No menu items!

குஜராத்தில் தொங்குபாலம் உடைந்து 142 பேர் பலி

குஜராத்தில் தொங்குபாலம் உடைந்து 142 பேர் பலி

குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி நகரில் தொங்குபாலம் உடைந்த விபத்தில் இதுவரை 142 பேர் பலியாகியுள்ளனர்.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்குபாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. கடந்த 6 மாதங்களாக இந்தப் பாலத்தை சீரமைக்கும் பணிகள் நடந்துவந்தன. இப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 26-ம் தேதி மக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது.

விடுமுறை நாளான நேற்று மாலையில் அந்த பாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அப்போது அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தனர். தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் மீட்பு பணிகளில் இறங்கினர்.

இன்று காலை நிலவரப்படி, இந்த பாலத்தில் இருந்து ஆற்று நீரில் விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142-ஆக இருந்தது. 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை தேடுதல் மற்றும் மீட்கும் பணியில், ராணுவம், கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.எப், தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் உள் பகுதிகள், கேரளா, தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதிகள், தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கு வடகிழக்குப் பருவ மழை பரவியுள்ளது. பருவக் காற்றின் தாக்கத்தால் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்இலங்கை கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் அக்டோபர் 31 (இன்று), நவ. 1, 2, 3-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினேஷ் கார்த்திக் காயத்தால் அவதி

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பெர்த் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து இந்தியா ஆடியது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்துகொண்டு இருந்தபோது 15-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் முதுகுவலியால் அவதிப்பட்டார்.

பிசியோ உடனடியாக வந்து அவரை பரிசோதித்தார். முடிவில் மைதானத்தில் இருந்து தினேஷ் கார்த்திக் வெளியேறினார். அவரது காயத்தின் சரியான தன்மை குறித்து சொல்லப்படவில்லை. பின்னர் அவர் காயமடைந்திருப்பதை வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் உறுதிப்படுத்தினார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் அடுத்ததாக புதன்கிழமை நடக்கும் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து இந்தியா ஆடவுள்ளது. போட்டிக்கு 3 நாட்களே இருப்பதால், அதற்குள் குணமடைந்து இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் ஆடுவது சந்தேகமாக உள்ளது. அவர் ஆடாத பட்சத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் 2,106 தெருக்களில் நாளை முதல் தூர்வாரும் பணி

வடகிழக்கு பருவமழை தீவிடமடைந்துள்ளதை தொடர்ந்து சென்னையில் 2,106 தெருக்களில் நாளை முதல் தூர்வாரும் பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

வடகிழக்கு பருவமழையையொட்டி பகுதி 1 முதல் 15 வரை உள்ள தெருக்களில் கழிவு நீர் செல்லும் குழாய்கள் மற்றும் எந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நாளை 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. 2,106 தெருக்களில் 282 தூர்வாரும் எந்திரங்கள், 162 ஜெட்ராடிங் எந்திரங்கள் மற்றும் 57 கழிவுநீர் உறிஞ்சும் எந்திரங்கள் என மொத்தம் 501 கழிவுநீர் எந்திரங்கள் மூலம் பெருமளவில் கழிவு நீர் செல்லும் குழாய்கள் மற்றும் எந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரப்படுகிறது.

எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் அடைப்பு, வழிந்தோடுதல் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகத்திலும் பணிமனை அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...