No menu items!

நியூஸ் அப்டேப்: துப்பாக்கிக்கு துப்பாக்கியால் பதில் – ஆளுநர் பேச்சு

நியூஸ் அப்டேப்: துப்பாக்கிக்கு துப்பாக்கியால் பதில் – ஆளுநர் பேச்சு

கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “துப்பாக்கியை பயன்படுத்துவர்களை துப்பாக்கி கொண்டுதான் கையாள வேண்டும். வன்முறையை எதிர்கொள்வதில் துளியும் சகிப்புத்தன்மை தேவையில்லை. தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடுக்கு எதிராக பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை அவசியமில்லை. கடந்த 8 ஆண்டுகளாக நம் நாட்டில் எந்தவித ஆயுதம் ஏந்திய குழுக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

மும்பை தீவிரவாத தாக்குதலை தேசம் மறக்க முடியாது. அந்த சம்பவத்தை அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கையாண்ட விதத்தையும் மறக்க முடியாது. நம் நாட்டை வெறும் 10 தீவிரவாதிகள் மிரள வைத்தனர். அந்தத் தாக்குதல் நடந்து 9 மாதங்களில் அப்போதைய பிரதமரும் பாகிஸ்தான் பிரதமரும் ஒரு கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். அதில் இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவை என்று கூறப்பட்டிருந்தது. இதை எப்படி ஏற்க முடியும்.

ஆனால், புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா பாலாகோட்டில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. நீங்கள் தீவிரவாத தாக்குதல் நடத்தினால் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்ற செய்தியை அந்தத் தாக்குதல் கடத்தியது. அப்படித்தான் ஒரு அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும்” என்றார்.

கலைஞர் நினைவு நாள் – முதல்வர் தலைமையில் அமைதி பேரணி

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி நினைவு நாளான ஆகஸ்ட் 7ம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக் கொண்ட முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் 4ஆவது நினைவு நாளையொட்டி முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி, ஆகஸ்ட் – 7, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரர் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் குரங்கு அம்மைக்கு ஒருவர் உயிரிழப்பு

கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் உலகம் முழுவதும் குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை 75 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோயை ஏற்படுத்தும் வைரஸ், 1980-களில் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெரியம்மை நோயை ஏற்படுத்தும் ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் உடன் இணைந்த பண்புகளைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலும் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குரங்கு அம்மை நோய்க்கு இதுவரை கேரளாவில் 3 பேரும் டெல்லியில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவருமே வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பியவர்கள். ஆனால், டெல்லியில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டிருப்பவர் எந்த வெளிநாட்டுக்கும் செல்லாதவர்.

இந்நிலையில் கேரளாவில் குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று உயிரிழந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த குருவாயூர் பகுதியை சேர்ந்த அந்த 22 வயது இளைஞர் கடந்த 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடமிருந்து எடுத்த மாதிரிகள், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

குரங்கு அம்மை நோய்க்கு ஆப்பிரிக்காவுக்கு வெளியே நிகழ்ந்துள்ள முதல் உயிரிழப்பு இது. பிரேசில் நாட்டிலும் 41 வயதான நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் விலக்கு – தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “கொரோனாவால் பெற்றோரை இழந்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கும் கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் அதே பள்ளியில் கல்வி பயில்வதை பள்ளிகள் உறுதி செய்திட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

மார்பில் பச்சை குத்த வற்புறுத்திய காதலன்: போலீசில் புகார் செய்த காதலி

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் பூ வியாபாரம் செய்து வரும் 28 வயதுடைய வாலிபரும், பக்கத்து ஊரைச் சேர்ந்த பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் வாலிபர் காதல் டார்ச்சர் செய்ய தொடங்கியுள்ளார். மாணவி எங்கு சென்றாலும் பின்தொடர்வது, நான் உயிர் வாழ்வதே உனக்காக தான் என வசனங்கள் பேசுவது என தொடர்ந்தவர், திடீரென மாணவியின் மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்த வற்புறுத்தியுள்ளார்.

வாலிபரின் காதல் லீலை அத்துமீறி செல்வதால் பயந்துபோன மாணவி, தனது வீட்டில் கூறியுள்ளார். அவரது தந்தை மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வாலிபர் மீது புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...