பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை்் பற்றி விவாதிக்க வரும் 12-ம் தேதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கான வழிவகை செய்யும் அரசியல் சட்டத் திருத்தம், கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் 7-11-2022 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த இடஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமைகிறது. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விவாதித்து முடிவு எடுப்பதற்கு ஏதுவாக, வருகின்ற 12-11-2022 (சனிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
அத்வானி பிறந்தநாள்: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அத்வானியின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியில் நீண்ட காலம் தலைவராக இருந்தவருமான அத்வானி இன்று (செவ்வாய்க்கிழமை) தனது 95வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மூத்த தலைவரின் வீட்டிற்கே நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் பாஜகவின் பல்வேறு தலைவர்கள் அத்வானிக்கு சமூக வலைதளங்களில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நோயை எதிர்த்து போராடுவேன் – சமந்தா
நடிகை சமந்தா சமீபத்தில் தான் மயோசிடிஸ் (Myositis) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார். தான் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாகவும், விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் அந்த பதிவில் சமந்தா ரூத் பிரபு குறிப்பிட்டிருந்தார்.
அவர் நடித்துள்ள ‘யசோதா’ படம் 11-ம் தேதி வெளிவரவுள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், “இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில தினங்கள் நல்ல நாட்களாகவும் சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கின்றன. எனது உடல்நிலை உயிருக்கே ஆபத்தாக உள்ளது என செய்திகள் பரவி வருகிறது. இந்த கணம் வரையிலும் நான் சாகாமல் தான் இருக்கிறேன். மிகவும் கஷ்டமான நிலையில் தான் இருக்கிறேன், ஆனாலும் எதிர்த்துப் போராடுவேன். பல விஷயங்களை கடந்து இவ்வளவும் தூரம் வந்தவள் நான்” என்று கூறியுள்ளார்.
தமிழக தொழில்துறை உலகளவில் கவனம் பெற்று வருகிறது – முதல்வர் ஸ்டாலின்
சென்னை தரமணி டைடல் பார்க்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் “நாளையை நோக்கி இன்றே தலை நிமிர்ந்த தமிழ்நாடு” எனும் தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “நாளை வரப்போகும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, நமது இளைஞர்களின் திறன்களை வளர்த்து, முன்னேற்றுவதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான், இந்த திறன்மிகு மையங்கள் இங்கே அமைக்கப்பட்டு உள்ளன. இந்தத் திறன்மிகு மையங்களில், தொழிலாளர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும், மெய்நிகர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திறன்மிகு மையம், “நான் முதல்வன்” திட்டத்தின் குறிக்கோள்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் ஒருங்கிணைந்து செயல்படும். இந்த மையங்களில் இருந்து மேம்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் மூலமாகவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனங்கள் மூலமாகவும், நமது மாநிலத்திற்கு அதிக காப்புரிமைகள் கிடைக்கும். தமிழக தொழில்துறை உலக அளவில் கவனம் பெற்று வருகிறது” என்றார்.
சந்திர கிரகணத்தையொட்டி கோவில்கள் நடை அடைப்பு
சந்திர கிரகணத்தையொட்டி தமிழகத்தில் பல கோவில்களின் நடை அடைக்கப்பட்டு இரவு 7.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (8- ந்தேதி) பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி 5.12 மணி வரை இருக்கும். பின்னா் பகுதி அளவு சந்திர கிரகணம் 6.19 மணியளவில் முடிவடைகிறது. சந்திர கிரகணத்தையொட்டி பெரும்பாலான கோவில்களில் நடை அடைக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சந்திர கிரகணத்தையொட்டி, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பல கோவில்கள் நடை சாத்தப்பட்டது. பரிகார பூஜைகள் நடைபெற்ற பின் இரவு 7 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பொதுமக்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.