No menu items!

தடாலடி தமிழிசை – காரணம் என்ன? – மிஸ் ரகசியா!

தடாலடி தமிழிசை – காரணம் என்ன? – மிஸ் ரகசியா!

கையில் முரசொலியுடன் அலுவலகத்துக்குள் வந்தாள் ரகசியா.

“என்ன ஆச்சு, முரசொலியோட வர்ற…வழக்கமா கட்சி பத்திரிகையையெல்லாம் பப்ளிக்கா எடுத்துட்டு வர மாட்டியே”

“ஆமாம். திமுகவுக்கும் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் மோதல் அதிகமாகிட்டே வருது, தினமும் தமிழிசையை விமர்சித்து கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்…. இன்னைக்கு பாருங்க ‘பொய்மான் ஆக வேண்டாம் தமிழ்வசை’னு கட்டுரை எழுதியிருக்காங்க”

“தமிழிசையை திமுககாரங்க ரொம்ப மதிப்பாங்களே….குமரி அனந்தன் பொண்ணுங்கறதுனால கடுமையான விமர்சனங்கள் வைக்க மாட்டாங்களே.. இப்ப என்ன திடீர்னு?”

“ தமிழிசைக்கு நேரடி அரசியலுக்கு வரணும்னு ஆசை. அதுவும் தமிழ்நாட்டு அரசியல்ல இருக்கணும்னு நினைக்கிறாங்க. 2024 நாடாளுமன்றத் தேர்தல்ல திமுகவின் முக்கிய தலைவரை எதிர்த்து தமிழிசை போட்டியிடப் போகிறார்னும் ஒரு நியூஸ் இருக்கு. டெல்லி மேலிடமும் அதுக்கு சம்மதம் தெரிவிச்சுருக்கிறதா சொல்றாங்க. அதுக்கான ட்ரெய்லர்தான் இந்த மோதல்னு சொல்றாங்க. இன்னொரு செய்தியையும் சொல்றேன் கேட்டுக்குங்க. அது சீக்கிரம் நடக்கப்போகுது”

“என்ன செய்தி..?”

“புதுவைல ஆட்சி கவிழப்போகிறது. அங்கே கவர்னர் ஆட்சி வரப் போகிறது. தமிழ்நாட்டு தேர்தல்களுக்கு அங்கிருந்துதான் திட்டங்கள் தீட்டப்படும், நடத்தப்படும் என்று தெரிகிறது. அதனால்தான் தமிழிசை இப்போது தீவிரமாய் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். திமுகவும் அதை தெரிந்து வைத்திருக்கிறது.”

“தமிழக அரசியல்ல தமிழ்நாட்டு ஆளுநர்க்குதான் முக்கியத்துவம்னும் பார்த்தா புதுவை ஆளுநர்க்கு பாஜக முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி தெரியுதே..”

“கரெக்ட்…ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாட்டுக்கு ஏத்த மாதிரி அரசியல் பண்ண தெரியலனு மேலிடம் ஃபீல் பண்ணுதாம்”

“அப்போ தமிழிசை முழு மூச்சா அரசியலுக்கு வரப் போறாங்கனு சொல்ற”

“ஆமாம். இப்ப உள்ள நிலவரங்கள் அதைதான் சொல்லுது. ஆனா அண்ணாமலை என்ன செய்கிறார்கின்றதையும் பார்க்கணும்..”

”அண்ணாமலை தினசரி ஏதாவது சொல்லி லைம்லைட் தன் மேல இருக்கிற மாதிரி பாத்துக்கிறாரே”

”அண்ணாமலைக்கு பதில் சொல்ல வேண்டாம் என்று தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போயிருக்கிறது. உத்தரவை வாய்மொழியா சொன்னவர் சகல அதிகாரங்களும் பொருந்திய தமிழ் நாட்டு உச்ச விஐபி. ’காகிதப் புலி உறுமல்களைக் கண்டு பயப்படத் தேவையில்லை’ என்று அவர் அதிகாரிகள் கூட்டத்தில் சொன்னாராம். அதனால்தான் செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை குறித்த கேள்விக்கு டிஜிபி பதிலளிக்காமல் கிளம்பினார்”

“நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் பாஜக கூட்டணி அமையும்னு எடப்பாடி உறுதியா சொல்லிட்டாரே..அண்ணாமலையும் அதை உறுதிபடுத்தியிருக்கிறாரே?”

“அண்ணாமலைக்கே எல்லா பரபரப்பும் கிடைக்குது எதிர்க் கட்சியா இருக்கிற நமக்கு எந்த பப்ளிச்சிட்டியும் கிடைக்கல..பாஜக வேணும்னே நம்மளை ஒதுக்குதுனு கட்சிக்காரங்க எடப்பாடி கிட்ட புலம்பியிருக்காங்க. எடப்பாடி இது பத்தி அண்ணாமலைகிட்ட பேசியிருக்காரு. எலெக்‌ஷன் வர நேரத்துல அதிமுகவை பகைச்சுக்கிட்டு தேர்தலை சந்திக்க முடியாதுனு அண்ணாமலைக்கு தெரியும். அதனால அதிமுக தலைமையில்தான் கூட்டணிங்கிறதை உறுதிப்படுத்தியிருக்காரு. எடப்பாடியும் அதை சொல்லியிருக்கார். இதுல அதிமுகவினருக்கு சந்தோஷம்”

“பாஜக இறங்கி வர்ற மாதிரி தெரியுதே…”

“அதிமுகவுக்காக பாஜக பல திட்டங்கள் வைத்திருக்கு. அதுல முக்கியமான ஒண்ணு, ஓபிஎஸ்ஸை மீண்டும் இணைக்கிறது”

“இவ்வளவு நடந்தப் பிறகு அது சாத்தியமா?”

“கண்கள் பனித்ததுனு சொல்லிட வேண்டியதுதானே. ஒன்றுபட்ட அதிமுகதான் பாஜகவின் விருப்பம். இணைந்து செயல்பட ஓபிஎஸ் தயார். ஆனால் எடப்பாடி தரப்பு பிடிவாதம் பிடிக்கிறது. ஒருங்கிணைப்பாளர் என்றெல்லாம் தர முடியாது..பொருளாளர் பதவி வேண்டுமானால் கொடுக்கலாம் என்று டீல் பேசியிருக்கிறார்கள். அதற்கு ஓபிஎஸ் ஒப்புக் கொள்ள வேண்டிய சூழல் வரலாம். ஓபிஎஸ் மட்டுமில்லாமல் தினகரனும் பாஜக கூட்டணிக்கு வர தயாராய் இருக்கிறார்.”

”அவருக்கும் பாஜக வலை வீசுதா?”

“பாஜக வலை வீசலை. தினகரன் பாஜகவுக்கு தூது விட்டுக் கொண்டிருக்கிறார். ஆளுநர் விஷயத்துல கருத்துச் சொன்ன தினகரன், திமுகவிற்கு இப்படி ஒரு மூக்கணாங் கயிறு தேவைதான்ன்னு பேசினதுதான் இதுக்கு காரணம். அவரோட இந்த பேச்சு பாஜக தலைவர்களுக்கு பிடிச்சுப் போயிருக்கு. தினகரினின் இந்த நிலைப்பாடு நாடாளுமன்ற தேர்தல்ல அவருக்கு கைகொடுக்கலாம்.”

“எடப்பாடி, ஓபிஎஸ், தினகரன் எல்லோரும் சேர்ந்து அதிமுக அணில இருந்தா பலமா இருக்குமே..”

“ஆமாம், அதுக்குதான் பாஜக கணக்குப் போடுது. ஆனா தலைவர்கள் இணைந்தாலும் தொண்டர்கள் இணைவார்களா..மக்கள் நம்புவார்களா என்ற கேள்விகள் இருக்கிறது. எடப்பாடிக்கு கொட நாடு வழக்கு வேறு தொல்லை கொடுத்துக்கிட்டு இருக்கு”

”என்னாச்சு?”

”கொடநாடு வழக்கை கூர்தீட்டிட்டு இருக்காங்க. கொடநாடு வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி ஐஜி தேன்மொழி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த அவரிடம் இந்த வழக்கை ஒப்படைக்கும்போது குற்றப்பத்திரிக்கையில் எடப்பாடி பெயரை எப்படியாவது சேர்க்க வேண்டும் என்று ஆளும் தரப்பு பிரஷர் கொடுத்திருக்காம். இதுக்கு தோதா ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு சில விஷயங்களை ஆளும் தரப்பில் சொல்லி இருக்கு. அதனால எடப்பாடிக்கு சிபிசிஐடி எந்த நேரத்துலயும் சம்மன் அனுப்பலாம் காவல் துறையிலிருந்து கிடைக்கும் தகவல் சொல்லுது”

“நாடாளுமன்றத் தேர்தலில் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 8 சீட்னு ஒரு செய்தி வருதே…திமுக கூட்டணில சிக்கல் ஆரம்பிக்குதா?”

“திமுகவைப் பொறுத்தவரை மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்காதுன்னு உறுதியா நம்புறாங்க. மோடி ஏற்கெனவே 10 வருஷம் ஆட்சியில இருந்ததாலே மக்களுக்கு அவர் மேல அதிருப்தி ஏற்பட்டிருக்கும்ங்கிறது அவங்களோட கணிப்பு. அடுத்த ஆட்சி கூட்டணி ஆட்சியாத்தான் இருக்கும்னு திமுக உறுதியா நம்புது. அதனால அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்ல அதிக தொகுதிகள்ல போட்டியிடணும்னு திமுக நினைக்குது. அப்பத்தான் அடுத்த ஆட்சியில திமுகவுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்னு அவங்க நினைக்கறாங்க. அதனால திமுக 30 இடங்களில் வெற்றி பெறணும். காங்கிரஸ் கட்சிக்கு 8 சீட் கொடுத்தா போதும்னு அவங்க முடிவு செஞ்சுட்டாங்களாம். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு இடத்தைக் கொடுத்துட்டு மற்ற கூட்டணிக் கட்சிகளை உதயசூரியன் சின்னத்துல நிக்க வைக்கறது அவங்களோட திட்டமா இருக்கு.”

“இதுக்கு கூட்டணி கட்சிகள், முக்கியமா கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒத்துக்குமா?”

“பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறக் கூடாதுன்னு சொல்லி, அதுக்கு அவங்களை எப்படியாவது சம்மதிக்க வைக்கணும்கிறதுதான் அந்த கட்சியோட திட்டம்.”

“ஆளுநருக்கு எதிரா திமுக கூட்டணி கட்சிகள் ஜனாதிபதிகிட்ட மனு கொடுக்கிற திட்டம் எந்த அளவுல இருக்கு?”

“ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டு திமுக கூட்டணி கட்சிகள் மனு அனுப்பி இருக்காங்க. அநேகமா அடுத்த வாரம் அங்க ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கிடைக்கும்னு சொல்றாங்க அதேசமயம் ஆளுநருக்கு எதிரான மனு தொடர்பா டி.ஆர்.பாலு அனுப்பிய சுற்றறிக்கையில், கூட்டணி கட்சி எம்பிக்கள் அறிவாலயத்துக்கு வந்து கையெழுத்து போடணும்னு இருந்ததை கூட்டணி கட்சிகள் ரசிக்கலை. காங்கிரஸ் எம்.பி. ஒருத்தர், ‘சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து அவங்களா கையெழுத்து வாங்கிக்க மாட்டாங்களாமா? நம்மை அறிவாலயத்திற்கு வர சொல்றாங்களே’ன்னு கே.எஸ்.அழகிரிகிட்ட கேட்டிருக்கார். அதுக்கு அவர் மழுப்பலா பதில் சொல்லி இருக்கார். ப.சிதம்பரம் டி.ஆர்.பாலுவை தொடர்புகொண்டு, ‘நான் டெல்லியில் இருக்கிறேன். நீங்கள் டெல்லிக்கு மனுவை எடுத்து வரும்போது நான் கையெழுத்துப் போகிறேன்’ன்னு சொல்லி இருக்காரு.”

“ஆளுநர் – முதல்வர் மோதலால சில அமைச்சர்கள் சந்தோஷமா இருக்கறதா கேள்விப்பட்டேனே?”

“ஆமாம். ஆளுநர் மீது தளபதி கோபமாக இருக்கிறார். அதனால ராஜ்பவன் போக மாட்டார். அமைச்சரவை மாற்றம் எதுவும் இப்போதைக்கு இருக்காதுன்னு அவங்க சந்தோஷமா இருக்காங்க. ஆனா அந்த சந்தோஷம் நீடிக்குமான்னு தெரியலை. அமைச்சரவையில் மாற்றம் செய்வது பற்றி டி.ஆர்.பாலு, துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களோட முதல்வர் ஆலோசனை நடத்திட்டு வர்றாராம்.”

“இல.கணேசன் வீட்டு நிகழ்ச்சியில ஆளுநர் ரவியும், அண்ணாமலையும் கலந்துக்கலையே? ஏன்?”

“நிகழ்ச்சிக்கு மம்தா பானர்ஜி, ஸ்டாலின் இருவரையும் இல.கணேசன் அழைச்சதை இவங்க ரசிக்கவில்லை. அதுதான் புறக்கணிப்புக்கு காரணம். மயிலாடுதுறையில் கோயிலை விட்டு வெளியே வரும்போது இல.கணேசனிடம் நிருபர்கள் தமிழக ஆளுநரை திரும்ப பெற திமுக கோரியிருப்பது பற்றி கேட்டபோது ‘என்னை யாரும் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்கவில்லை. தமிழக அரசியல் பற்றி இனிமேல் தான் பார்க்க வேண்டும்’ என்று பதில் சொல்லி இருக்கிறார். இதை மனசில் வைத்துதான் அவர் இப்படி பேசி இருக்காருன்னு சொல்றாங்க.” என்று சொல்லி கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...