No menu items!

November 8 Demontezation Day: கருப்பு தினமா? கருப்பு பண ஒழிப்பு தினமா?

November 8 Demontezation Day: கருப்பு தினமா? கருப்பு பண ஒழிப்பு தினமா?

நவம்பர் 8, 2016… தன் மகளின் திருமணத்திற்காக அதுவரை ரூ.500, ரூ.1000-ங்களாக குடிகார கணவனுக்கு தெரியாமல் சேமித்து வைத்திருந்த தாய்மார்கள்; தன் குழந்தையின் சிகிச்சைக்காக 500, 1000 ரூபாய் நோட்டுக்களை கடனாக வாங்கி வைத்திருந்த பெற்றோர்கள் என இந்தியாவில் எவரும் அன்றிரவு அப்படி ஒரு அறிவிப்பை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திடீரென இரவு 8 மணியளவில் தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் மோடி, “இன்று இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது” என்ற அறிவிப்பை வெளியிட்டார். அன்று இரவு பயணத்தில் இருந்த பலர் காலையில் பேருந்து, ரயில்களை விட்டு இறங்கி, தாங்கள் கொடுத்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என வாங்க மறுத்த ஆட்டோ, டாக்ஸிகாரர்களை ஆச்சரியமாக பார்த்தார்கள். 

“நம் நாட்டில் ஒளிந்திருக்கும் கருப்புபணம், கள்ள நோட்டுகள் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை களையெடுக்கவே இந்த நடவடிக்கை. மக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்” என்றும் அறிவிப்பில் கூறினார் மோடி. ஆனால், இவ்வளவுதான் மாற்ற முடியும் என நிபந்தனைகள் இருந்தது. அறிவிப்பு வெளியான நாள் வெள்ளி. சனி, ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து திங்கட்கிழமை முதல் வங்கிகளுக்கு படையெடுக்க தொடங்கியது மக்கள் கூட்டம்.

ஒரேயொரு புதிய 2000 ரூபாய் தாளுக்காக காலை முதல் மாலை வரை வங்கிகளின் முன்னாலும், ஏடிஎம் மையங்களின் முன்னாலும் தவமிருந்தவர்களும், அதிகாலை முதலே வங்கிகளின் வாசலில் படுத்து இடம் பிடித்தவர்களும் ஏராளம். குழந்தைகளுடன் தாய்மார்கள் வந்து வங்கிகளின் முன்னால் உணவுகூட அருந்தாமல் வரிசையில் நிற்பது போன்ற ஏராளமான கொடுமைகள் அரங்கேறின. இதனால் 400க்கும் மேற்பட்டோரது உயிரும் பறிபோனது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ‘The Big Reverse’ என்னும் புத்தகம் எழுதியுள்ள மீரா சன்யால், ‘ஒராண்டில் பயங்கரவாதிகளால் சாகிறவர்களைவிட அதிகம் பேர் இந்த நடவடிக்கையில் உயிரிழந்தார்கள்’ என்று கூறியுள்ளார். மீரா சன்யால், இந்தியாவின் சிறந்த வங்கி அதிகாரிகளில் ஒருவர், ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்தின் சிஇஓவாகவும் பொருளாதார கொள்கைகளுக்கான தேசியக் கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்தவர்.

இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்த உடனேயே உலகம் முழுவதும் இருந்து பொருளாதார வல்லுநர்கள் பலரும் தங்கள் கருத்துகளை பதிவுசெய்யத் தொடங்கினர். இந்த நடவடிக்கையால் ஏற்படப்போகும் பொருளாதார வீழ்ச்சி குறித்தும் அப்போதே எச்சரித்தனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ஹெச்.எஸ்.பி.சி., “பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அடுத்த 12 மாதங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1 விழுக்காடு குறையும், இத்திட்டம் நீண்ட கால நோக்கில் பலனளிப்பது அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை சார்ந்த ஒன்று” என தெரிவித்தது.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங், “கிட்டத்தட்ட 2 விழுக்காடு வரை ஜிடிபி பாதிப்பை சந்திக்கும்” எனக் கூறினார்.

நோபல் பரிசு பெற்ற புகழ் பெற்ற பொருளாதார நிபுணர் அமிர்த்தியா சென், “பண மதிப்பிழப்பு நடவடிக்கை மாபெரும் தவறான ஒன்று. பணமில்லாத பொருளாதாரம் மற்றும் ஊழலுக்கு எதிரானது என்ற இரு நிலைகளிலும் இந்த நடவடிக்கை பலனளிக்கப் போவதில்லை என்பதுடன், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த நடவடிக்கைக்கு பின்னால் சரியான காரணம் ஏதும் இருப்பதாக தோன்றவில்லை” என்று குறிப்பிட்டார். 

இந்தியாவில் இருந்து பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்ற மற்றொருவரான அபிஜித் பானர்ஜி, ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை’ என்றார்.

உலக வங்கி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.6%இல் இருந்து 7%ஆக குறையும் என கணக்கிட்டது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிக்கும்போதே, “50 நாட்களில் நிலைமை சீரடைந்துவிடும்” என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். 2016 டிசம்பர் 30ஆம் தேதியோடு அவர் தெரிவித்த 50 நாள் நிறைவடைந்தது. எனினும் வங்கிகளின் முன்னும் ஏடிஎம் மையங்களின் முன்னும் மக்கள் கூட்டம் குறைந்ததாய் இல்லை. அந்த 50 நாட்களில் மட்டும் சுமார் 74 அறிவிக்கைகளை மாறிமாறி வெளியிட்டு மக்களை பதட்டத்துடனே வைத்திருந்தது இந்திய ரிசர்வ் வங்கி. மக்களும் காலப்போக்கில் அந்த சூழலுக்கு பழக்கப்பட்டுவிட்டனர் என்றே சொல்லலாம். 50 நாட்கள் நிறைவடைந்ததும் நிலைமை சீராகாததால் எதிர்க்கட்சிகள் பலவும் மத்திய அரசினை கேள்வியெழுப்ப தொடங்கின, வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யவும் கோரின. முறையான ஏற்பாடுகள் ஏதுமில்லாமல் அவசர கோலத்தில் கொண்டுவரப்பட்ட இத்திட்டம் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என விமர்சிக்க தொடங்கின.

எதிர்கட்சிகள், பொருளாதார நிபுணர்கள் உட்பட பலரும் திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே பல்வேறு வகையான கருத்துகளை கூறிவந்தாலும் பெரும்பாலான மக்களின் மனதில், ‘முன்னறிவிப்பு ஏதுமின்றி இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் கருப்பு பண ஒழிப்பில் நிச்சயம் இது நன்மை செய்யும்’ என்ற எண்ணமே இருந்தது. ஆனால், அடுத்தடுத்த நிகழ்வுகள் மக்களின் மனதில் இருந்த நம்பகத்தன்மையை குறைக்கத் தொடங்கின. உதாரணமாக, தமிழ்நாட்டில் அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியின் வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனை. ஒரு சாமானியன் ஒருநாள் முழுவதும் வரிசையில் நின்று வெறும் 2000 ரூபாய் மட்டுமே மாற்றமுடிந்த நிலையில், சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து சுமார் 34 கோடி ரூபாய் அளவிற்கு புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் மக்களிடம் இந்த நடவடிக்கை மீதான நம்பிக்கையை வெகுவாகக் குறைத்தன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பிரதமர் குறிப்பிட்டதுபோல் கருப்பு பணம் ஒழியவில்லை என்பது உறுதியானதும், டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்க்கவே இந்த நடவடிக்கை என ஆட்சியாளர்கள் புதிய விளக்கம் கொடுத்தார்கள். ஒருவகையில், இணையம் மூலம் வர்த்தகம் மேற்கொள்ளும் நிறுவனங்கள் தங்களின் வியாபாரத்தை உயர்த்திக்கொள்ள பண மதிப்பிழப்பு நடவடிக்கை பெரிதும் துணைநின்றது என்றும் கூறலாம். பேடிஎம் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடியே விளம்பர தூதுவராக செயல்பட்டார். அச்சமயத்தில் இந்தியாவின் வர்த்தகத்தில் பெரும்பங்கினை இணைய வர்த்தகம் ஆக்கிரமித்திருந்தது. இதுவும் பெரும்பாலானோரிடம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சரியாக 6 மாதங்களுக்கு பின் 2017-2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த அறிவிப்பானது வெளிவந்தது. அதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபியில் கணிக்கப்பட்டதைவிட பெரும் சரிவை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.

2015-2016ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டான ஜனவரி-மார்ச்சில் 7.6%ஆக ஜிடிபி இருந்தது. 2017-2018 நிதியாண்டின் முதல் காலாண்டான ஜனவரி-மார்ச்சில் ஜிடிபி 7.1%ஆக இருக்கும் என மத்திய புள்ளியியல் துறை கணித்திருந்தது. ஆனால், கணிக்கப்பட்டதை விட 1% அளவு ஜிடிபி சரிவை சந்தித்திருந்தது. திடீரென மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையாலேயே இது நிகழ்ந்திருந்தது. நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ஏற்பட்ட இந்த மோசமான வீழ்ச்சி காரணமாக உலகின் வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற சிறப்பை இந்தியா இழந்தது.

‘The Big Reverse’ புத்தகத்தில் மீரா சன்யால், “இந்த நடவடிக்கையினால், அமைப்புசாரா தொழில்துறையில் இருந்த கோடிக்கணக்கான இந்தியர்கள் நடுத்தெருவுக்கு வந்தார்கள், விவசாயிகளும் வர்த்தகர்களும் கடுமையான சிரமத்திற்கு உள்ளானார்கள், சிறிய, நடுத்தரத் தொழில்கள் நாசமாகிப் போயின’ என்கிறார்.

என்னதான் மூடிமறைத்து வந்தாலும், மொத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையுமே 1% கூட எந்தவகையிலும் பலனளிக்காமல் முற்றிலும் தோல்வியடைந்துவிட்ட ஒன்றே என்பதை பறைசாற்றும் விதமாக அமைந்தது 2017 ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை. அதன்படி புழக்கத்தில் இருந்த 15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்த 1000, 500 ரூபாய் நோட்டுகளில் 15.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் திரும்ப ரிசர்வ் வங்கியை வந்தடைந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது தடை செய்யப்பட்ட நோட்டுகளில் 99% ரிசர்வ் வங்கியை வந்தடைந்துவிட்டது. இதன்மூலம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை முற்றிலும் தோல்வியடைந்தது உறுதிசெய்யப்பட்டது.

அப்போது, பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சோரி, “பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்தபோது அரசு தரப்பில் கூறப்பட்ட காரணங்கள் என்ன ஆயிற்று? கருப்பு பணம் எங்கே? வெள்ளையாக மாறிவிட்டதா? தீவிரவாதம் என்ன ஆயிற்று? தீவிரவாதிகள் இன்னும் நாட்டிற்குள் வருகிறார்கள். கடைசியில் ஒன்றுமே நடக்கவில்லை. இது உங்களுடைய தைரியமான தற்கொலை நடவடிக்கைதான். தற்போது ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்கள் யாருடைய ஆலோசனைகளையும் உண்மைகளையும் கேட்க தயாராக இல்லை” என்று கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, “இந்தியாவிலேயே மிக மோசமான ஊழல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை தான்” என்றார்.

அப்போது காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி, “பண மதிப்பிழப்பு நடவடிக்கையாகட்டும் அல்லது ஜிஎஸ்டி வரி விதிப்பாகட்டும், யார் சொல்வதையும் கேட்காமல் மோடி அமல்படுத்திவிட்டார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பலனடைந்தது பாஜக மட்டும்தான். பண மதிப்பிழப்பால் ஏராளமான சிறு வர்த்தகம் அழிந்துவிட்டது. அவற்றின் சாம்பலில் இருந்துதான் பெரும் கம்பெனிகள் தலையெடுத்துள்ளன” என்றார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், “பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அரசு ஒருபோதும் ரிசர்வ் வங்கியிடம் முறையாகக் கலந்து ஆலோசிக்கவில்லை. இந்த நடவடிக்கை மூலம் நாடு சந்திக்கவிருக்கும் குறுகிய கால பிரச்னைகள் குறித்தும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான நீண்ட கால ஆலோசனை குறித்தும் மத்திய அரசிடம் வாய்வழித் தகவல்கள் தந்த போதும், அந்தக் கருத்துகள் ஏதும் ஈடேறவில்லை” என்றார்.

இந்திய மத்திய அரசின் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், “பணமதிப்பு நீக்கத்தின் மூலம் கருப்புப் பணம் ஒழியும் என்றார்கள். ஒழிந்துவிட்டதா? கள்ள நோட்டுகள் ஒழியும் என்றார்கள். புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியான ஒரு வாரத்துக்குள்ளேயே கள்ள நோட்டுகள் பிடிபட்டன. பயங்கரவாதச் செயல்கள் நின்றுவிடும் என்று கூறினார்கள். ஆனால், அதன் பின்னர்தான் காஷ்மீரில் பயங்கரவாதிகளுடைய ஊடுருவலும் பயங்கரவாதத் தாக்குதலும் அதிகரித்துள்ளன. ஆக, அரசு முன்வைத்த எந்த நோக்கமும் நிறைவேறவில்லை. முற்றிலும் தோல்வியடைந்துவிட்ட நடவடிக்கை அது. புழக்கத்தில் இருந்த 15 லட்சம் கோடி ரூபாயில் வெறும் 400 கோடி ரூபாய் மட்டுமே கள்ள நோட்டு இருந்தது. அதற்கு இவ்வளவு பெரிய நடவடிக்கையா? வீட்டில் கொசுத் தொல்லை இருப்பதற்காக வீட்டையே கொளுத்திவிடுவதா? ” என்றார்.

ஆனால், ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு பிறகும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி என பாஜக ஒப்புக்கொள்ளவில்லை. “பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் பெருமளவு திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதால் அவற்றைச் சுற்றியிருந்த ஒளிவு மறைவு அகன்றுள்ளது. அதுவரை கேட்பார் இல்லாமல் புழங்கிக் கொண்டிருந்த ஒவ்வொரு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கும் உரிமையாளர் என ஒருவர் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். அதுவே இந்த நடவடிக்கையின் வெற்றியாகும்” என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்போதும் பாஜக நிலைப்பாடு மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சென்ற மாதம் விசாரித்தது. அப்போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் விரிவான பிரமாண பாத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பண மதிப்பிழப்பு செய்ய செய்ய ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பியது. மேலும், பண மதிப்பிழப்பு செய்ய பின்பற்றிய வழிமுறைகள் சரியானதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சொன்னபடி உச்ச நீதிமன்றம் விசாரித்தால் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னால் உள்ள மர்மங்கள் வரும் ஆண்டுகளில் விலகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...