No menu items!

Netflixக்கு பாடம் புகட்டிய இந்தியா

Netflixக்கு பாடம் புகட்டிய இந்தியா

முடிந்தால் ஒரு வெள்ளைத்தாளையும், ஒரு பேனாவையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

அதெல்லாம் முடியாது என்றால், உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் கால்குலேட்டரை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இப்போது ஒரு சின்ன கணக்கு போடுவோம்.

ஒரு அட்டகாசமான கிராமம். பொதுவாக கிராமத்தில் 100 குடும்பங்கள் வசிக்கலாம்., சில கிராமங்களில் 300 குடும்பங்கள் வசிக்கலாம். ஆனால் நாம் சொல்லப்போகிற கிராமம் என்பது பெயருக்குதான் அது ஒரு கிராமமே தவிர, அங்கு மட்டும் 3000 குடும்பங்கள் வசிக்கின்றன என்று வைத்து கொள்வோம்.

இந்த கிராமத்தில் இருப்பவர்கள் வேலை வெட்டியை உருப்படியாக பார்க்கிறார்களோ இல்லையோ ஆனால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பொழுதுபோக்கு சமாச்சாரங்களுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பார்கள். நடிகைகள், நடிகர்கள் என்றால் அவர்களுக்கு ஒரு சாதாரண மனிதனுக்கு வருகிற இயற்கை உபாதைகள் கூட இருக்காது. அவர்கள் அப்படியே தேவலோகத்தில் இருந்து வந்தவர்கள் என்று நம்பும் அளவிற்கு இருக்கும் கலா ரசிகர்களாக இருப்பவர்கள்.

இப்படியொரு கிராமத்திற்கு, வெளிநாட்டிலிருந்து ஒரு நாடகக்குழு வருகிறது. ஃபாரின் ட்ராமா டீம் என்பதால் இவர்களின் நாடகம் பார்க்க வாங்கும் கட்டணம் உள்ளூர் நாடகக்குழு வாங்கும் கட்டணத்தைவிட பல மடங்கு அதிகம்.

த்ரில்லர், ஹாரர், கிளாமர், ஆக்‌ஷன், ரோம்-காம் என வகை சரக்குகளை இறங்கி விட்டாலும் அந்த நாடக கம்பெனிக்கு எதிர்பார்த்த மாதிரி பெரிய வருமானம் எதுவும் இல்லை.
அதாவது ஒரு டிக்கெட் விலை, 100 ரூபாய் என்று வைத்து கொள்ளுங்கள். அந்தளவிற்கு பணம் கொடுத்து வாங்க அந்த கிராமத்தில் 100 பேர்தான் இருந்தார்கள்.

அப்படியென்றால் 100 100 = 10,000 ரூபாய்தான் வருமானம் வந்தது.

இதனால் நாடக கம்பெனி, வடிவேலு அடித்த கமெண்ட்டை போல, எவ்வளவு அடி வாங்கினாலும் வலிக்காத மாதிரியே அதே பில்டப்புடன் இருந்தது.

ஆனால் எவ்வளவுதான் சமாளிப்பது?

நாடக கம்பெனியில் ஒரு புத்திசாலி இருந்தான். இந்த ஊரில் 100 ரூபாய் கேட்டால், நாடகக் குழுவோடு அப்படியே கிளம்ப வேண்டியதுதான். அதனால் 100 ரூபாய்க்கு பதிலாக 50 ரூபாய் கேட்போம். அந்தளவு பணம் கொடுத்து, வேடிக்கைப் பார்க்க குறைந்தபட்சம் 1,000 பேராவது வருவார்கள் என்றான்

கணக்குப் போட்டு பார்த்தது கம்பெனி.

1,000 50 = 50,000 ரூபாய் வந்தது.

அட பரவாயில்லையே என்று பட்டென்று டிக்கெட் விலையைக் குறைத்தார்கள். 100 பேரிலிருந்து 1000 பேராக மாறியது ரசிகர்களின் எண்ணிக்கை.

அதாவது நாம் போட்டி களத்தில் இருக்கும் போது, நமக்கு எது பொருத்தமாக இருக்கும், எதற்கு வரவேற்பு இருக்கும் என்பதை தெரிந்து கொண்டால் போதும். மார்க்கெட்டையும், டார்கெட்டையும் பிடித்துவிடலாம்.

இப்படி கூட்டி கழித்துப் பார்த்து ஒரு பக்காவான யுக்தியைதான் நெட்ஃப்ளிக்ஸ் இப்போது கையிலெடுத்து இருக்கிறது.

2016-ல் நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவுக்குள் நுழைந்தது.

நெட்ஃப்ளிக்ஸ் அமெரிக்காவைப் போல இந்தியாவையும் வளைத்துப் போடலாம் என களமிறங்கிய போது, அதன் சந்தா தொகை மற்ற ஒடிடி தளங்களுடன் ஒப்பிடும் போது 10 மடங்கு அதிகமாக இருந்தது. மற்ற ஒடிடிகள் வருடாந்திர சந்தா வாங்கிய நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் மாதாந்திர சந்தா வசூலித்தது.

ஒரு வருடத்திற்கு லயன்ஸ்கேட் 699 ரூபாயும், அமேசான் ப்ரைம் வீடியோ 999 ரூபாயும், டிஸ்னி ஹாட்ஸ்டார் பளஸ் 399 ரூபாயும் சந்தாவாக கேட்ட போது, நெட்ஃப்ளிக்ஸ் மாதத்திற்கு 499 ரூபாயும், அதன் ப்ரீமியம் சர்வீஸூக்கு 799 ரூபாயும் சந்தாவாக வாங்கியது.

அதுமட்டுமில்லாமல் அதன் நிகழ்ச்சிகள், அப்போது நெட்ஃப்ளிக்ஸ் நிகழ்ச்சிகளிலும், வெப் சீரிஸ்களிலும், ஒரிஜினல்களிலும் அமெரிக்க வாடையே தூக்கலாக இருந்தது.

இதனால், நெட்ஃப்ளிக்ஸினால் இந்திய ஒடிடி களத்தில் பெரிதாக ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மார்க்கெட்டான இந்தியாவை, டிஸ்னி ஹாட்ஸ்டார் ப்ளஸ், ஐபிஎல் ஒளிப்பரப்பு உரிமையை வைத்து கொண்டும், ஸ்டார் டிவியின் நிகழ்ச்சிகளையும் வைத்தும் பெரிய எண்ணிகையில் சந்தாதாரர்களை வளைத்து போட்டிருந்தது.

மறுபக்கம் அமேசான் ப்ரைம் வீடியோ, தனது அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்பை காட்டி இ-காமர்ஸ் ப்ரியர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. 10 பிராந்திய மொழிகளில் நிகழ்ச்சிகளைக் கொடுத்தது. இந்திய மொழிகளில் ப்ளாக்பஸ்டர்களாக கொண்டாடப்பட்ட படங்களில் 40 சதவீத படங்களின் ஒடிடி உரிமை அமேசான் வசம் இருந்தது. இதனால் அமேசான் ப்ரைம் வீடியோவும் பலம் காட்டியது.

இந்த இரண்டும் இந்தியர்களூக்கான உள்ளூர் சமாச்சாரங்களை தங்களது கேட்லாக்கில் அதிகம் சேர்க்க ஆரம்பித்தன.

ஆனால் நெட்ஃப்ளிக்ஸின் ரீட் ஹேஸ்டிங்ஸ், இந்தியாவில் தங்களது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்வதாலும், மிக மலிவான கட்டணத்தில் இண்டர்நெட் கிடைப்பதாலும் நெட்ஃப்ளிக்ஸ் பெரும் வரவேற்பைப் பெறும் என்றும் 2018-ல் சொன்னார். இன்னும் 100 மில்லியன் சந்தாதாரர்கள் இந்தியாவிலிருந்து கிடைப்பார்கள் என்றும் வெளிப்படையாக சொன்னார்.

ஆனால் எதுவும் நடக்கவில்லை.

அடுத்த வருடமே ரீட் ஹேஸ்டிங்ஸ் ரொம்பவே நொந்து போனார். ‘முக்கியமான ஒவ்வொரு சந்தையிலும் நெட்ஃப்ளிக்ஸ் கொடிக்கட்டி பறக்கிறோம், ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் ஜெயிக்க முடியவில்லை என்று நினைத்தாலே அது எங்களை அப்செட்டாக்குகிறது. நிச்சயம் இந்தியாவிடம் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டும்’ என்றார் அதே ரீட் ஹேஸ்டிங்ஸ்
.
ஏறக்குறைய 5 மில்லியனுக்கும் அதிகமான, கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்களை வைத்திருக்கும், உலகின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனம், இந்தியாவில் பாய்ச்சல் காட்டமுடியாமல் நொண்டியடித்தது. அதன் போட்டியாளர்களான ஹாட்ஸ்டார் 45 மில்லியனுக்கும் மேலும், அமேசான் 19 மில்லியனுக்கும் மேலும் சந்தாதாரர்களைப் பெற்றிருந்தன.

2018-ல் Sacred Games என்ற வெப்சிரீஸை களமிறக்கியது நெட்ஃப்ளிக்ஸ். இதன் வெற்றிதான் நெட்ஃப்ளிக்ஸூக்கு இந்தியாவை முதல் முறையாக புரிய வைத்தது. ’உள்ளூருக்கு உகந்த விஷயத்தை கொடுங்கப்பா’ என்று இந்திய ரசிகர்கள் சொன்னது நெட்ஃப்ளிக்ஸூக்கு உறைத்தது.

அடுத்து, 200 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளில் சொந்தமாக டிவியும், கட்டணம் கட்டிப் பார்க்கும் டிவி சேனல்களும் வெறும் 300 ரூபாய்க்குள் கிடைத்தன. ஒட்டுமொத்த குடும்பமும் ரசிக்கும் வகையில், சினிமா, விளையாட்டும் செய்திகள், என அனைத்து நிகழ்ச்சிகளும் பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம் அளித்தன.

அப்படியானால் என்ன செய்வது என்று யோசித்த நெட்ஃப்ளிஸ் தனது கட்டணத்தை குறைக்க திட்டமிட்டது.
கட்டணத்தை குறைக்கும் போது, இன்னும் அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்களைப் பெறமுடியும். அப்படியானால்தான் மிகப்பெரும் இந்திய ஒடிடி சந்தையில் ஊடுருவ முடியும் என்பது கொஞ்சம் தாமதாமாகதான் நெட்ஃப்ளிக்ஸூக்கு. புரிந்தது.

அடுத்து அமெரிக்கர்கள், யூரோப்பியர்களிடம் நெட்ஃப்ளிக்ஸ் காட்டிய ஹைடெஃபனிஷன் தரமெல்லாம் இங்கு இந்தியர்களிடம் எடுப்படவில்லை இங்கு நம்மூரில் டீ ப்ரேக்கில், பெட்டி கடைக்கு செல்கையில், டாய்லெட் போகையில், பேருந்திலும் ஷேர் ஆட்டோவில் உட்கார்ந்திருகையிலும், படுக்கும் போகும் போது கூட இந்தியர்கள் கையில் இருப்பது ஸ்மார்ட்ஃபோன். அதில்தான் ஸ்ட்ரிமீங் தளங்களைப் பார்க்கிறார்கள் என்பதை ஒரு வழியாக புரிந்து கொண்ட நெட்ஃப்ளிக்ஸ்

இதையடுத்து 2019-ல் மொபைல் போனில் மட்டும் தனது நிகழ்ச்சிகளையும், படங்களையும், ஒரிஜினல்களையும் பார்க்கும் வகையில் மொபைல் ஒன்லி சப்ஸ்க்ரிப்ஷன் முறையில் கட்டணக்குறைப்பை அறிமுகப்படுத்தியது. 199 ரூபாய் கட்டணத்தில் மொபைல் போனில் பார்க்கும் வசதியை இந்தியர்கள் முன் வைத்தது.

இதற்கு ஓரளவிற்கு வரவேற்பு கிடைத்தது எனலாம்.

2021- டிசம்பரில் தனது அனைத்து ப்ளான்களின் கட்டணத்தையும் குறைத்த நெட்ஃப்ளிக்ஸ். இப்பொது இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ் மிக குறைவான கட்டணம் 149 ரூபாய் மட்டுமே.

நெட்ஃப்ளிக்ஸின் இந்த அதிரடி கட்டணக்குறைப்பால், சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் 30 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அதேபோல் அதன் வருவாயும் 24 சதவீதம் அதிகமாகியிருக்கிறது.

இதையடுத்து நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவில் கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையில், தனது ஸ்ட்டீரிங் செயல்பாடுகள் இருக்கும் உலகின் இதர 116 நாடுகளிலும் தனது கட்டணக் குறைப்பை அறிவித்திருக்கிறது. 2023 ஜனவரி – மார்ச் வரையிலான இந்த காலாண்டில் இந்த கட்டணக்குறைப்பு அமலுக்கு வருவதாகவும் நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்து இருக்கிறது.

மேற்குறிப்பிட்ட சந்தையானது, 2022-ல் நெட்ஃப்ளிக்ஸின் ஒட்டுமொத்த வருவாயில் 5 சதவீதத்திற்கும் குறைவான வருவாயை கொடுக்கும் சந்தையாகவே இருந்து வருகிறது.

இந்த முயற்சி நாட்கள் போக போக வருவாயை அதிகரிக்கும் ஒரு யுக்தியாக இருக்கும் என தனது பங்குதாரர்களிடம் நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்திருக்கிறது..

இப்பொழுது நெட்ஃப்ளிக்ஸ் 2023-ம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 1.75 மில்லியன் சாந்தாதாரர்களைப் பெற்றிருக்கிறது.

இந்திய ஸ்ட்டீரிங் மார்கெட், 2026-ம் ஆண்டில் இருமடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நெட்ஃப்ளிக்ஸின் இந்த கட்டணக்குறைப்பு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் சரியான முடிவு என்று கூறப்படுகிறது.

எவ்வளவு பெரிய கில்லாடியாக இருந்தாலும், எங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் இருக்கவே செய்கின்றன என்பதை நெட்ஃப்ளிக்ஸ் விஷயத்திலும் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள் பெருமைக்குரிய இந்தியர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...