டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்றது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் நடந்த கலவரம் தொடர்பான ஆவணப் படத்தை இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி சமீபத்தில் வெளியிட்டது. கலவரத்தில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதுபோல அதில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், பிபிசியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். நேற்று காலையில் தொடங்கிய சோதனை, இரண்டாவது நாளாக இன்றும் நீடித்தது.
பிபிசியின் நிதித்துறை, வேறு சில துறைகளைச் சேர்ந்த ஊழியர்களிடம் விசாரணை நடந்தினர் பிற ஊழியர்கள், பத்திரிக்கையாளர்களை வெளியேற அனுமதித்தனர்.
பாஜகவில் இருந்து சி.பி. ராதாகிருஷ்ணன் விலகல்
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜகவில் தான் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார்.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தனது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் சி.பி.ராதாகிருஷ்ணன் ராஜானாமா செய்தார். இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது, “இன்று சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக அலுவலகத்திற்கு வந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் அளித்துள்ளார். அவரின் விலகல் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவரின் அடுத்தக் கட்டப் பணி சிறப்பாக இருக்க வேண்டும். பிரதமரின் கரங்களை அவர் வலுப்படுத்த வேண்டும்.” என்று கூறினார்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க இன்று கடைசி நாள்
தமிழ்நாட்டில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.
ஏற்கனவே, 3 முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டதால், மேற்கொண்டு வழங்கப்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று மாலை வரை 2.59 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இது மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி & விவசாய இணைப்புகளில் 97.07% ஆகும். இதுவரை இணைத்திடாதவர்கள், கடைசி நாளான இன்று மாலைக்குள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
புஜாராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களம் இறங்கப் போகும் சேதேச்வர் புஜாராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரான புஜாரா, தனது 100-வது டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெல்லியில் நடக்கவுள்ள டெஸ்ட் போட்டி, அவரது 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்நிலையில் நிலையில் புஜாரா நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்த்தித்துள்ளார். அவருக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து மோடி வெளியிட்டுள்ள பதிவில் , ‘புஜாரா உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களின் 100வது டெஸ்ட் போட்டிக்கு வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.