No menu items!

பாக்யராஜ், பேரரசு – இயக்குநர்களின் சர்ச்சை பேச்சு

பாக்யராஜ், பேரரசு – இயக்குநர்களின் சர்ச்சை பேச்சு

இரண்டு இயக்குநர்களின் பேச்சு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ஒன்று திரைத் துறையில் மற்றொன்று திரைத் துறை தாண்டி அரசியல் பக்கமும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

சென்னையில் நடைப்பெற்ற இயக்குநர்கள் சங்கம், ஃபெப்சி மற்றும் அனைத்து சங்கங்கள் இணைந்த விழா ஒன்றில் இயக்குநர் பேரரசு பேசினார். அவரது பேச்சில் அனல் இருந்தது. மறைமுகமாக பீஸ்ட் இயக்குநர் நெல்சனை சாடியது திரையுலகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் பேசியது இதுதான்: “சமீப காலமாக தமிழ் சினிமா பின்னடைந்து விட்டது, என்று வரும் செய்திகளை கண்டிப்பாக நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். அனுபவம் இல்லாத இயக்குநர்கள் வைத்து படங்கள் எடுத்தால் இந்த நிலைமை தான் வரும். இரண்டு மூன்று படங்கள் எடுத்தால் உடனே பெரிய இயக்குநர்கள் என்று தூக்கிக்கொண்டாடுகிறார்கள். உதவி இயக்குநர்களாக  கூட வேலை செய்யாத பல அனுபவமே இல்லாத இயக்குநர் படம் எடுத்தால் இந்த நிலைமை தான்” என்று குறிப்பிட்டார்.

விஜய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட்.  எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லாததால் சமூகவலைத்தளங்களில் மீம்ஸ்சுகள் சரமாரியாக இன்று வரை குவிந்த வண்ணம் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் பீஸ்ட்டை வைத்து கே.ஜி.எஃப் படத்துடன் ஒப்பிட்டும் வருகின்றனர். பெரிய நடிகர் மட்டும் இருந்தால் போதாது அதனுடன் கதையும் இருக்க வேண்டும் என்று பலர் கருத்து கூறி வருகிறார். இந்தப் பின்னணியில் பேரரசுவின் பேச்சைப் பார்க்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள் திரையுலகத்தினர்.

”விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என இரண்டு படங்களை இயக்கினார் பேரரசு. அதன் பின் அவர் எடுத்த படங்கள் எதுவுமே ஓடவில்லை. அவரால் தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை புரிந்துகொள்ள முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இப்போது பீஸ்ட் திரைப்படமும் வெற்றிதான். தன்னால் விஜய்யை இயக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் பேரரசு பேசுகிறார்” என்று ஒரு உதவி இயக்குநர் குறிப்பிட்டார்.

ஆகச் சிறந்த படங்களை தான் இயக்கியது போல் பேரரசு பேசியிருப்பது திரையுலகத்தினரை கடுப்படித்திருக்கிறது.  

டுத்த சம்பவம்:

பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022″  நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகம் கமலாலயத்தில் நடைப்பெற்றது.  இந்நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட,  திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார். அப்போது அவர் பேசியதுதான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

அவர் பேச்சிலிருந்து:  “அண்ணாமலை இங்கிருந்து கர்நாடகா சென்று சிறப்பாக பணியாற்றியதாக சொன்னார்கள். நான் கர்நாடகா சென்றிருந்த போது அவரைப் பற்றி பெருமையாக பேசியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பாஜகவுக்கு சரியான நபரை தான் தலைவராக நியமித்துள்ளார்கள். பிரதமரின் திட்டங்கள் குறித்த இந்த புத்தகத்தை பெறுவதை நான் பாக்கியமாக கருதுகிறேன். நமது இந்திய பிரதமர் மோடி வெளிநாடு செல்கிறார் என தொடர்ந்து குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இத்தனை நாடுகளுக்கு ஓய்வில்லாமல் அவர் எப்படி செல்கிறார் ? அவர் உடலை எப்படி வைத்துக் கொள்கிறார் என வியந்திருக்கிறேன். இந்தியாவுக்கு இப்படி எனர்ஜியான பிரதமர் தான் தேவை.  இக்கட்டான சூழல் வரும் போது சமாளிப்பது மிகவும் கடினம் .

என்ன வேலை செய்தாலும் விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள். இப்படி குறை கூறுகிறவர்கள் தன் வாழ்நாளில் நல்லதையே பேசமாட்டார்கள், பிறர் சொல்வதையும் கேட்க மாட்டார்கள்.” என்று பேசினார் பாக்யராஜ்  

பாக்யராஜின் இந்தப் பேச்சுக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர்தான் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு இளையராஜா எழுதிய முன்னுரை சர்ச்சையானது, இப்போது பாக்யராஜ்.

“குறை பிரசவத்தில் பிறந்தவர்களை கிண்டலடித்துப் பேசியிருப்பது ஏற்றுக் கொள்ள இயலாதது. ஒருவரை விமர்சனம் செய்யக் கூடாது என்று கூறுவது என்னவிதமான மனநிலை?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஒரு ட்விட்டர் பதிவாளர்.

பாக்யராஜின் மகன் சாந்தனு பிரதமர் மோடியை விமர்சித்த ட்விட்டர் பதிவை எடுத்து பதிவிட்டிருக்கும் மற்றொரு பதிவாளார். ‘அப்படியென்றால் சாந்தனு குறை பிரசவமா?’ என்று கேட்டிருக்கிறார்.

சர்ச்சைப் பேசிய இந்த இரண்டு இயக்குநர்களும் பாஜக ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...