் ஓரளவுக்கு எல்லோரும் இருக்கும். இந்த உலகையே AI மாற்றப் போகிறது என்று சொல்கிறார்கள்.
எப்படி?
ரஜினியின் எந்திரன் சிட்டி தெரியும்தானே. அதுதான் விஷயம். மனிதனைப் போலவே இயந்திரங்களை, ரோபோக்களை, கம்யூட்டரை சிந்தித்துச் செயல்பட வைப்பதுதான் Artificial Intelligence.
சிந்திப்பதுடன் கேட்பது, பார்ப்பது, சுவைப்பது, நுகர்வது, உணர்வது என்று ஐம்புலன்களைக் கொண்டு மனிதன் செய்யக்கூடிய பணிகளையும் இனி இயந்திரங்கள் செய்யப்போகிறது.
கவிதை எழுதச் சொன்னால் எழுதும். அதுவும் மனுஷ்ய புத்திரன் கவிதை போல் வேண்டும் என்றால் மனுஷ்ய புத்திரனே அசரக்கூடிய அளவுக்கு எழுதித் தரும். மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதுவது போல் கற்றதும் பெற்றதும் எழுதும், சுஜாதா பற்றி கட்டுரை கேட்டாலும் எழுதித் தரும். சினிமாவுக்கு ஸ்கிரிப்ட்கூட எழுதும். பசங்க ஹோம் ஒர்க்கைக்கூட முடித்து தரும்.
Chat gpt-யில் என்ன தேடினாலும் கிடைத்து விடும். அசைன்மெண்ட் தொடங்கி ரெஸ்யூம் வரை அனைத்தும் கிடைக்கும். செய்தியை எழுதும், வாசிக்கும்.
AI உருவாக்கிய படங்கள், வீடியோக்கள் சமூக வளைதலங்களில் ட்ரேன்டிங் – லில் இடம்பெற்றுள்ளது. எலான் மஸ்க், மார்க் சூகர்பெர்க் இருவரும் கைகோர்த்து கடலில் நடந்துவரும் புகைப்படம் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெய்லர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘காவாலா’ பாடலுக்கு தமன்னாவுக்கு பதில் சிம்ரனை நடனம் ஆட வைத்தது வரை ஏஐ-ஐ வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மனிதர்களைப் போலவே செயல்படும், அதுவும் மனிதனைவிட வேகமாக செயல்படும் என்றால் நிறைய பேருக்கு வேலை போய்விடுமே என்று பயம் உருவாகி இருக்கிறது. ஆனால், அப்படியெல்லாம் பயப்படாதீர்கள்… மனிதர்கள் வேலையை காலி செய்யமாட்டோம் என்று உறுதி கொடுத்திருக்கிறார்கள். இந்த உறுதியை கொடுத்துள்ளவர்களும் ஏஐ ரோபோக்கள்தான்.
நல்ல விஷயம்தானே என்கிறீர்களா?
பல நல்ல செயல்களுக்கு பயன்படுவதை போல் தீய செயல்களுக்கும் ஏஐ பயன்படுகிறது என்பதுதான் இப்போது எல்லோரையும் பயங்காட்டியுள்ளது.
கேரளா, கோழிக்கோட்டில் AI பயன்படுத்தி வீடியோ அழைப்பு மூலம் ஒருவரிடம் அவரது நண்பர் உருவம் மற்றும் குரலில் பேசி ரூ.40 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு வாட்ஸ்அப்- மூலம் வீடியோ அழைப்பு வந்தது. அதில் அவரது நண்பர் பேசுவது போல அதே குரலில் அதே உருவத்தில் பேசி ரூபாய் 40,000 ஆயிரம் Google pay – யில் அனுப்புமாறு கேட்டார். இராதாகிருஷ்ணனும் அனுப்பிவிட்டார். மீண்டும் அதே நபர் ரூ. 30,000 அனுப்ப சொல்லிக் கேட்க ராதாகிருஷ்ணன் சந்தேகம் அடைந்து சைபர் குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அப்போது தான் சைபர் குற்றப் பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஏமாற்றியிருப்பது.
இதுபோன்ற தெரியாத எண்களிலிருந்து அழைப்பு வந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களே வீடியோ காலில் வந்து பேசினாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இப்போது சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதுபோல் உலகம் முழுக்க பல சம்பவங்கள். ஏஐ இனி என்னவெல்லாம் செய்யப்போகிறதோ என்று கொஞ்சம் அரண்டுதான் போயுள்ளனர்.
இதனால், உலக நாடுகளில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நன்மை, தீமைகள் பற்றிய விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கவனத்தில் கொண்டு இது தொடர்பான விவாதக் கூட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில மாதங்களாகவே நடத்தி வருகிறது.
அந்த வகையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் நேற்று மாலை நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தை பிரிட்டன் தலைமையேற்று நடத்தியது. கூட்டத்தில் பல்வேறு நாடுகள் செயற்கை நுண்ணனறிவுத் தொழில்நுட்பத்தின் சாதக, பாதங்கள் குறித்து கருத்து தெரிவித்தன.
ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரேஸ் பேசும்போது, “செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் சைபர் தாக்குதல்கள் ஏற்கெனவே ஐ.நா.வின் அமைதி மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது, நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்படும். இதில், உயிர் சேதங்களும் ஏற்படும். செயற்கை நுண்ணறிவு – சாட் ஜிடிபி போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்படும் செய்திகள், உருவங்கள், படங்கள் தவறான தகவல் மற்றும் வெறுப்பை பரப்பி மனித செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகளை நன்மைக்காக மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும் என்பதே இந்தக் கூட்டத்தின் முக்கியக் குறிக்கோளாக உள்ளது. எனினும், இம்மாதிரியான தொழில்நுட்பங்கள் அரசாங்கங்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.