Archana 31 Not Out – மலையாளத் திரைப்படம். ஒரு மிடில் கிளாஸ் ஸ்கூல் டீச்சராக வேலை செய்யும் அர்ச்சனா, தன் திருமணத்திற்கு தயாராகி நிற்கும்போது, திடீரென திருமணம் தடைபடுகிறது. அதை அவள் எப்படி கையாள்கிறாள் என்பதே படத்தின் கதை.
அர்ச்சனாவாக ஐஷ்வர்யா மிளிர்கிறார். திருமண வயது நிரம்பிய,தன் குடும்ப பாரத்தை தாங்கி நிற்கும் மிடில் கிளாஸ் பெண்ணாக இயல்பாக நடித்திருக்கிறார். வரன்கள் அமையாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் சமயத்தில் வேலையும் இல்லாமல் போகிறது. இந்த சூழலில் பிரசாத் என்பவர் அர்ச்சனாவை மணமுடிக்க சம்மதிக்கிறார். அதுவரை சேர்த்து வைத்த சேமிப்பையெல்லாம் திருமண ஏற்பாடுகளுக்கு செலவிடுகிறார் அர்ச்சனா.
மகிழ்ச்சியாக, உற்சாக திருமண வேலைகள் வேகமாக நடந்துக் கொண்டிருக்கின்றன. அப்போது ஒரு செய்தி வருகிறது. நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை காதலியை கரம்பிடித்து விட்டான் என்று. அதிர்ச்சி.
எல்லா சொந்தங்களும் கூடியிருக்க, அதிர்ந்து போன அர்ச்சனா என்ன செய்வதென்று அறியாமல் திகைக்கிறாள். கதையும் திகைத்து நிற்கிறது. சுறுசுறுப்பாய் வேகமாய் போய்க் கொண்டிருந்த திரைக்கதை இந்தத் திருப்பத்துக்குப் பிறகு கூட்ஸ் வண்டி போல் இழுத்துக் கொண்டே போகிறது, இலக்கில்லாமல்.
எங்கிருந்தோ ஃபேண்டஸியெல்லாம் புகுத்தியிருக்கிறார்கள். காமெடியாக கதையை நகர்த்த வேண்டும் என்று காமெடி காட்சிகளை முயற்சித்திருக்கிறார்கள். எடுபடவில்லை என்பது படத்தின் டிராஜெடி.
வாழ்க்கையை வெறுத்து அர்ச்சனா இருக்கும்போது அவளிடம் படித்த மாணவியின் உறவினர் அர்ச்சனாவிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறார். சரி ஒரு முடிவு வந்துவிட்டது என்று நிம்மதியாக நிமிர்ந்து உட்கார்ந்தால் அந்த நிம்மதியை இயக்குநர் தரவில்லை.
அர்ச்சனா இன்னும் அந்த ஃபோன் காலிலேயே இருப்பது பார்ப்பவர்களுக்கு போர் அடிக்கிறது.
இறுதியாக அவர் எடுக்கும் முடிவு ஏற்கனவே சில படங்களில் நாம் பார்த்திருப்பதால், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
கிரிக்கெட் வீராங்கனையாக வர வேண்டியவர் என்று வெறும் வாயிலேயே வடை சுடுவதால், அதற்கும் அங்கு வேலையில்லாமல் போகிறது.
அர்ச்சனாவைத் தவிர நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் எதற்கும் முக்கியத்துவம் இல்லாததால் மனதில் நிற்கவில்லை.ஒரு பயணத்தில் நாம் வெறுமனே வேடிக்கை பார்க்கும் காட்சிகளாக எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல் நகர்வது, இப்படத்தின் பலவீனம்.
திரைக்கதையில் சற்று அதிக கவனம் செலுத்தியிருந்தால், அர்ச்சனாவைப் போலவே படமும் ஜொலித்திருக்கக் கூடும்.