No menu items!

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? – மிஸ் ரகசியா

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? – மிஸ் ரகசியா

”காதலர் தின வாழ்த்துகள்” என்று சொல்லிக்கொண்டே ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“காதலர் தினமாச்சே உனக்கு ஆயிரம் வேலை இருக்குமேனு நினைச்சேன். பரவாயில்லை வந்துட்டே.”

“என்னை மாதிரி கடமையே கண்ணா இருக்கற ஜர்னலிஸ்ட்களுக்கு காதல் எல்லாம் சரிப்பட்டு வராது. நாங்கல்லாம் வேலையை மட்டும் காதலிக்கற ரகம்” சிரித்தாள் ரகசியா.

“நம்பிட்டோம்..நம்பிட்டோம்..சரி, பிரபாகாரன் உயிரோடு இருக்கிறார்னு நெடுமாறன் சொல்றாரே…அப்படியா?”

“நீங்கதான் வாவ் தமிழா யூடியுப்ல (https://www.youtube.com/watch?v=HIMs8CGla7k) பிரபாகரன் ஆவி கூடயே பேசிட்டிங்களே”

“விஷயத்தை சொல்லு..”

“இது நெடுமாறனுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்டுனு சொல்றாங்க. இலங்கைத் தமிழர்கள்கிட்ட பேசுனேன். அவங்க அதை மறுக்கிறாங்க. பிரபாகரன் இத்தனை நாள் ஒளிஞ்சு இருக்க மாட்டாருனு சொல்றாங்க. கிட்டத்தட்ட 14 வருஷம் ஆயிடுச்சுல. இது இந்திய அரசோட வியூகம்னு இலங்கைகல பேச்சு இருக்கு. இலங்கை தமிழர்கள் பகுதில பாஜக போன்ற ஒரு கட்சியை உருவாக்க வேண்டும் என்று பாஜகவினர் முயற்சி செய்து வருகிறார்கள், அதன் தொடர்ச்சியாகதான் இதை பார்க்க வேண்டும் என்று சில அரசியல் விமர்சகர்கள் சொல்றாங்க. சீனாவோட ஆதிக்கம் இலங்கைல அதிகமாகிட்டு வருது. அதற்கு செக் வைக்கணும்னா பிரபாகரன் போன்ற ஒரு ஆள் வேணும்னு நமது உளவுத் துறையே கிளப்பிவிட்ட செய்தினும் சொல்றாங்க. இப்படி பல கதைகள் பேசப்படுது”

”பிரபாகரனுக்கு இறப்பு சான்றிதழ் தரவில்லை, மரபணு பரிசோதனை அறிக்கை வெளியிடவில்லை என்று சந்தேகம் கிளப்புகிறார்களே?”

“இது நீண்ட காலமாக இருக்கும் சந்தேகம். போரில் பிரபாகரன், அவரது மகன்கள் கொல்லப்பட்ட செய்திகளைதான் பார்த்தோம். படித்தோம். ஆனால் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் மகள் துவாரகாவும் என்ன ஆனார்கள் என்ற செய்தி இதுவரை வரவில்லை. அவர்கள் போரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றுதான் இலங்கை அரசு தெரிவித்தது. அவர்கள் இருவரும் உயிரோடு வெளிநாட்டில் இருக்கலாம். அவர்கள் திரும்பி இலங்கைக்கு வரலாம் என்ற செய்தியும் இருக்கிறது”

“ஆனா, யாரும் பிரபாகரன் உயிரோடு இருக்கார்னு சொல்லல”

”உயிரோடு இருக்கார்னு சொல்லலா ஆனா உயிரோடு இருந்தா நல்லாருக்கும்னு சொல்றாங்க”

“நீயும் கமல் மாதிரி பேசுறியா? சரி, ஈரோடு கிழக்கு எப்படி இருக்கு?”

“ஈரோடு கிழக்கு தேர்தல் பத்தி சொல்றதுக்கு முன்னாடி தேர்தல் முடிஞ்சதும் என்ன நடக்கப் போகிறதுன்றதை சொல்லிடுறேன். தேர்தல் முடிஞ்சதும் அமைச்சரவையில ஒரு சின்ன மாற்றம் இருக்கலாம். ஆவடி நாசரை பதவியில இருந்து நீக்க முதல்வர் திட்டமிட்டு இருக்கறதா அறிவாலயத்துல பேச்சு இருக்கு”

“கல்லைத் தூக்கி அடிச்சதுல இருந்தே அவருக்கு நேரம் சரியில்லை. என்ன காரணமாம்?”

”அவர் மேல நிறைய புகார் வந்துருக்கு. அவர் மேல நடவடிக்கை எடுத்தா மத்த அமைச்சர்களுக்கும் பயம் வரும்னு முதல்வர் நினைக்கிறார்.”

“அவர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவராச்சே…அவரை முதல்வர் நீக்குவாரா?”

“அந்த இடத்துக்கு சிறுபான்மை சமூகத்தை இன்னொருவர் அமைச்சராக நியமிக்கப்படுவார். அவ்வளவுதான் மேட்டர்”

”சரி, இடைத்தேர்தல் நிலவரம் எப்படி இருக்கு?”

“மொத்த அமைச்சர்களும் இப்ப ஈரோடு கிழக்குலதான் இருக்காங்க. அங்கயே இருக்கவேண்டி இருக்கறதால ஆளுக்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்காங்க. வீட்டு உரிமையாளர்களும் அவங்களோட தேவையை பயன்படுத்தி 25 ஆயிரத்துல இருந்து 30 ஆயிரம் வரைக்கும் முன்கூட்டியே வாடகையை வசூலிச்சிருக்காங்க. அமைச்சர்கள் தங்களுக்காக மட்டுமில்லாம தங்களைச் சுத்தி இருக்கறவங்களுக்காகவும் வீட்டை வாடகைக்கு எடுத்திருக்காங்க. அவங்களோட வாடகை, சாப்பாட்டு செலவுக்காக மட்டுமே பல லட்ச ரூபாயை செலவு பண்ணி இருக்காங்க. அமைச்சர் எ.வ.வேலு மட்டுமே கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேரை ஈரோடு கிழக்கு தொகுதியிலயும், பக்கத்து ஊர்கள்லயும் தங்க வச்சிருக்கார். அவங்களுக்கு சாப்பாடு கொடுக்க திருவண்ணாமலையில இருந்து சமையல்காரங்களை கொண்டு வந்திருக்காராம்.”

“பரவாயில்லையே அமைச்சர்கள் சுறுசுறுப்பா இருக்காங்களே?”

“கூடவே அவங்க புலம்பவும் செய்யறாங்க.?”

“எதுக்காக புலம்பறாங்க?”

“நாம எல்லாரும் கஷ்டப்பட்டு காங்கிரஸ் வேட்பாளருக்காக பிரச்சாரம் பண்றோம். ஆனா காங்கிரஸ் கட்சிக்காரங்க இந்த தேர்தலைப் பத்தி கொஞ்சம்கூட கவலைப்படாம இருக்காங்களேன்னு அவங்க புலம்பறாங்க. இந்த தேர்தல்ல போட்டியிட அங்க இருக்கற காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் விரும்பி இருக்கார். ஆனா கட்சித் தலைமை அவருக்கு சீட் கொடுக்காம ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு சீட் கொடுத்திருக்கு. அந்த வருத்தத்துல மாவட்ட செயலாளர் தேர்தல் பிரச்சாரத்துல கவனம் செலுத்தாம இருக்காராம். பிரச்சாரம் பண்ற காங்கிரஸ் தலைவர்கள் மத்தியிலயும் ஏகப்பட்ட கோஷ்டி பூசல்கள் வெளிப்படையா தெரியுதாம். இதையெல்லாம் பார்த்து திமுக அமைச்சர்கள் கடுப்பா இருக்காங்க. ‘போன தேர்தல்ல அதிமுக கூட்டணியில இங்க தமாகாதான் நின்னது. ஆனா இந்த தேர்தல்ல உங்களுக்கு சீட் இல்லை. நாங்கதான் நிக்கப் போறோம்னு வாசன்கிட்ட எடப்பாடி உறுதியா சொல்லிட்டாரு. அதேமாதிரி தளபதியும் காங்கிரஸ் தலைவர்களை கூப்பிட்டு பேசி திமுக வேட்பாளரையே களத்துல நிறுத்தி இருக்கலாம்’னு பேசிக்கறாங்க.”

“திமுக தலைமை அவங்களை சமாதானப்படுத்தலையா?”

“சமாதானப்படுத்தறாங்க. கூடவே இந்த இடைத்தேர்தல் திமுக ஆட்சிக்கான சோதனைங்கிறதை மனசுல வச்சு செயல்படுங்கன்னும் சொல்லிட்டு இருக்காங்க. தேர்தல் பணிகளை முதல்வர் ஸ்டாலின் உன்னிப்பா கவனிச்சுட்டு வர்றார். உளவுத்துறை கொடுக்கற தகவல், அமைச்சர்கள் கொடுக்கற தகவல் போதாதுன்னு தன்னோட மருமகன் சபரீசனையும் தொகுதிக்கு அனுப்பி நிலையை கண்காணிக்கச் சொல்லி இருக்காரு”

“அதிமுக கேம்ப் எப்படி இருக்கு?”

“இரட்டை இலை சின்னம் கிடைச்சதால உற்சாகமா இருக்கு அதிமுக. நாளையில இருந்து பிரச்சாரத்தை தொடங்கறார் எடப்பாடி. அதே நேரத்துல செங்கோட்டையன் தலைமையில வேலுமணி, தங்கமணின்னு முன்னால் அமைச்சர்கள் சுறுசுறுப்பா சுத்திட்டு இருக்காங்க. அவங்களோட பிரச்சாரத்தைப் பத்தி உளவுத் துறையும் அப்பப்ப முதல்வருக்கு தகவல் சொல்லிட்டு வருது.”

“ஒருவழியா அண்ணாமலை ஈரோடு கிழக்குல பிரச்சாரம் பண்ண டேட் கொடுத்துட்டாரே.”

“ஆமா 19,20 தேதிகள்ல பிரச்சாரம் செய்யப் போறதா அறிவிச்சிருக்காரு. ஆனா அவர் மட்டும்தான் பிரச்சாரம் செய்வார்னும், தான் அவரோட சேர்ந்து பிரச்சாரம் செய்யப் பாறது இல்லைன்னும் எடப்பாடி அறிவிச்சிருக்கார். ரெண்டு கட்சி தொண்டர்களோட மனமும் இணையாம இருக்கிறதுதான் இதுக்கு காரணம். ”

“2 கூட்டணிகளும் சுயேச்சை வேட்பாளரைப் பார்த்து பயப்படறதா சொல்றாங்களே?”

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்ல 73 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடறாங்க. இத்தனை பேர் போட்டியிடறதோட பின்னணி தெரியாம திமுக, அதிமுக தலைவர்கள் குழம்பிட்டு இருக்காங்க. இந்த வேட்பாளர்கள் ஒவ்வொருத்தரும் குறைந்தபட்சம் 300 ஓட்டுகளை வாங்கினாலே மொத்தம் 21 ஆயிரம் ஓட்டுகளைத் தாண்டும். இது எந்தக் கட்சியோட வாக்குகளா இருக்கும்னு அவங்க பயப்படறாங்க. ஒரு பக்கம் இந்த சுயேச்சை வேட்பாளர்கள் திமுகவால நிறுத்தப்பட்டவங்கன்னு அதிமுக தரப்பு, அதிமுகவால நிருத்தப்பட்டவங்கன்னு திமுக தரப்பும் மாத்தி மாத்தி குற்றம் சாட்டிட்டு வர்றாங்க. மொத்தத்துல கட்சி வேட்பாளர்களைவிட சுயேச்சை வேட்பாளர்களைப் பார்த்து 2 கட்சியும் பயந்துட்டு இருக்கு.”

“கட்சி வேட்பாளர்களைப் பார்த்து சுயேச்சைகள் பயப்படற காலம் போய் இப்ப சுயேச்சை வேட்பாளர்களைப் பார்த்து சுயேச்சைகள் பயப்படறாங்க”

”தேர்தல் வரைக்கும் தான் அரசியல்வாதிகள் மத்தவங்களைப் பாத்து பயப்படுவாங்க. அப்புறம் அவங்களைப் பாத்து மத்தவங்க பயப்படுவாங்க” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...