No menu items!

நியூஸ் அப்டேட்: முதல்வர் விளக்கத்தை ஏற்க முடியாது – அண்ணாமலை

நியூஸ் அப்டேட்: முதல்வர் விளக்கத்தை ஏற்க முடியாது – அண்ணாமலை

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று மயிலாடுதுறை சென்றிருந்தார். அப்போது ஆளுநருக்கு  எதிர்ப்புத் தெரிவித்து சில அரசியல் கட்சியினர் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் வாகனம் மீது கற்கள் வீசப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று விளக்கமளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “ஆளுநர் பாதுகாப்பு விவகாரத்தில் திமுக அரசு எந்த சமரசமும் செய்துக்கொள்ளாது. ஆளுநர் மீது ஒரு தூசு கூட விழாமல் காவல்துறை தன் கடமையை செய்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஆளுநரின் பாதுகாப்பு விவகாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்லும் கருத்தை ஏற்க முடியாது” என்று கூறினார்.

ஆளுநர் மாளிகை முற்றுகை:  காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,“ தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு தமிழக அரசை முடக்குகிற ஆளுநரின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் வருகிற 28-ந்தேதி நடத்தப்படும். இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் மற்றும் பெருந்திரளானோர் பங்கேற்பார்கள்” என்று தெரிவித்தார்.

கோடநாடு கொலை: சசிகலாவிடம் நாளை விசாரணை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த கோடநாடு எஸ்டேட்டில் கடந்த, 2017 ஏப்ரல் 23-ந் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி, கிருஷ்ணதபா காயமடைந்தார். இந்த வழக்கில் சம்மந்தப்பட்டதாக கூறப்பட்ட 10 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் 2017 ஏப்ரல் 28-ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோடநாடு வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நாளை காலை 10 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையின் போது இந்த வழக்கு சம்மந்தபான முக்கிய கேள்விகள் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவசங்கர்பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்: உச்சநீதிமன்றம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் எழுந்த நிலையில், புகாரை விசாரித்த சிபிசிஐடி போலீசார் அவர் மீது 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்தனர். பிறகு அந்த வழக்கில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் சிவசங்கர் பாபா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ஜாமீன் மனுக்கள் கீழமை நீதிமன்றத்தால தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஜெயச்சந்திரன், பாஸ்போர்ட்டை தாக்கல் செய்யவும் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் கூடுதல் நிபந்தனை விதித்து சிவசங்கர்பாபாவுக்கு ஜாமீன் வழங்கினார். இதனால், விரைவில் சிறையிலிருந்து சிவசங்கர்பாபா வெளியே வரவுள்ளார்.

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் – பாக்யராஜ்  

‘பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கமலாலயத்திலுள்ள பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர் பேசிய பாக்யராஜ், ‘’எப்படி சென்றாலும் செயல்பட்டாலும் பிரதமர்மீது விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. விமர்சனங்களை எதிர்கொள்ள, பிரதமருக்கு நான் ஒரு சின்ன டிப்ஸ் தருகிறேன். விமர்சனம் பண்றவங்க எல்லாருமே 3 மாசம் குறைபிரசவத்துல பிறந்தவங்கனு நினைச்சுகோங்க. ஏன் 3-மாசம்னு சொல்றேன்னா… 4-வது மாசம்தான் ஒரு சிசுவுக்கு வாய் உருவாகும். 5-வது மாசம்தான் காது உருவாகும். வாயும் சரியா வரலை, காதும் சரியா கேட்காதவங்களைதான் 3-வது மாசமே பிறந்த `குறைபிரசவ’ குழந்தைனு சொல்றேன். இப்படியானவங்க நல்லதை  பேசமாட்டாங்க; நல்லது சொன்னா அதை காது கொடுத்தும் கேட்க மாட்டாங்க” என்று பேசினார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மனவளர்ச்சி பாதித்த குழந்தை வலி தெரியுமா? – பாக்யராஜ்க்கு தீபக்நாதன் கேள்வி

திரைப்பட இயக்குனர் பாக்யராஜ், ‘பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்’ என்று என்று விமர்சித்ததற்கு டிசம்பர் 3 இயக்க தலைவர் தீபக்நாதன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ‘பாக்யராஜ்க்கு மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலி, அக்குழந்தைகளின் பெற்றோர் வலி தெரியுமா? ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறித்து பேசி அரசியல் காண முயற்சிப்பதா?” என்று தீபக்நாதன் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...