No menu items!

காணாமல் போன Frindship – இந்திய கிரிகெட் அணியின் பிரச்சினை

காணாமல் போன Frindship – இந்திய கிரிகெட் அணியின் பிரச்சினை

கிரிக்கெட் என்பது குழு ஆட்டம். அணியில் உள்ள 11 வீர்ர்களும் ஒற்றுமையாக எல்லோரும் ஒன்று என்ற மனநிலையுடன் ஆடினால்தான் வெற்றியைக் கைப்பற்ற முடியும். ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீர்ர்களிடையே இப்போது பெரிய அளவில் நட்பு இல்லை. அணியில் உள்ள வீர்ர்கள் யாரையும் நண்பர்களாக பார்க்க முடியவில்லை. சக வீர்ராக மட்டுமே பார்க்க முடிகிறது என்ற குற்றச்சாட்டு சமீபத்தில் எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை எழுப்பியவர் ஒரு கிரிக்கெட் விமர்சகரோ அல்லது அணிக்குள் புதிதாக நுழைந்த வீர்ரோ அல்ல. 10 ஆண்டுகளுக்கும் மேலாக அணியில் இருக்கும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங்குக்கு அடுத்ததாக இந்தியாவுக்காக அதிக விக்கெட்களைக் கைப்பற்றியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின்தான் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன் செய்தியாளர் ஒருவர் தன்னிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அஸ்வின், “ஒரு காலகட்டத்தில் இந்திய அணியில் இருந்த அனைத்து வீர்ர்களும் பரஸ்பரம் நல்ல நட்புடன் இருந்தார்கள். அனைவரிடமும் மனம்விட்டு பேச முடிந்தது. விஷயங்களைப் பகிர முடிந்தது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. இந்திய அணியில் தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொள்ள ஒவ்வொருவரும் போராட வேண்டி இருக்கிறது. அணிக்குள் உள்ள மற்ற வீர்ர்களுடனேயே போட்டி போட வேண்டியிருக்கிறது. அதனால் அணிக்குள் இருக்கும் யாரும் நண்பர்களாக இல்லை. சக வீர்ர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.

நாம் நம்முடைய எண்ணங்களை சக வீர்ர்களுடன் பகிர முடிந்தால் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். பரஸ்பரம் மற்றவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இப்போது அது நடப்பதில்லை. ஒவ்வொருவரும் தனிப்பட்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. உதவிக்குகூட யாரும் வருவதில்லை” என்று கூறி இருந்தார்.

2 நாட்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீர்ரான பிருத்வி ஷாவும் அதே கருத்தைச் சொல்லி இருக்கிறார். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பிருத்வி ஷா, “அணியில் இருந்து என்னை நீக்கியபோது, எதற்காக நீக்கினார்கள் என்றே தெரியவில்லை. யாரிடமும் கேட்கவும் முடியவில்லை. ஒருசிலர் பிட்னெஸ் பிரச்சினையால் என்னை அணியில் இருந்து நீக்கியதாகச் சொன்னார்கள். ஆனால் நான் பிட்னெஸில் பல கட்டங்களில் தேர்ச்சி பெற்றுத்தான் அணிக்குள் இடம் பிடித்தேன். அதற்குப் பிறகு அந்த காரணத்துக்காக ஏன் என்னை அணியில் இருந்து நீக்கினார்கள் என்று புரியவில்லை. அதைப்பற்றி யாரிடமும் விவாதிக்கக்கூட பயமாக இருக்கிறது இந்திய அணியில் உள்ள அனைவரும் சக வீர்ர்களுடன் பேசுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதே சமயம் யாருடனும் மனம்விட்டு பேசுவதில்லை” என்று கூறியிருக்கிறார்.

இப்படி இந்திய கிரிக்கெட் வீர்ர்கள், பரஸ்பரம் நட்பு இல்லாமல் தனித்தனி தீவாக இருப்பதாக சொல்வது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்திய அணியின் இப்போதைய இந்த நிலைக்கு ஐபிஎல் ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம். இந்திய அணிக்காக வீர்ர்கள் அனைவரும் இணைந்து ஆடினாலும், ஐபிஎல்லில் தனித்தனி அணிக்காக வீர்ர்கள் ஆடி வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு உள்ளேயே ஒருவித போட்டி மனப்பான்மை ஏற்படுகிறது. இந்திய அணிக்குள்ளேயே மும்பை இந்தியன்ஸ் கோஷ்டி, குஜராத் டைட்டன்ஸ் கோஷ்டி, ஆர்சிபி கோஷ்டி என்று பல பிரிவுகளாக வீர்ர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். இதற்கு முன்பு மாநில அணிகளாக அவர்கள் பிரிந்து ஆடினாலும், ஐபிஎல்லில் உள்ள பணம் அவர்களின் உறவை பாதித்து இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கவாஸ்கர், இதற்கு மற்றொரு காரணத்தைக் கூறுகிறார். “நாங்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்த காலத்தில் எந்த வீர்ருக்கும் தனி அறை கிடையாது 2 பேருக்கு ஒரு அறை, 3 வீர்ர்களுக்கு ஒரு அறை என்று மற்றவர்களுடன் அறையைப் பகிர்ந்திருந்தோம். 20 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த நடைமுறை இருந்தது. அப்போது சக வீர்ர்களிடம் கிரிக்கெட் மட்டுமின்றி இசை, திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பேசுவோம். அது எங்கள் நட்பை வலுப்படுத்தியது. ஆனால் இப்போது கிட்டத்தட்ட எல்லா வீர்ர்களுக்கும் ஓட்டலில் தனித்தனி அறைகள் வழங்கப்படுகின்றன. வீர்ர்களிடையே நட்பு குறைவதற்கு இதுவும் ஒரு காரணம்” என்கிறார் கவாஸ்கர்.

வீர்ர்களிடம் நட்பு குறைவதர்கு காரணம் ஐபிஎல்லா, தனி அறைகளா என்பதல்ல இப்போதைய பிரச்சினை. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா ஒரு ஐசிசி கோப்பையைக்கூட வெல்லாததற்கு வீர்ர்களிடம் நட்பு இல்லாததே காரணம் என்பதுதான் இப்போதைய பிரச்சினை. இந்த பிரச்சினையை உடனடியாக தீர்க்காவிட்டால், வீர்ர்களிடையே நட்பு மலராவிட்டால், எதிர்காலத்திலும் இந்தியாவால் கோப்பைகளை வெல்ல முடியாது. இதை வீர்ர்களும், கிரிக்கெட் வாரியமும் உணர்ந்தால் சரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...