No menu items!

12 மணி நேர வேலை – சறுக்கியதா திமுக அரசு?

12 மணி நேர வேலை – சறுக்கியதா திமுக அரசு?

கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி 12 மணி நேர வேலைத் திட்டத்தை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறது திமுக அரசு. எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்த விஷயத்தை இப்போது தொழில் வளத்துக்கு நல்லது என்று கூறி சட்டப் பேரவையில் மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது. காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக போன்ற திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இந்த முறையை கடுமையாக எதிர்த்திருக்கின்றன.

தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசும்போது ” தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் நம்முடையை வேலை நேரத்தில் ஒரு நெகிழ்வுத்தன்மை (flexibility) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். வாரத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த வேலை மணி நேரங்கள் என்பது மாறாது. இந்த மசோதாவின்படி வேலை செய்பவர்கள், 4 நாட்கள் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அந்நாட்களில் வேறு பணிகளையும் அவர்கள் பார்க்கலாம்.

இன்றைய சூழலில் மாறியிருக்கின்ற Working Condition-ல், இந்த நெகிழ்வுத்தன்மை அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த மசோதா எந்த தொழிற்சாலைகளுக்குப் பொருந்தும் என்பது குறித்த கொள்கைகள் அரசால் வகுக்கப்பட்டு அதன் மூலம் தெரிவிக்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வாய்ப்பை தன்னார்வமாக யார் விரும்புகிறார்களோ, அதை தேர்வு செய்யும் உரிமை வழங்கப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களை மாற்றுவதாக இது அமையாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ” இது தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டத் திருத்தம் அல்ல. எந்தவொரு தொழிலாளர்களின் விருப்பத்திற்கு மாறான, எதிர்ப்பான சட்டத் திருத்தம் அல்ல. வாரத்துக்கு 48 மணி நேரம் பணி என்பது மட்டுமே நீடிக்கும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. விரும்புகிற நிறுவனங்களுக்கு அரசு பரசீலித்துதான் முடிவெடுக்குமே தவிர, அனைத்து நிறுவனங்களுக்கும் இது நடைமுறைப்படுத்தப்படமாட்டாது” என்று கூறினார்.

ஆனால் அமைச்சர்களின் கருத்துக்களை ஏற்க மறுக்கின்றனர் கூட்டணிக் கட்சியினரும் தொழிற்சங்கத்தினரும்.

‘உலகத் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை உரிமைப் போராட்டத்தை தொடங்கிய மே நாள் நெருங்கிய நேரத்தில், அவர்களது உரிமை மறுக்கப்படுவதும், அதுவும் தொழிலாளர்களின் உணர்வை போற்றிப் பாராட்டி, மே தின நினைவு சின்னம் அமைத்த தலைவர் கருணாநிதி வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டில் மே தினம் கொண்டாடிய வரலாற்று நிகழ்வின் நூற்றாண்டு அரசே கொண்டாட வேண்டிய நேரத்தில், அன்னிய நாட்டு முதலீட்டை காரணம் காட்டி தொழிலாளர் வேலை நேரத்தை அதிகரிப்பது எந்த வகையிலும் ஏற்கதக்கதல்ல.’ என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்.

“வருவாய் என்பதைவிட மனித உழைப்பு, மனித நேயம், நலம், குடும்ப நலன் என்பவை முக்கியமாகக் கருத்தூன்றி கவனிக்கப்படவேண்டாமா? விரும்பியோர் 12 மணிநேரம் உழைக்கலாம் என்று கூறுவது, ஒருவகை உழைப்புச் சுரண்டலே” என்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி.

எதிர்க் கட்சிகளின் கண்டனங்களுக்கு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பதிலளித்திருக்கிறார். அவர் சட்டப் பேரவையில் பேசும்போது. ‘இது குழப்பமான விஷயம்தான். தொழிற்சங்கங்கள் உரிமை போய்விடும் என்று பயப்படுகின்றன. தோழமை கட்சிகள் எங்களோடு எல்லாவற்றிலும் இருப்பவர்கள். இந்த சட்டத்தின் மூலம் நாளை பிரச்சினை வந்தால், தொழிலாளர்களின் பிறப்புரிமையான 8 மணிநேர வேலை என்பதில் கைவைக்க மாட்டோம். அதுதான் திமுகவின் அடிப்படை கொள்கை. இதில் பிரச்சினை என முதல்வரின் கவனத்துக்கு வந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் எங்களை நம்புங்கள்’ என்று கூறியிருக்கிறார்.

இந்த 12 மணி நேர சட்டத்தை வரவேற்றிருப்பது தொழில் துறையினர்.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் விக்னேஷ் ‘‘தொழிலாளர்களுக்கு 12 மணி நேர பணி என்ற நடைமுறை சீனா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் இதுபோன்ற சட்டத்தை அமல்படுத்துவது, தொழில் வளர்ச்சிக்கு உதவும். கட்டாயமாக்காமல், விருப்பத்தின் பேரில் இந்த சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது,’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி நிறைய எதிர்ப்புகளுடனும் சில ஆதரவுகளுடனும் நிறைவேற்றப்பட்டிருக்கும் 12 மணி நேர வேலை சட்டத்தின் பின்னணியைப் பார்ப்போம்

மத்திய அரசின் 1948ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலைகள் சட்டத்தை அடிப்படையாக வைத்தே வேலை நேர மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது, 1948ஆம் ஆண்டு சட்டத்தின் 65வது விதிக்குக் கீழே புதிய விதி ஒன்றைச் சேர்க்கிறது. இந்த விதி 65 – ஏ என்று அழைக்கப்படும். இதில்தான் 12 மணி நேர வேலை குறித்து கூறப்படுகிறது.

1948 சட்டத்தின் பிரிவுகள்51லிருந்து 59 வரை தொழிலாளர்களின் வேலை நேரங்கள், விடுமுறைகளை வரையறுக்கிறது. இந்த பிரிவுகளிலிருந்து தொழிற்சாலைகளுக்கு விலக்களிக்க மாநிலஅரசு கொண்டு வந்திருக்கும் 65ஏ சட்டத் திருத்தம் உதவுகிறது.

வாரத்தில் மொத்த வேலை நேரம் 48 மணி நேரம்தானே அதை நான்கு நாட்களுக்குப் பிரித்திருக்கிறார்கள். மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாமே என்ற ஆர்வக் கேள்விகள் வரலாம். தொழிலாளர்கள் விருப்பப்பட்டால்தானே இந்தப் பிரிவும்….இப்படியிருக்கையில் எதற்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள் என்ற சந்தேகங்கள் வரலாம்.

இப்படி மேலோட்டமாக பார்த்தால் இந்தத் திருத்தத்தில் பெரிய ஆபத்துக்கள் இல்லாதது போல்தான் தெரியும்.

ஆனால் ஆபத்துக்கள் மறைந்திருக்கின்றன.

தொழிலாளர்கள் ஒப்புக் கொண்டால்தான் 12 மணி நேர வேலை, இல்லாவிடில் பழைய முறையில் 8 மணி நேர வேலைதான் என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆரம்பத்தில் இப்படி இருக்கலாம். ஆனால் எங்கள் நிறுவனத்தில் 12 மணி நேர வேலை முறைதான்… ஏற்றுக் கொண்டால் வேலைக்கு வாருங்கள் என்று நிறுவனங்கள் கூற ஆரம்பித்தால் அதிலிருந்து தப்பிக்கும் வழி தொழிலாளர்களுக்கு இருக்காது.

வாரத்தில் 4 நாட்கள் வேலை என்பது குதிரைக்கு முன்னால் காட்டப்படும் கேரட்தான். மீது 3 நாட்கள் சும்மா இருக்க வேண்டுமா? உழைத்தால் ஊதியம் கிடைக்குமே என்ற எண்ணத்தை நிறுவனங்கள் ஏற்படுத்தும். தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்யும் சூழல் உருவாக்கப்படும்.

இது போன்ற விதிகள் இருந்தால்தான் அந்நிய முதலீடு வரும் தொழிற்சாலைகள் தொடங்கப்படும் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. உண்மை. இன்று சீனாவிலிருந்து பல தொழில் நிறுவனங்கள் வெளியேறுகின்றன. அவற்றுக்கு குறைந்த ஊதியம் அதிக வேலை நேரம் என்ற ஆதாயம் சீனாவில் கிடைத்ததுபோல் இந்தியாவில் கிடைக்குமென்றால் அந்த நிறுவனங்கள் இங்கு நிச்சயம் வரும். அப்படி வரும் நிறுவனங்கள் எந்த மாநிலத்தில் தொழில் தொடங்கும் என்ற போட்டி மாநிலங்களுக்கிடையே இருக்கிறது.

இப்போது கர்நாடாகவில் 12 மணி நேர வேலை முறை கொண்டு வரப்பட்டுவிட்டது. அங்கு வெளிநாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகளை நிறுவ முற்படலாம். அதை தடுக்க வேண்டுமென்றால் 12 மணி நேர வேலை முறை தமிழ்நாட்டிலும் இருக்க வேண்டும்.

வேலை வாய்ப்புகள் முக்கியம்தான். ஆனால் அதற்கு நாம் கொடுக்க வேண்டிய விலையை குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

வேலை வாய்ப்புகள் என்ற பெயரில் நவீன கொத்தடிமைகளை உருவாக்குவது சரியா என்பதை அரசு சிந்தக்க வேண்டும். ஏற்கனவே இங்கு தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் பல மணி நேரங்கள் கூடுதலாய் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது போன்ற நிலை எல்லா தொழிற்சாலைகளிலும் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

12 மணி நேர வேலையில் குடும்பத்தை கவனிக்க, தன் சொந்த விருப்பங்களை பார்த்துக் கொள்ள நேரமிருக்காது. இது பல மனநலப் பிரச்சினைகளில் கொண்டு போய்விடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
திமுக அரசின் இந்த நிலைமாற்றம் அதன் அரசியல் குறித்தும் கேள்விகள் எழுப்பியிருக்கிறது.

இந்த வேலை நேர மாற்றத்தை பாஜக ஆட்சியிலிருக்கும் மாநிலங்கள்தான் நிறைவேற்றியிருக்கின்றன. இந்த சட்டத்தை நிறைவேற்றிய பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலம் தமிழ்நாடுதான் என்கிறார் திருமாவளவன்.

பாஜகவின் திட்டங்களையும் கொள்கைகளையும் கடுமையாக எதிர்க்கும் பிம்பத்தில் இருக்கும் திமுக அரசுக்கு இந்த 12 மணி நேர வேலை ஒரு சறுக்கல்தான்.

மே 1 தொழிலாளர் தினம். அதற்குள் இந்த 12 மணி நேர வேலை திட்டம் திரும்பப் பெறப்படும் என்று சிலர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

நடக்குமா? தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் சார்ந்து செயல்படுமா?

பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...